நாம் ஆயனில்லா ஆடுகள் அல்ல!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 4ஆம் வாரம் –  சனி

எபிரேயர் 13: 15-17, 20-21
மாற்கு  6: 30-34

 
நாம் ஆயனில்லா ஆடுகள் அல்ல!

முதல் வாசகம்.

இன்றைய இரு வாசகங்களிலும் ஓர் ஆயரின் உருவகம் நிழலாடுகிறது.   இன்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் இறுதி பகுதியை வாசிக்கிறோம். இக்கடிதத்தின் ஆசிரியர், இறைமக்கள் ஒருவரையொருவர் அன்புகூர்ந்து கவனித்துக் கொள்ளவும், சமூகத்தில் உள்ள தலைவர்களுக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என வருந்திக்கேட்டுக் கொண்டதோடு, இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக என்றும்,   இயேசுவின் பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நமது  உதடுகள் செலுத்தும் காணிக்கையே சிறந்தப் புகழ்ச்சிப் பலியாக உள்ளது என்றும் அறிவுறுத்துகிறார்.
மேலும், இயேசு ஏற்படுத்திய  என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரும், தலைமை குருவுமான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பிய கடவுள்  அமைதியை அருள்பவர் என்கிறார்.  நிறைவாக, கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென் என்ற மன்றாட்டோடு இந்த கடிதத்தை ஆசிரியர் முடிவு  செய்கிறார்.

நற்செய்தி.

சில நாள்களுக்கு முன் இயேசு திருத்தூதர்களை இருவர்  இருவராக நற்செய்திப் பணிக்கு அனிப்பினார் அல்லவா? அவர்கள் பணி முடித்து  பெற்ற அனுபவத்தோடு இயேசுவிடம் திரும்பினர். திரும்பியதும், உற்சாகத்தோடு அறிக்கை சமர்ப்பித்தார்கள். அவர்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் இயேசுவிடம் தெரிவித்தார்கள். சோர்வுற்றிருந்த அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்று அறிவுறுத்தினார். அவரும் உடன் செல்கிறார்.
மக்களோ அவர்கள் இயேசுவையும்  திருத்தூதர்களையும்  அடையளம் கண்டுகொண்டு  எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர் என்று மாற்கு குறிப்பிடுகின்றார்.
அங்குக் கூடிய மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் இயேசு என்று மாற்கு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியில், மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் இயேசு என்று வாசித்தோம். 'ஆயன்' என்னும் விவிலிய உருவகம் நமக்கு நன்கு அறிமுகமான ஒன்று. இறைவனை ஆயராகக் காணும் மனப்போக்கு இஸ்ரயேல் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்று. குறிப்பாக, தாவீது அரசர் இறைவனை ஓர் ஆயராக அனுபவித்தவர். அந்த இறை அனுபவத்தின் வெளிப்பாடுதான் அவர் இயற்றிய 'ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை' என்னும் 23ஆம் திருப்பாடல்.    
நம்மில் பெரும்பாலோருக்கு, நம்மை அன்புடன் பராமரித்த முதல் "ஆயர்கள" நமது பெற்றோர்கள்.  பெற்றோர்களைப் போலவே,  கடவுளின் மக்களை மேய்க்கும் பணிக்கு,  திருஅவையில் அனைத்து அருள்பணியாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.  எனவேதான்,  அவர்கள் தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல், இறைமக்களே தங்கள் குடும்பம் எனும் அர்ப்பணிப்பை ஏற்றுள்ளனர். ஒவ்வொரு அருள்பணியாளரும் தன் பங்கில் உள்ள மந்தைக்காக உயிர்கொடுக்கும் முதல் தியாகி ஆவார். 
இயேசு  கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். என்வேதான் இயேசு திருஅவையில் மக்களைப் பாதுகாக்க ஆயர்களைத் தந்துள்ளார். நாம் ஆயனில்லா ஆடுகள் அல்ல. 
இயேசு, ஓய்வெடுக்க வந்த இடத்திலும் மக்களின் நலனுக்கே முதலிடம் தந்தார். ஆகவே, இயேசுவைப் போன்று நம்மைச் சுற்றி இருபவர்களிடம் பரிவோடும் கரிசனையோடும் நடந்துகொண்டால் நாமும் ‘ஆயர்கள்’தான். 

இறைவேண்டல்.

என் ஆயனாகிய ஆண்டவரே, மற்றவர்களுக்குச் சேவை செய்ய, உமது அழைப்பைப் புறக்கணிக்காமல்,  உமது அக்கறையையும் இரக்கத்தையும் செயலில் வெளிப்படுத்தும்  பணியாளனாக விளங்க என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.  
   

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452