உலகப் பற்று அல்ல, இறைப்பற்று நம்மை ஆட்கொள்ளட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

7 அக்டோபர் 2025
பொதுக்காலம் 27ஆம் வாரம் – செவ்வாய்
யோனா 1: 1-17
லூக்கா 10: 25-37
உலகப் பற்று அல்ல, இறைப்பற்று நம்மை ஆட்கொள்ளட்டும்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், யோனாவின் அறிவிப்பைக் கேட்டு , நினிவே மக்கள் தங்கள் வழக்கமான (மற்றும் பாவ) வழக்கங்களிலிருந்து விலகி, ஆண்டவருடைய இரக்கத்திற்காகக் காத்திருந்ததைக் கேள்விப்படுகிறோம்.
கடலிலும் கடல் உயிரினமான மீனின் வயிற்றிலும் யோனாவின் மூன்று நாள் அனுபவத்திற்குப் பிறகு, கடவுள் தனக்குக் கட்டளையிட்டதைச் செய்ய அவர் முடிவு செய்கிறார் - புறமத மற்றும் பாவமுள்ள நினிவே நகரத்திற்குச் சென்று மக்களின் பாவச் செயல்களுக்காக வரவுள்ள அழிவின் செய்தியை அறிவிக்கிறார். ஆங்கு அரசர் உட்பட யோனாவின் அறிவிப்பைக் கேள்விப்பட்ட மக்கள் பாரம்பரிய தவச் செயல்களான நோன்பு இருத்தல் சாக்கு உடை அணிந்து சாம்பலில் உட்காருதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால், கடவுள் அவர்களுக்கும் அவர்களின் நகரத்திற்கும் திட்டமிடப்பட்ட தண்டனையைக் கைவிடக்கூடும் என்று முடிவு செய்து, அனைத்து மக்களும் உண்ணாவிரதத்தையும் தவக்காலத்தையும் தொடங்குகிறார்கள்.
அக்காலக் கட்டத்தில், யோனா ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீயவழிகளையும், தாம் செய்துவரும் கொடும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும் என அறிவித்தார். நிறைவாக கடவுளின் செய்திக்குச் செவிசாய்த்த அவர்கள் கடவுளின் இரக்கத்தால் மீட்கப்பட்டார்கள்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு எருசலேம் அருகே உள்ள பெத்தானிய ஊரில் மரியா, மார்த்தாள் மற்றும் இலாசர் ஆகியோரின் இல்லத்திற்குப் போகிறார். இரு சகோதரிகளும் இயேசுவின் வருகைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். மார்த்தா, விருந்தினருக்கு உணவு தயாரிப்பதில் ஆழ்ந்திருந்தாள் இயேசுவைப் போன்ற ஒரு சிறந்த விருந்தினரை விருந்தோம்பல் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டினாள்.
மறுபுறம், மரியாளோ, பெரிய போதகரின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும் பொருட்டு, அவரது காலடியில் அமர்ந்து, உன்னிப்பாகக் கேட்கிறாள். அவ்வேளை மார்த்தா மரியாவின் செயல் குறித்துப் புலம்ப ஆரம்பித்தாள். “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.
மார்த்தாவின் பலம்பலுக்குப் பதிலாக, “நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
சிந்தனைக்கு.
நமது கிறிஸ்தவ வாழ்க்கையில், இயேசுவோடு இருப்பது - கேட்பது, கற்றுக்கொள்வது, அவருடைய வார்த்தையைப் பெறுவது – கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளமானது என்பதை ஏற்க நற்செய்தி நம்மைத் தூண்டுகிறது. அவரில் வேரூன்றாவிட்டால், நமது செயல்கள் கவலையாகவும், கவனச்சிதறலாகவும் மாறும்.
"தேவையானது ஒன்றே " என்று இயேசு மார்த்தாவுக்குக் கூறுகிறார். இதில் ‘ஒன்றே’ என்பது "குறைவாகச் செய்யுங்கள்" என்ற பொருளில் இயேசு கூறவில்லை, ஆனால் நமது முதல் முன்னுரிமை அவருடனான ஒன்றிப்புதான் என்பதை வலியுறுத்துகிறார். மரியா இயேசுவின் பாதத்தில் அமர்ந்து இயேசுவின் வார்த்தையைக் கேட்பதற்கு ஆர்வம் காட்டியதைப்போல் மார்த்தாவும் செய்திருக்க வேண்டும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
ஆனாலும், இயேசு மார்த்தாளைக் கடுமையாகக் கண்டிக்கவில்லை. மாறாக, அவளது அறியாமையை அன்புடன் தெளிவுப்படுத்துகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில், கடமைகள், பணிகள் முக்கியம் - ஆனால் அவை இறைவேண்டல், வார்த்தை, கிறிஸ்துவுடனான நெருக்கம் ஆகியவற்றில் வேரூன்றியிருக்க வேண்டும் என்பதை இன்று அறிய வருகிறோம்.
நமது சேவையிலோ அல்லது பணியிலோ, நமது ஈடுபாடு பதட்டமாக இருக்கக்கூடாது, கிறிஸ்துவுடனான தொடர்பைக் கொண்டிருப்பது இன்றியமையாதது. நாம் உலக காரியங்களில் முழுமூச்சாக இறங்கும்போது, இயேசு கடுமையாக அல்ல, மெதுவாகவே அழைக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம். அவர் நம்மைத் தட்டிக்கொடுப்பவர், திட்டித்தீர்ப்பவர் அல்ல.
முதல் வாசகத்தில், யோனா அழைப்பை ஏற்க மறுத்தாலும் கடவுள் அவரைத் தட்டிக்கொடுத்தார். யோனா தன் குற்றத்தை உணர்ந்து கடவுளின் அழைப்புக்குச் செவிசய்த்து, நினிவேவுக்கு மீட்பு கொணர்ந்தார். அவ்வாறே, விண்ணக வாழ்வை நோக்கிய நமது பயணத்தைத் தொடரும்போது, நமது செயல்களிலும், ஆண்டவரில் இணைந்திருப்பதிலும் முனைந்திருப்போம். எனெனில், ‘நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது ( யோவான் 15:5) என்கிறார் ஆண்டவர்.
இறைவேண்டல்.
அன்புள்ள ஆண்டவரே, உலகப் பற்றில் நான் மூழ்காமல், இறைப்பணி மற்றும் இறையரசு சார்ந்தவற்றில் நான் பற்றுறுதிக் கொண்டிருக்க என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
