நானை விடுத்து நாமைத் தேடுவோம் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கைச் சூழலில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அன்புடனும், நட்புடனும் வாழ வேண்டும் என ஆசிக்கிறோம். நம்மிடையே உள்ள புரிதல் நம் அன்பை ஆழப்படுத்துவதாக இருக்க வேண்டும். புரிதல் என்ற சொல் அர்த்தம் பெறும்போது அங்கே பிரிதல் என்ற சொல்லுக்கு இடமில்லை. ஒருவர் மற்றவரிடத்தில் உண்மையான அன்போடு இருந்தால் மட்டுமே புரிதல் சாத்தியப்படும். இன்று உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழுமுதல் காரணம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத தன்மைதான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் அதனை நிவர்த்தி செய்ய நாம் முயற்சி எடுக்கிறோமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது? நம்மில் பெரும்பாலானோர் நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற வாக்குவாதத்தைதான் முன்வைக்கின்றோம். இவ்வாறு குடும்பத்தில் கணவன் மனைவியை, மனைவி கணவனை என்று ஒருவர் மற்றவரை குற்றப்படுத்தி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தோம் என்றால் அங்கு புரிதலுக்கு பதில் பிரிதல்தான் ஏற்படும். நம்மோடு வாழும் மற்றவர்களை புரிந்து கொள்ளவும், அவர்களை ஏற்றுக்கொள்ளவும் நம்மிடத்தில் தடையாயிருப்பது நான் என்ற அகந்தை ஒன்றுதான். அந்த அகந்தையை அழித்து ஆனந்த வாழ்வு வாழ்வோம். அண்ணல் அசிசி பிறர் உங்களை புரிந்து கொள்வதைவிட, பிறரை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எனவே நாமும் மற்றவர்களை புரிந்து கொள்ள முயல்வோம். அதுவே நம் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கும் என்பதை மனதில் இருத்தி புரிதல் வளர்த்து பிரிதல் தவிர்ப்போம்.
ஒரு வயதான முதியவர் ரயிலில் பயணம் செய்வதற்காக காத்துக் கொண்டிருந்தார். தான் செல்ல இருக்கும் ரயில் வர தாமதமான காரணத்தினால் அங்கேயே அமர்ந்து தன்னிடம் உள்ள செய்தித்தாளை விரித்து படிக்க ஆரம்பித்தார். முதல் பக்கம், இரண்டாம் பக்கம் என அனைத்தையும் படித்துவிட்டு செய்தித்தாளின் இறுதிப்பக்கங்களையும் படித்துக் கொண்டிருந்தார். சற்று அருகே இரண்டு இளைஞர்கள் அந்த முதியவரை உற்றுநோக்கிக் கொண்டு தங்களுக்குள்ளாக இவ்வாறே பேசிக் கொண்டிருந்தனர். ஒருவன், ஏன்டா இந்த ஆளுக்கு இவ்வளவு வயசு ஆயிருச்சு, இந்த செய்தித்தாள்ல உள்ள ஒரு படம் ரொம்ப கிளாமரா இருக்குன்னு அதையே எவ்வளவு நேரம் படிக்கிறாரு பாரு. அதற்கு மற்றவன் அவன் சொன்னதை ஆமோதித்து பேசினான். இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கவனித்த முதியவர் அவர்களை கூப்பிட்டு தம்பி இந்த பொண்ணு என்னுடைய பேத்தி, விளையாட்ல கின்னஸ் சாதனை படைச்சிருக்கா, அந்த செய்தியைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் எனக்கு கண்பார்வையில் கொஞ்சம் பிரச்சனை. அதனால்தான் நீண்ட நேரமாக இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாராம். நாமும் மற்றவர்களை புரிந்து கொள்ளாமல் அவர்களைப்பற்றி தேவையில்லாத விமர்சனங்களை வீசுவதை தவிர்த்து வாழ்வோம். அதுவே நல்ல புரிதலை நம்மிடத்தில் வளர்க்கும் என்பதை மனதில் இருத்துவோம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
