குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கான ஆண்டு தியானம் | Veritas Tamil
திருவனந்தபுரம் SPARC தியான இல்லத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தியானத்தை இயேசு சபை அருள்பணியாளர் ஜெர்ரி வழிநடத்தினார்.
தியானத்தின் போது இயேசுவின் பாடுகளைப் பற்றியும் அவருடைய இரத்தத்தின் தியாகத்தைப் பற்றியும் தியானித்த போது குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளர்களால் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குழித்துறை மறைமாவட்டத்திற்கு சொந்தமான புனித சவேரியார் கத்தோலிக்க பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையும் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தின் யூபிலி நினைவு மருத்துவமனையும் இணைந்து குருதிக்கொடை முகாம் 23 ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. "உங்களுக்காகவும் அனைவருக்காகவும் சிந்தப்படும் என் இரத்தம்" என்ற ஆண்டவர் இயேசுவின் அருள்வாக்கின்படி இந்த இரத்ததான முகாம் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் கூறும்போது தியானத்தின் போதே தியாகம் என்ற கருப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றதாகவும் பிற மறைமாவட்டங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமான நிகழ்வாக விளங்கும் என்றும் குறிப்பிட்டார். இரண்டு குழுக்களாக நடைபெறும் இந்த தியானத்தில் முதல் குழுவில் 52 அருள்பணியாளர்கள் பங்கேற்றனர். ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் உட்பட பல அருள்பணியாளர்கள் இந்தக் குருதிக் கொடையில் பங்கேற்றனர்.
தியானத்தை வழிநடத்திய அருள்பணியாளர் ஜெர்ரி அவர்கள் சிலுவை பாகுப்பாய்வைப் பற்றி பேசுகின்ற பொழுது இயேசுவின் பாடுகள் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வைக் கொடுத்தது.The Pain of one is the gain to another என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும், ஆண்டவர் இயேசு தனது உடலையும் இரத்தத்தையும் நமக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் அளித்திருக்கிறார். இது என் உடல் இது என் இரத்தம் இது உங்களுக்காக சிந்தப்படும் என்று ஆண்டவர் இயேசு சொன்னது போல நாமும் பிறருக்காக நமது இரத்தத்தை அளிக்க வேண்டும்.
குருதியை கொடையாக கொடுக்க வேண்டும். அதன் வழியாக பிறர் நம்மால் வாழ்வார்கள். இது இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற இலவசக் கொடை. அதை பிறர் வாழ்வு பெற அளிக்க வேண்டும். அதுதான் உண்மையான தியாகமாக இருக்க முடியும் என்று கூறி குருதிக்கொடையின் முக்கியத்துவத்தை "Eucharistic Donation" என்ற கருத்தில் வலியுறுத்தினார்கள். ஆண்டவர் இயேசுவை நம்மிலே மீள் உருவாக்கம் செய்து அவரை நம் வாழ்விலே பிரதிபலிக்க வேண்டும் அவருடைய போதனைகளை வாழ்வாக்க வேண்டும் என்றும் கூறினார்.
இது குறித்து ஆயர் கூறும்போது தியானத்தின் போதே தியாகம் என்ற கருப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றதாகவும் பிற மறைமாவட்டங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமான நிகழ்வாக விளங்கும் என்றும் குறிப்பிட்டார்.
அந்த இரத்த தானம் குறித்து அருட்தந்தை ஆரோக்கிய ஜோஸ்கூறியது.
நான் இதுவரை குருதிக்கொடை அளித்ததே இல்லை. காரணம் எனக்கு ஊசி குத்துவது என்றால் அவ்வளவு பயம். மட்டுமில்லாமல் இரத்ததானம் செய்தால் உடலுக்கு ஏதாவது ஆகிவிடும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் அருள்தந்தை ஜெர்ரி அவர்களுடைய வாழ்க்கையை வார்த்தையை கேட்ட பிறகு பார்த்த பிறகு உடனடியாக குருதி கொடை அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் எழுந்தது. குருதி கொடை கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே மனதிற்கு இதமாக இருந்தது பிறருக்காக பிறர் வாழ்விற்காக எனது குருதி பயன்பட போகிறது என்று உண்மையிலேயே மன நிறைவு அடைந்தேன். இனி அடிக்கடி குருதிக்கொடை அளிக்க வேண்டும் என்கிற முடிவிற்கு வந்திருக்கிறேன்.
அந்த இரத்த தானம் குறித்து அருட்தந்தை மைக்கேல் அலோசியஸ் கூறியது.
இயேசு வாழ்ந்த காலத்தில் நோயுற்றோரை நலமாக்கும் பணியையும் வாழ்விழந்தோருக்கு வாழ்வளிக்கும் பணியையும் அதிகமாக செய்தார். இன்று இந்த குருதிக் கொடையிலே பங்கேற்ற பின் ஆண்டவர் இயேசுவினுடைய அப்பணியில் நானும் இணைந்த ஒரு மகிழ்வு, மனநிறைவு கிடைத்திருக்கிறது.