பாதை மாறினால் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.11.2024

பாதை மாறினால்.........

மண்ணை பிசைந்து மனிதனை படைத்தீர்
மாசு அடைந்து ஓடி ஒளிந்தோம்

கடலை பிளந்து பாதை தந்தீர்
வல்லமை மறந்து முணுமுணுத்தோம்

பாறை கடைந்து கட்டளை தந்தீர்
பாதை மறந்து வேறிடம் போனோம்

நீரால் நிறைத்து பெட்டகத்தால் மறைத்தீர்
நீதி தவறி வாழ்வை தொலைத்தோம்

தீர்க்கதரிசிகள் மூலம் திருந்த உரைத்தீர்
திருந்த மறுத்து பாவம் செய்தோம்

மண்ணில் இறங்கி மனிதனாக உதித்தீர்
கண்டும் காணாமல் சோம்பித் திரிந்தோம்

பாவம் வெறுத்து புதுவாழ்வு தந்தீர்
பாவத்தில் உழன்று சிந்திக்க தவறினோம்

புதுமைகள் செய்து வல்லமை படைத்தீர்
புதிய எண்ணங்களை ஏற்க மறுத்தோம்

ஆசீர் அளித்து அன்பால் காத்தீர்
ஆண்டவன் மேல் குற்றம் சுமத்தினோம்

சீடராக ஏற்று ஞானம் அளித்தீர்
சீரான வாழ்வில் பாவம் சுமந்தோம்

சிலுவையில் மரித்து எம்மை மீட்டீர்
சிந்திய ரத்தத்தை உணர மறந்தோம்

உயிர்த்து எழுந்து விண்ணகம் சென்றீர்
உலக நாட்டங்களில் மயங்கி கிடந்தோம்

ஊக்கம் அளிக்க ஆவி அளித்தீர்
ஊனியல் விருப்பங்களை முதன்மை ஆக்கினோம்

ஐயோ ! 
என்று நம்நிலை மாற்றுவோம் !

சிந்திப்போம், *சிறப்படைவோம்.*

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் நன்னெறியும் நற்பண்புகளும் நற்சிந்தனைகளும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா. 

மரியே வாழ்க

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி