வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 08.04.2024
தலைப்பு செய்திகள்
- உயிர்த்த இறைவனின் ஆற்றல் ஒளியூட்டி ஆதரிக்கட்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ்.
- நமது இதயங்களை அவருக்காகத் திறக்கவேண்டும் என்று உறைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.
- தேசிய நற்கருணை மாநாட்டில் பங்கேற்க உள்ளார் கர்தினால் டோலென்டினோ.
- இந்தியாவின் கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய துணைஆயரை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
- வேப்பனப்பள்ளி பகுதியில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தோட்டப் பயிர்களை பராமரிக்கும் விவசாயிகள்
- துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் போன்ற நாடுகளில் நீடித்த நிலையான அமைதியும் நீதியும் கிடைக்கப்பெற தொடர்ந்து செபிப்போம் என்றும் பதற்றமான சூழலைக் குறைத்தல், பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்குதல், போன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு உயிர்த்த இறைவனின் ஆற்றல் ஒளியூட்டி ஆதரிக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்கா கால மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் மக்களுக்காக. செபிக்கக் கேட்டுக்கொண்டார். சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்கா சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் இறந்தவர்களை நினைவு கூர்ந்த திருத்தந்தை அவர்கள், இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், அவர்களது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்தார்.
ஏப்ரல் 6 சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு தினத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், விளையாட்டைப் பயிற்சி செய்வது என்பது திறந்த, ஆதரவான மற்றும் பாரபட்சமற்ற சமூகத்தை நோக்கி நம்மைப் பயிற்றுவிப்பது என்றும் கூறினார்.இத்தகைய சமூகத்தை நாம் அடைய வெற்றி அல்லது இலாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாத மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நமக்குத் தேவை என்றும், சமூக நட்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் விளையாட்டை ஊக்குவிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் போன்ற நாடுகளில் நீடித்த நிலையான அமைதியும் நீதியும் கிடைக்கப்பெற தொடர்ந்து செபிப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், பதற்றமான சூழலைக் குறைத்தல், பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்குதல், போன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு உயிர்த்த இறைவனின் ஆற்றல் ஒளியூட்டி ஆதரிக்கட்டும் என்றும், தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திறனைப் பெற இறைவன் ஆற்றல் வழங்குவாராக என்றும் கூறினார்.
- வாழ்வின் நிறைவை நமக்குத் தருபவர் இயேசுவே என்பதை உணர நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், நம்மைத் தேடும் இயேசுவை நாமும் தேட வேண்டும், அவரைச் சந்திந்த நம்மை அனுமதிக்கவேண்டும், நமது இதயங்களை அவருக்காகத் திறக்கவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பாஸ்கா கால மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று கொண்டாடப்படும் இறை இரக்க ஞாயிறு பற்றியும் எடுத்துரைத்தார்.
வாழ்வைப்பெறுதல் என்றால் என்ன என்ற கேள்வியுடன் தனது மூவேளை செப உரையைத் தொடங்கிய திருத்தந்தை அவர்கள், உண்ணுதல், குடித்தல், பொழுதுபோக்குதல், பணம் மற்றும் பொருள்களைக் குவித்தல், புதிய மற்றும் உறுதியான உணர்வுகளைக் கொண்டிருத்தல் போன்ற பல வழிகளில் பலர் வாழ்க்கையை வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.
முதலில் இனிமையாகத் தோன்றும் இந்த பாதைகள் இதயத்திற்கு மகிழ்வைத் தராது என்றும், இப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்போது அன்பு, துன்பம், மரணம் போன்றவற்றின் தவிர்க்க முடியாத அனுபவங்கள் பதிலளிக்கப்படாத வகையிலும் அனைவரையும் ஒன்றிணைக்கும் நமது கனவுகள் நிறைவேறப்படாததாகவும் இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு இறந்த பின் வீடுகளில் பயந்து முடங்கிக் கிடந்த சீடர்களைக் காண வந்த இயேசு வலி மற்றும் துன்பத்தின் அடையாளமாக இருந்த தனது காயங்களைக் காட்டுகின்றார் அவைகள் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழிகளாக மாறின என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தோல்வியைத் தரும் மரணம் மற்றும் பாவத்தை வென்று, வாழ்வைக் கொண்டு வந்தவர் இயேசு என்றும், இதனை சீடர்கள் அவரது காயங்களைத் தங்களதுக் கைகளால் தொட்டு உணர்ந்து கொண்டனர் என்றும் கூறினார்.
உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள், தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்கின்றனர், மகிழ்ச்சி அன்பு மற்றும் நம்பிக்கையால் நிரப்பப்பட்டவர்களாய் மாறுகின்றனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நம்பிக்கை நம்மிடம் உள்ளதா? நமது நம்பிக்கை எப்படி இருக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்போம் என்றும் கூறினார்.
