இயற்கை இல்லையேல் இன்பமேது? | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

இறைவன் இகத்துக்கு தந்த இணையற்ற கொடை இயற்கை. இயற்கையில்லையேல் நாம் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? நிச்சயம் சாத்தியம் இல்லை. உலகத்திலுள்ள ஒவ்வொரு உயிரினமும் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள் எண்ணிலடங்கா. நம்மில் உள்ள அனைத்து பாகுபாடுகளையும் களைந்து, நாம் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது, என்னைப்போல் பொறுமையாய் இரு என்று நிலம் நமக்கு கற்றுத்தருகிறது. நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழிகிறது. மழை நீர் மண்ணை செழிப்படையச் செய்கிறது. கழிவுகளை சுத்தம் செய்கிறது. செடிகள் உயிர் பெறச் செய்கிறது. காற்று, மனிதனின் மூச்சுக்கும் பிராணவாயுவைத் தந்து பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்படி வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தரும் ஒவ்வொன்றும் நமக்கு ஆசான்தானே. அப்படிப்பட்ட ஆசான்களை நமது சுயநலத்திற்காக மாசுபடுத்திக்கொண்டுதானே இருக்கிறோம்? ஆண்டவனின் விந்தையெண்ணி இறைபுகழ்பாடுவது நமது கடமையெனில் இந்த இயற்கைச் சூழலை பாதுகாப்பதும் நமது தலையாய கடமை என்பதை உணர்வோம்.


நமக்கு எண்ணற்ற பாடங்களை கற்றுத்தரும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ முயற்சி எடுக்க வேண்டும். நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றபோது நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால் எப்போது இயற்கையைவிட்டு விலகிச் செல்கின்றோமோ அப்போதே நமது உடல் பலவீனமாகின்றது. இயற்கையோடு இணைந்த வாழ்வு நம் முன்னோர்கள் வாழ்ந்ததால்தான் பல வருடங்கள் அவர்களால் ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களாகிய நம்மைத்தவிர மற்ற அனைத்துமே ஆரோக்கியமாக இருக்கின்றன. அவைகள் அனைத்தும் இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் அவைகளின் ஆரோக்கியத்திற்கு காரணம் என்பதை உணர்வோம். புனித பிரான்சிஸ் அசிசி இயற்கையை தனது சகோதரனாக, சகோதரிகளாக பாவித்தார் என்றால் இயற்கையின்மீது அவருக்குள்ள தாகம் எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? நாமும் இயற்கைச் சூழலிலே இறைவனைக்கண்டு மாசுக்கள் மத்தியினின்று அதனை காப்போம். 

எழுத்து 

அருட்சகோதரி ஜான்சி FBS

Daily Program

Livesteam thumbnail