அஞ்சும் சீடர்களோ புதிய எருசலேமை கண்டடையார்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 4ஆம் வாரம் – வியாழன்

எபிரேயர் 12: 18-19, 21-24
மாற்கு    6: 7-13


அஞ்சும் சீடர்களோ புதிய எருசலேமை கண்டடையார்!

முதல் வாசகம்.

எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் ஆசிரியர், தனது சக யூத கிறிஸ்தவர்களோடு உரையாற்றுகையில், அவர் மீண்டும் பழைய உடன்படிக்கை நிகழ்வுகளையும்,  அவை  புதிய உடன்படிக்கையுடன் வேறுபட்டதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.  
பழைய ஏற்பாட்டடில் கடவுள் உறவு:
எகிப்திலிருந்து, கடவுள் மீட்டு வந்த மக்கள் கடவுளின் தூய மலையான சீனாய் மலையில், மோசே கடவுளுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் கடவுளின் முன்னிலையில் இருக்க அஞ்சினார்கள்.  மேகங்களிலும் நெருப்பிலும் கடவுள் சட்டத்தைக் கொடுத்தது அவர்களுக்கு மிகவும் அச்சத்துக்குரியதாக இருந்தது.   
புதிய ஏற்பாட்டடில் கடவுள் உறவு:
புதிய ஏற்பாட்டில்  அழைக்கப்படோரின் அனுபவம் வேறுபட்டது. மண்ணகத்தில், கடவுளின் விண்ணகமாக விளங்கிய, புதிய எருசலேமின் தளமான சீயோன் மலையில் இருக்க அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.  திருமலையாம் சீயோன் மலைமீது ஆண்டவரின் நகர் உள்ளதால்  அது எந்நாளும் நிலைத்திருக்கும் என்று மக்கள் நம்பினார்கள்.
புதய ஏற்பாட்டில்   இயேசு கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு புதிய உறவை ஏற்படுத்தினார்.  இது சட்டங்கள் மற்றும் அச்சங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உறவு அல்ல.   மாறாக கடவுளின் அன்பு மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், அதிகாரத்துடன் மறைபணியற்ற செல்லுமாறு பன்னிரண்டு பன்னிருவரையும் இருவர் இருவராக சில நிபந்தனைகளுடன் இயேசு அனுப்புகிறார்.  ஆனால் பயணத்தில் அவர்களுடன் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்கிறார். ஏன்?  பயணத்தைத் தொடங்கும் பெரும்பாலான மக்கள் முன்கூட்டியே தயாராகி, தங்களுக்குத் தேவையானதைக் எடுத்துகொள்வார்கள்.  ஆனால், இயேசுவின் அறிவுரைகள் அடிப்படைத் தேவைகளுக்காக  கடவுளைச் சார்ந்திருப்பதற்கான பாடமாக உள்ளது.   
அடுத்து, அவர்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கலாம். தொடர்ந்து அவர்களை மக்கள்   ஏற்றுக்கொள்ளாமலோ அவர்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.
  
இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் நகராகக் கருதப்பட்ட புதிய  எருசலேம்  குறித்து வாசித்தோம். விண்ணகமே நமது புதிய எருசலேம். அதுவே நமது எதிர்நோக்கு. ஆனால், அந்த விண்ணகத்திற்குள் நுழைய அடிப்படைத்தேவை மனமாற்றம். மக்களிடையே இத்தகைய மனமாற்றத்தை ஏற்படுத்த நற்செய்தி விதைக்கப்பட வேண்டும். 
இயேசு, இந்த நற்செய்தியை விதைக்கும் பணிக்கு தம் பன்னிரு சீடர்களை சில நிபந்தனைகளோடு அனுப்புகிறார். அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டால் மட்டுமே, நம்பிக்கை ஏற்படும், மனம்மாற்றமும் ஏற்படும் (உரோ 10: 17) என்று பவுல் அடிகளும் வலியுறுத்தியுள்ளார். பயணத்திற்கு அவர்கள் எவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது, எடுத்துகொள்ளலாம் என்ற பட்டியலையும் இயேசு தருகிறார். 
உணவு, பை, செப்புக் காசு முதலியவற்றை  எடுத்துக்கொண்டு போகக்கூடது.  மிதியடி  அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதுமானதாகும்.
இயேசுவின் அனுப்புதலை மனதார ஏற்கிறார்கள் சீடர்கள். அவர்கள்  குறைவுபட்டுக் கொள்ளவில்லை, முணுமுணுக்கவில்லை.  பணி செய்கிறார்கள்  பேய்களை ஓட்டுகிறார்கள். நோயாளிகளைக் கவனிக்கிறார்கள். அவர்களுக்கு பல சோதனைக்ள ஏற்படவாய்ப்புண்டு. மக்கள் மத்தியில் பணி என்பது  எளியது அல்லை. அடி உதை கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் போகிறார்கள். 
இயேசு, அவர்களுக்கு பெரிய ஆன்மீக ஆற்றலையும் பொறுப்பையும் அளித்து அனுப்பினார். ஆகவே, அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அவரை நம்பும்படி இயேசு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார், இதனால் அவர்களும் இந்தப் புதிய ஆன்மீகப் பணியில் அவரை நம்பிதான் புறப்பட்டார்கள். 
“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ (யோவான 14:1) என்ற இயேசுவின் வார்த்தைகள் சீடர்களுக்குத் துணிவைத் தந்திருக்க வேண்டும். சொகுசாக வாழ நினைப்போர் ஒருநாளும் இயேசுவின் சீடராகப் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. 
நற்செய்தியை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பணியை கடவுள் நம்மிடம் ஒப்படைக்கும்போது, அவர் நம்மையும்  "வெறுங்கையுடன்" அனுப்புவார், அதனால் அவருடைய   வழிகாட்டுதலை மட்டுமே நாம் சார்ந்திருக்க கற்றுக்கொள்வோம்.  இயேசு சீடர்களைத் தனித்து அனுப்பவில்லை, மாறாக அவர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இங்கே, இயேசு அவர்களின் பாதுகாப்புக்கு அடிப்படை ஏற்பாட்டை செய்கிறார். தடி அவர்களை எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் பாதுகாக்க உதவியாக இருக்கும்.
மேலும்,  சீடர்களின் கையில்   பணமிருந்தால், அடுத்த வேளை உணவுக்கு கடவுளை நம்பியிருக்க வேண்டியதில்லை. பணம் அவர்களது ஆன்மீகத்திற்கு தடையாக இருக்கும்.   ‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.  

இறைவேண்டல்.

அன்பான இயேசுவே, உமது விருப்பப்படி என்னைப் பயன்படுத்தி, நான் வாழும் இடத்தில் உமது அரசைக்  கட்டியெழுப்ப உமது வழிகாட்டுதலில்  நம்பிக்கை கொள்ள எனக்கு உதவுவீராக. ஆமென். 
 
   
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452