- போர்த்துக்கல்லில் நடைபெற இருக்கும் ஐந்தாவது தேசிய நற்கருணை மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பங்கேற்க கர்தினால் José Tolentino de Mendonça அவர்களையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கைக்கான மதிப்பீட்டாளராக பேரருள்திரு Daniele Libanori அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 6 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி உரோம் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இயேசு சபை அருள்பணியாளரான பேரருள்திரு Daniele Libanori அவர்களை அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கைக்கான மதிப்பீட்டாளராக நியமித்துள்ள திருத்தந்தை அவர்கள், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான திருப்பீடத்துறையின் தலைவரான கர்தினால் José Tolentino de Mendonça அவர்களை நற்கருணை மாநட்டில் தனது பிரதிநிதியாகப் பங்கேற்கத் தேர்ந்தெடுத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 2 வரை போர்த்துக்கலில் உள்ள Braga வில் ஐந்தாவது தேசிய நற்கருணை மாநாடானது நடைபெற உள்ளது.Apostolic Penitentiary பேராயத்தின் தலைவராக கர்தினால் மௌரோ பியாசென்சா (Mauro Piacenza) அவர்கள் இதுவரை பணியாற்றி வந்த நிலையில் உரோம் மறைமாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis அவர்களை Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி பேராயத்தின் தலைவராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
- கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருள்பணி சிமியாவோ பெர்னாண்டஸ் (Simiao Purificaçao Fernandes) அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.ஏப்ரல் 06 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் தூய பத்தாம் பயஸ் மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குனரான அருள்பணி சிமியாவோ பெர்னாண்டஸ் (Simiao Purificaçao Fernandes) அவர்கள் புதிய துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அருள்பணி சிமியாவோ அவர்கள் கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தில் உள்ள சந்தோரில் 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று பிறந்தார். இவர் ரக்கோலில் உள்ள குருத்துவ கல்லூரியில் தத்துவஇயல் மற்றும் இறையியல் பயின்று, 1993 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்ட அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.ரக்கோலின் அடோனாவில் உள்ள தூய தாமஸ் பங்கின் உதவிப் பங்குத்தந்தையாக 1993-1996 வரையிலும், தலேகாவோவில் உள்ள தூய மிக்கேல் பங்குத்தளத்தில் உதவிப் பங்குத்தந்தையாக 1996-1998 வரையிலும் பணியாற்றியவர்.
உரோமையில் உள்ள திருப்பீட விவிலிய பல்கலைக்கழக்தில் முதுக்கலைப் பட்டமும், புனே ஞானதீப வித்தியா பீடத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.2005 முதல் 2013 வரை ரக்கோலில் உள்ள குருத்துவ கல்லூரியில் விவிலிய பேராசிரியர், 2018 முதல் கோவா மற்றும் தமாவோ உயர்மறைமாவட்டத்தின் தூய பத்தாம் பயஸ் மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குனர், 2023 முதல் அருள்பணியாளர் உருவாக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், கூட்டொருங்கியக்கத்திற்கான மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர், என பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வேப்பனப்பள்ளி பகுதியில் நிலவும் வறட்சியால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தோட்டப் பயிர்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றாமல் இருந்தது.குறிப்பாக தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் பெய்த மழையால் மார்க்கண்டேயன் நதி, குப்தா ஆறு மற்றும் இதன் நீர் ஆதாரத்தை அடிப்படையாக கொண்ட ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.
இதனால், இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை நிலவியது. இந்நிலையில், கடந்தாண்டு (2023) தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.இதையடுத்து, இப்பகுதி நீர் நிலைகள் வறண்டன. தற்போது, கோடை வெயில் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில் நீர் ஆதாரங்களில் நீரின்றி வறட்சி நிலவி வருகிறது.கடந்த 3 ஆண்டாக மானாவாரி பாசன நீர் தேவையும் பூர்த்தியான நிலையில் பல விவசாயிகள் தோட்டப் பயிர்களை அதிக அளவில் நடவு செய்துள்ளனர். தற்போதைய வறட்சியால் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட செடிகள் காய்ந்து சருகாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேப்பனப் பள்ளி பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: எங்கள் பகுதியில் கட்ந்த 3 ஆண்டுகளாக பருவ மழை கை கொடுத்தது. இதனால், இறவை மற்றும் மானாவாரி விவசாயத்துக்கு நீர் தேவை பூர்த்தியானது. கடந்தாண்டு, பருவ மழை பொய்த்தது. இதனால், தற்போது வறட்சி நிலவி வருகிறது.கடந்த சில ஆண்டுகளில் நடவு செய்யப்பட்ட தோட்டப் பயிர்களான மா உள்ளிட்ட பலவகை பழச்செடிகள் மற்றும் மரங்களை காக்க நீர் ஆதாரம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளிலிருந்து தண்ணீர் ரூ.800 முதல் ரூ.1,500 வரை விலை கொடுத்து வாங்கி டிராக்டரில் கொண்டு வந்து ஊற்றி பராமரித்து வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.