ஒவ்வொரு நாளும் புதிய படைப்புகளாவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

5 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வெள்ளி
கொலோசையர் 1: 15-20
லூக்கா 5: 33-39
ஒவ்வொரு நாளும் புதிய படைப்புகளாவோம்!
முதல் வாசகம்.
மீட்பின் திட்டத்தில் இயேசுவின் பங்குதான் இன்றைய வாசகங்களின் மையமாக உள்ளது. கொலோசையருக்கு எழுதிய இத்திருமுகத்தின் இன்றைய வாசகப் பகுதி, படைப்பு மற்றும் மீட்பு இரண்டிலும் இயேசுவின் பங்கை வலியுறுத்துகிறது.
புனித பவுல் மனிதர்களிடையே இயேசுவின் மேலாதிக்கத்தையும், கடவுளாகிய அவரது தந்தையுடனான அவர் சமத்துவத்தையும் வெளிப்படுத்தி எழுதியுள்ளார். இயேசு, தனது மனித உருவில, நம்மால் என்றுமே காண முடியாத கடவுளின் பிரதிபலிப்பாகும். அவர் கூறுவதுபோல், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, நம்மால் காணக்கூடியவை, காண இயலாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர் என்ற இறையியல் உண்மையை வெளிப்படுத்துகிறார்.
அடுத்து, அவரது உடலாகிய திருஅவைக்கு இயேசுவே தலை என்பதோடு, அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன எனும் ஆழ்ந்த உண்மையைப் படிப்பிக்கிறார்.
நிறைவாக, தந்தையின் மீட்புத் திட்டத்தின் அச்சாரமாக ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். இந்தப் பகுதி நமது நம்பிக்கை அறிக்கையான விசுவாச பிரமாணத்தில் உள்ள சில கூற்றுகளுக்கும் அடிப்படையாகும். எனவே, இயேசுவின் உயிர்த்தெழுதல்தான் நமது மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் நிலைவாழ்வில், நாம் நம்பிக்கை வைக்க காரணமாக உள்ளதென்பதையும் இங்கே வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
"யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருக்கிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அவ்வாறே நோன்பு இருக்கிறார்கள், ஆனால் உங்களுடைய சீடர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள்?" ஏன் என்ற கேள்வியை இயேசுவிடம் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கேட்கிறார்கள்.
இக்கேள்விக்குத் தக்க பதில் அளிக்க இயேசு மூன்று உவமைகளைப் பயன்படுத்துகிறார்.
1. மணமகன் மற்றும் திருமண விருந்தினர்கள். அதில், "மணமகன் தங்களோடு இருக்கும்போது, திருமண விருந்தினரை நோன்பு இருக்கச் சொல்ல முடியுமா? மணமகன் விட்டுப் பிரியும் நாட்கள் வரும், அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்’ என்றார்.
2. பழையா ஆடை, புதிய ஆடை. "புதிய துணியிலிருந்து ஒரு துண்டைவெட்டி பழைய ஆடையில் யாரும் தைக்க மாட்டார்கள்; அப்படிச் செய்தால், புதியது கிழிந்துவிடும், அந்தத் துண்டு பொருந்தாது.
3. புதிய திராட்சரசமும் பழைய திராட்சை இரசமும்.
பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும், தோற்பைகளும் பாழாகும். மேலும், பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்தாகும் என்று கேள்வி கேட்டோருக்குப் பதிலளித்தார் இயேசு.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் இயேசு முன்வைத்த மணமகனின் உருவகம், மகிழ்ச்சிக்கும் வாழ்வுக்கும் மூலகாரணமான இயேசு இருக்கும்போது, மனந்திரும்புதலின் அடையாளமான நோன்பு அக்காலத்திற்குப் பொருத்தமானதல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவருடைய உடனிருப்பில், சீடர்கள் இருக்கும்போது, அது மகிழ்ச்சிக்குரிய காலம். அங்கே நோன்பு எதற்கு? இயேசுவின் இந்த விளக்கம் நோன்பிற்கு எதிரானது அல்ல, மாறாக நேரத்தையும் சூழலையும் புரிந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பதாகும்.
