சீடத்துவத்திற்கு அரணாக இருப்பவர் அதிதூதர்கள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 26-ம் வாரம்-செவ்வாய்23 செப்டம்பர் 2026

புனித மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள்-விழா

தானியேல் 7: 9-10, 13-14
யோவான் 1: 47-51


சீடத்துவத்திற்கு அரணாக இருப்பவர் அதிதூதர்கள்!

 
முதல் வாசகம்.


இன்றைய  முதல் வாசக்தில்  தானியேல் ஒரு காட்சியைக் காண்கிறார். அதில், “பழமையானவர்” என்று அழைக்கப்படும் கடவுள் அரியணையில் அமர்ந்திருப்பதாகவும்  அவருடைய ஆட்சி தூய்மையானதும், நீதியானதுமாக உள்ளது. மேலும், அங்கே ஆயிரக்கணக்கானோர் அவருக்குப் பணிவிடை செய்யும் வேளையில்  நியாயத்தீர்ப்பு நடைபெறுவதை தானியேல் விவரிக்கிறார்,

பின்னர், “மானிடமகன் போன்ற ஒருவர்” வானத்தின் மேகங்களோடு வருகிறார். அவர் பழமையானவரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். அவருக்கு ஆட்சி, மாட்சி மற்றும் அரசு கொடுக்கப்படுகிறது. எல்லா இனத்தாரும் நாட்டினரும் பல மொழி பேசுவோரும் அவருக்குச் சேவை செய்கின்றனர். அவருடைய ஆட்சி நிலையானது  என்று காட்சியில் தானியேல் அறிகிறார். 


நற்செய்தி.

  

இந்தப் பகுதியில் இயேசு நத்தனியேலைச் சந்திக்கிறார். நத்தனியேல் தம்மிடம் வருவதைக் கண்ட இயேசு, அவரை “கபடமில்லாத உண்மையான இஸ்ரவேலன்” என்று குறிப்பிடுகிறார்.
நத்தனியேல், இயேசு தன்னை எவ்வாறு அறிந்தார் என்று ஆச்சரியப்படுகிறார். அதற்கு இயேசு, பிலிப்பு அழைப்பதற்கு முன்பே தான் அவரைக் கண்டதாகக் கூறுகிறார். 


இதைக் கேட்ட நத்தனியேல், இயேசுவை “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.  பின்னர் இயேசு, நத்தனியேல் இதைவிடப் பெரிய காரியங்களைக் காணப்போகிறான் என்று கூறுவதோடு, “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்”  என்று இயேசு விவரிக்கிறார். 

சிந்தனைக்கு. 


திருஅவை, தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் நாள் கொண்டாடுகிறது. 

  
விண்ணகத்தில், வானதூதர்கள்  தூய ஆவிகளாகவும், தனித்துவமான மற்றும் நிலையான அடையாளங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.  இந்த மூன்று அதிதூதர்கள், தங்களுடைய விண்ணகப் பணிகளின் மூலம் இறைவனின் வல்லமை, உடனிருப்பு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் இறைவனின் திருவுளத்திற்கு முழுமையான கீழ்ப்படிதலுடன் செயல்பட்டு, ஆன்மாக்களின் நன்மைக்காக தங்கள் பணியை நிறைவேற்றுகின்றனர் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.


இவர்களைத் தனித்தனியாகப் பார்த்தால்;


‘மிக்கேல்’ என்பதன் பொருள் “இறைவனைப் போன்றவர் யார்?” என்பதாகும். இது ஒரு வினாவாக அமைந்த பெயர்; சாத்தானின் அகந்தைக்கு எதிராக இறைவனின் மாட்சியைப் பாதுகாக்கும் மாபெரும் பாதுகாவலராகிய இவர் விளங்குகிறார்.   இவர் லூசிபரைப் விண்ணிலிஉந்து வெளியேற்றினார் என்றும், இன்றும் திருஅவையை (நம்மை)  பாதுகாப்பவராக இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

‘கபிரியேல்’ என்பதன் பொருள் “இறைவனே என் வலிமை” என்பதாகும். அவர் இறை மறைபொருளை அறிவிக்கும் தூதராக இருக்கிறார். குறிப்பாக, இறைவனின் திருமகன் மனிதராகப் பிறக்கவிருந்த செய்தியை அருள்மிகப் பெற்ற கன்னி மரியாவுக்கு அறிவிக்க இறைவனால் அனுப்பப்பட்டார். மரியாவையும் செக்கரியாவையும் போல, இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டவர்களுக்கு இவர் வலிமையூட்டுகிறார் என்று அறிகிறோம்.


