இறைவேண்டலில் கடவுளைத் தொடும் வரை தொடு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் முதல் வாரம் – வியாழன்
எஸ்தர் 4: 17k-m, r-t
மத்தேயு 7: 7-12
இறைவேண்டலில் கடவுளைத் தொடும் வரை தொடு!
முதல் வாசகம்.
முன்னுரை
இன்றைய நமது வாசகம்மானது எஸ்தர் நூலின் ஒரு பகுதியிலிருந்து வருகிறது. இது பிரிந்த சகோதர சபைகள் ஏற்றுக்கொள்ளாத ஏழு இணை திருமறை நூல்களில் ஒன்று. எனவே இது கத்தோலிக்க திருவிவிலியத்தில் மட்டும் உள்ளது.
இன்றைய முதல் வாசகம் எஸ்தர் அரசியின் இறைவேண்டலில இருந்து எடுக்கப்பட்டது. அவள் ஒரு யூதப் பெண், யூதரல்லாத அரசனான தன் கணவரிடம் தன் யூத நம்பிக்கையின் மக்களுக்காகப் பரிந்து பேசப் போகிறாள். அவர் அரசரிடம் செல்வதற்கு முன்பாகச் செய்யும் இறைவேண்டதான் இன்றைய முதல் வாசகம். அவ்வாறு செய்வதன் மூலம் அவள் தன் உயிரையும் அனைத்து யூத மக்களின் உயிரையும் பணயம் வைக்கிறாள். எபிரேய மூதாதையர்களுக்கு அளித்த தெய்வீக வாக்குறுதிகளை நினைவில் கொள்ளும்படி கடவுளிடம் மன்றாடுகிறாள். இறுதியில் இறைவனின் அருளால் எதிரியின் படை தோற்க்கடிக்கப்பட்டு, இஸ்ரயேல் மக்கள் வெற்றி பெறுகிறார்கள். எஸ்தரின் மன்றட்டுக்குப் பலன் கிடைத்தது.
நற்செய்தி.
நற்செய்தியில், கடவுளிடம் மன்றாடுபவர்களுக்கு கடவுள் பதிலளிக்க விருப்பம் கொண்டுள்ளார் என்ற உண்மையை இயேசு உறுதிப்படுத்துகிறார். ‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்’ என்ற நமக்கு நன்கு அறிமுகமான வார்த்தைகளை நாம் கேட்கிறோம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கொண்டுள்ள அக்கறை, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பது மற்றும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பாதது ஆகியவற்றின் ஒப்புமையை இயேசு தொடர்ந்து பயன்படுத்துகிறார். மனித பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது இவ்வளவு அன்பைக் காட்ட முடிந்தால், நிபந்தனையற்ற அன்பான தந்தையான கடவுள், கடவுளின் குழந்தைகள் மீது, நம் மீது எவ்வளவு அதிகமாக அக்கறை காட்டுவார் என்பதை எடுத்துரைக்கிறார்.
நம்மில் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? என்ற கேள்வியை நம் சிந்தனைக்கு முன் வைப்பதோடு, பிறர் நமக்கு செய்யவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றை எல்லாம் நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்கிறார்.
சிந்தனைக்கு.
குடும்பத்தில் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது, பெற்றோர் சில சமயங்களில் குழந்தைகள் ஏதாவது கேட்கும் வரை காத்திருப்பார்கள். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். குழந்தைகளுக்கு என்ன தேவை என்பது பெற்றோருக்குத் தெரியும். தேவையறிந்து தக்க நேரத்தில் குழந்தைகளுக்குப் பணிவிடை செய்வர். குழந்தைகளுக்கு எதையும் விருப்பம்போல் திணிப்பது கிடையாது.
மேலும், அக்கறையுள்ள பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க விரும்புவார்கள். பிள்ளைகள் பெற்றோருடன் உறவில் இருக்கும் வரை அவர்களக்குப் பாதுகாப்பும் உண்டு. கடவுள் இன்னும் ஞானமானவர், அன்பான பெற்றோரைவிட பல மடங்கு நன்மை செய்பவர் என்கிறார் ஆண்டவர்.
ஆக, நாம் இறைவனிடம் நியாய தேவைகளுக்கு நம்பிக்கையோடு மன்றாடும்போது, அதனைப் பெற்றுக்கொள்கிறோம் என்பது நாம் அறிந்துகொள்ளக்கூடிய ஆழமான உண்மையாகும்.
இன்றைய நற்செய்தியில் வரும் "கேளுங்கள்", "தேடுங்கள்" மற்றும் "தட்டுங்கள்" என்ற வினைச் சொற்களை இயேசு பயன்படுத்துகிறார். கடவுள் நமது நியாமான மன்றாட்டுகளுக்குப் பதிலளிக்கிறார். அவர் காது கேளாதவர் அல்ல. ‘ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன’ என்று வாசிக்கிறோம் ( 1 பேதுரு 3:12). முதல் வாசகத்தில், ஒரு யூதப் பெண்ணாகிய எஸ்தர் அரசி, தம் மக்களுக்காகக் கடவுளிடம் மன்றாடினாள். இறைவனின் அருளால் எதிரியின் படை தோற்கடிக்கப்பட்டு, அவரது மக்கள் வெற்றி பெற்றார்கள் அல்லவா? அது எஸ்தர் அவரது இறைவேண்டலில் கொண்ட நம்பிக்கைக்குக் கிடைந்த பலன் ஆகும்.
நாம் இறைவேண்டலின் போது, இதயத்திலிருந்து, நம்பிக்கையோடு கடவுளிடம் மன்றாடும்போது, அவர் ஏற்க மறுப்பதில்லை. சில வேளைகளில் தகுந்த நேரத்திற்கு அவர் காத்திருக்கக்கூடும். நாம் பொறுமை இழக்கக்கூடாது. இறேவண்டலில் விடாமுயற்சி இன்றியமையாதது. நாம் விரும்பும் ஒரு காரியத்தைத் தொடங்குமுன் ‘ இறை வேண்டல்’ செய்வது எத்தனை முக்கியமானது என்ற புரிதலையும் தருகின்றது இன்றைய வாசகப்பகுதி.
இறைவேண்டல்.
மனம் தளராமல் தொடர்ந்து மன்றாடுங்கள் என்றுரைத்த ஆண்டவரே, எனது மன்றாட்டுக்கள் உமது திருவுளத்திற்கு ஏற்ப பலன் கொடுக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