இயேசு கொண்டு வரும் புதிய வாழ்க்கையை பழையப் சமயக் கொள்கைகளோடு மேலோட்டமாக ஒட்ட முடியாது என்பதை ஆடை மற்றும் மதுத் தோல்களின் உருவகங்கள் வலியுறுத்துகின்றன. உண்மையான மாற்றத்திற்கு முற்றிலும் புதிய கட்டமைப்புகளும் உறுதியான மனப்பான்மையும் தேவை.
நமது முன்னோர்களும் புதிதாக மனமாறி திருஅவைக்குள் வந்தவர்களும், கிறிஸ்துவின் சீடர்களான பிறகு, (திருமுழுக்குப் பெற்ற பிறகு) பழைய தெய்வ (சிலை) வழிபாடுகளையும் பொருளற்ற சடங்குகளையும் பினபற்றுவது முறையாகாது.
திருமுழுக்கு என்பது புதுபிறப்பு. எனவே, புதிய வாழ்கைக முறையோடு பழைய வாழ்க்கை முறையைக் கலக்கக் கூடாது. அது பலனற்றுப்போகும். ஆம். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்தல் கூடாது. இரண்டு நம்பிக்கைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். திருமுழுக்கில் இயேசுவை ஆடையாக அணிந்துகொண்ட நாம் அதை பழைய பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளைக் கொண்டு கறைபடுத்தக்கூடாது.
இயேசு, வரி வசூலிப்பவரான லேவியை தனது சீடர்களில் ஒருவராக அழைத்தார், பின்னர் லேவி இயேசுவை மற்ற வரி வசூலிப்பவர்களுடனும் பாவிகளுடனும் தனது வீட்டில் உணவருந்த அழைத்தார். மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இதைக் கண்டதும், அவர்கள் இயேசுவை எதிர்த்தனர். பதிலளிக்கும் விதமாக, இயேசு இந்த உவமையைச் சொல்கிறார், அவர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைக்கவும், அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை அனுபவிக்கவும் அழைக்க வந்தார் என்பதை மேற்கண்ட இந்த உவமைகள் வாயிலாக எடுத்துரைக்கிறார்.
இந்த உவமையில் பேசப்படும் "புதிய திராட்சை இரசமானது" சிலுவையிலிருந்து ஊற்றப்பட்ட அருளைக் குறிப்பாதகப் பொருள் கொள்ளலாம். மேலும், கிறிஸ்துவில் ஒரு புதிய படைப்பாக, நம் இறைவனால் தினமும் மாற்றப்படுவதற்கு, தூய நற்கருணையின் புதிய திராட்சை இரசத்தை இயேசு உலக முடிவுவரை ஆண்டவர் வழங்கிக்கொண்டு இருக்கிறார். எனவே, நமக்கு பழையது தேவையில்லை. பழைய கொள்கைகளை, வாழ்க்கை முறைகளை விட்டொழிக்க வேண்டும்.
இயேசு, மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் ஒரு புதிய போதனையைக் கொண்டு வந்து, ஒரு புதிய அருளை அவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அதை நிராகரித்து, அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த பழைய வாழ்க்கையை விரும்பினர். நாம் இயேசுவின் புதிய அருளை ஏற்றுக்கொண்டவர்கள், நமது சிந்தனை, சொல், செயலில் கிறிஸ்து வெளிப்பட வேண்டும். நாம் நமது பழைய வாழ்கை முறையை, வழிபாட்டை கைவிட்டு புதியவர்களாக மாற தயாராகவும் விருப்பமாகவும் இருக்க வேண்டும்.
இது திருஅவைக்கும் பொருந்தும். திருஅவையும் உலகப்போக்கில் போகக்கூடாது. ஆடம்பரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். கிறஸ்தவ மதிப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க இறைமக்கள் முன்வர வேண்டும் என்பதை நினைவில் வைத்து செயல்படுவோம். மாற்றத்திற்குத் தேவையான தைரியத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இறைவேண்டல்.
அன்பான ஆண்டவரே, உமது மிகுதியான அருளால், உமது புதிய மற்றும் மாட்சிமிகு படைப்பாக நான் மாற, எனக்கு துணைபுரிவீராக. ஆமென்..
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
Daily Program