‘ரபேல்’  என்பதன் பொருள் “இறைவன் குணமாக்குகிறார்” என்பதாகும். தோபித்து நூலில், உடல் மற்றும் ஆன்மீக நலத்தை மீட்டெடுப்பதற்காக அனுப்பப்பட்ட வழிகாட்டியாகவும் குணப்படுத்துபவராகவும் அவர் விளங்குகிறார். நமது வாழ்க்கைப் பயணத்தில் இறைவன் நம்முடன் இருந்து, நமது உடலுக்கும் ஆன்மாவுக்கும் குணத்தையும் நலத்தையும் வழங்க விரும்புகிறார் என்பதை இவரது பணி வெளிப்படுத்துகிறது.


நற்செய்தியில் இயேசு கூறுவதைக் கூர்ந்து கவனித்தால்: “நான் உன்னை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று சொன்னதால் நீ நம்புகிறாயா? இதைவிடப் பெரிய காரியங்களைக் காண்பாய்“வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்   என்றார். இது தொடக்கநூல் 28:12-ல் குறிப்பிடப்படும் யாக்கோபின் கனவை நினைவூட்டுகிறது. அந்தக் கனவில், பூமியிலிருந்து வானத்தை எட்டும் ஒரு ஏணியையும், அதன்மேல் தேவதூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும் யாக்கோபு கண்டார்.

அந்த இறைவாக்கு காட்சியானது,  கிறிஸ்துவில் நிறைவேறியது.  கிறிஸ்துவே அந்த ஏணி.  அவர் மட்டுமே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான ஒரே இணைப்பாளர் . கபிரியேல் தூதர் அறிவித்த இயேசுவின் பிறிப்பு செய்தியுடன் இந்த மறையுண்மை தொடங்குகிறது. இயேசுவின் மண்ணுலக வாழ்க்கை முழுவதும் வானதூதர்களின் பணி தொடர்ந்தது. குறிப்பாக, பாலைநிலத்தில் இயேசு சோதிக்கப்பட்ட பிறகும், கெத்சமணி தோட்டத்தில் அவர் வேதனை அனுபவித்த நேரத்திலும், உயிர்த்தப் பின் கல்லறை வளாகத்திலும் வானதூதர்களின் பணி தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு அதிதூதருக்கும் ஒரு அடையாளம் தொடர்புடையதாக  இருக்கின்றது. திருஅவையில் இருக்கும் கலை மற்றும் உருவப்படங்கள் இதனை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, புனித மிக்கேல் அதிதூதர் உருவப்படங்கள் அவர் சாத்தானை எதிர்த்து போரிடுபவராகவும், கையில் தராசைத் தாங்கியவராக, நீதிதீர்ப்பை நமக்கு நினைவுபடுத்துபவராக இருக்கின்றன. 


புனித கபிரியேல் பெரும்பாலும் கையில் லீலி மலர்களைத் தாங்கியவராக அல்லது கையில் எக்காளம்   கொண்டிருப்பவராக அவரது உருவப்படங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.


புனித ரபாயேல் பெரும்பாலும் கையில் ஒரு கோலும் மீனும் கொண்டிருப்பவராக, அதாவது வழிகாட்டுபவராகவும், குணப்படுத்துபவராகவும் அவரது குணநலன்களை அவரது உருவப்படங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.


ஆகவே, இன்று நாம் இந்த வானதூதர்களின் படைக்கு தலைமை ஏற்கும் அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களின் பாதுகாவலை நாடி. இயேசுவின் உன்னத சீடர்களாக வாழ முற்படுவோம். 

இறைவேண்டல்


புனிதர்களான மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோரே, விண்ணகத்தை நோக்கிய எனது புனிதப் பயணத்தில்  என்னை பாதுகாத்து, வலிமைப்படுத்தி, குணப்படுத்துவீராக. ஆமென்.  

ஆர்.கே. சாமி

Tamil Survey Popup Image