மன்னித்தால் மன்னிப்பு, இல்லையேல் அழிவு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் முதல் வாரம் – செவ்வாய்
எசாயா 55: 10-11
மத்தேயு 6: 7-15
 

மன்னித்தால் மன்னிப்பு, இல்லையேல் அழிவு!


முதல் வாசகம்.

 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி, பூமியை நனைத்து, விதைப்பவருக்கு விதையையும், சாப்பிடுவதற்கு உணவையும் விளையச் செய்து, வளரச் செய்யாமல் திரும்பாதது போல, என் வாயிலிருந்து புறப்படும் வார்த்தையும் என் விருப்பத்தை நிறைவேற்றாமல், அது அனுப்பப்பட்டதைச் சாதிக்காமல், வெறுமையாக என்னிடம் திரும்பாது” என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இது கடவுளுடைய வார்த்தையின் சக்திவாய்ந்த மற்றும் பயன்மிக்க விளைவைத் தெளிவாக விளக்குகிறது. 

நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடம், “எங்களுக்கு இறைவேண்டல் செய்ய கற்றுத்தாரும்” என்று கேட்ட உடன், இயேசு அவர்களுக்கு இறைவேண்டல் கற்றுத் தருகின்றார். அப்படி உருவானதுதான் ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல்.

இயேசு சீடர்களுக்கு இறைவேண்டல் கற்றுத்தருவதற்கு முன்பாக,  எவையெல்லாம் இறைவேண்டல் ஆகாது  என்பதை எடுத்துரைக்கின்றார். பிதற்றுவதோ அல்லது மிகுதியான வார்த்தைகளைப் பயன்படுத்தி அலங்கரித்து இறைவேண்டல் செய்வதோ இறைவேண்டல் ஆகாது  என்பதை இயேசு தெளிவாக விளக்குகின்றார். பின்னர் இறைவேண்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கிறார்.

இயேசு கற்றுத் தரும் இறைவேண்டலை இரு  பிரிவுகளாக பிரிக்கலாம். முதல் பகுதி இறைவனைத் போற்றிப் புகழ்வது.  இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகளுக்காக இறைவனிடத்தில் மன்றாடுவது. நாம் இறைவேண்டலில் எப்போதும் இறைவனுக்கு முதலிடம் கொடுத்துவிட்டுதான் நம்முடைய தேவைகளை இறைவனிடத்தில் எடுத்து வைக்கவேண்டும் என்பது இயேசுவின் அழுத்தமான போதனையாக இருக்கின்றது.

இரண்டாவது பகுதியில் இயேசு மூன்று காரியங்களுக்காக மன்றாட அழைக்கின்றார். 
1.    நம்முடைய அன்றாட உணவு.
2.    இறைவன் நாம் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டுவது.
3.    தீமையிலிருந்து காப்பாற்ற இறைஞ்சுவது.


சிந்தனைக்காக.


கடவுளின் வாயிலிருந்து வரும் ஆண்டவருடைய இறைவேண்டலில், கடவுள் நமக்கு யார், அவர் நமக்கு என்ன செய்ய முடியும், மற்றும் நம் வாழ்வில் அவருடைய திருவுளத்தின் முக்கியத்துவம் பற்றி அறிவுறுத்தப்படுகிறோம்.

இந்த தவக்காலத்தின் வழியாக நாம் பயணிக்கும்போது, ஆண்டவரின் வாயிலிருந்து வந்த இந்த இறைவேண்டலில் செயல்திறனை எப்போதும் நாம நம்பிக்கையுடன் ஏற்று இறைவண்டல் செய்ய வேண்டும். ஆண்டவர் கற்பித்த இந்த இறைவேண்டலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்டால், நம்மில் அது பெரும் புரட்சியை ஏற்படுத்தும். முதலில் ஆண்டவர் அவர் எவ்வாறு கடவுளை ‘என் தந்தை’ என்கிறாரோ அதே போல் நம்மையும் கடவுளை ‘எங்கள் தந்தையே’ என்று அழைக்க அழைக்கிறார். இங்கே ‘என் தந்தையே’ என்பதற்கு இடமில்லை. இதன்வழி இயேசு நமது சகோதரர் ஆகிறார். அன்னை மரியா நமக்கும் தாயாகிறார். இங்கே சமத்தவமும் சகோதரத்துவமும் மேலோங்குகிறது.  

பல்வேறு சமூக பிரிவினையால் பிரிந்து கிடக்கும் நம்மில் ஒற்றுமை உணர்வை பிறப்பிக்கும் இறைவேண்டல் இது. ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்றவேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம்” என்னும் ஆண்டவரின் அருள்மொழிகளை இன்று கேட்டோம். 

இறைவனின் ஆட்சி இந்த உலகில் மலர வேண்டுமென்றும்  ஒவ்வொரு நாளுக்கும் தேவையான உணவைத் தங்களுக்குத் தர வேண்டும் என்றும் கடவுள் நம் குற்றங்களை மன்னித்ததுப் போல  நாமும் பிறருடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்றும்  இயேசு அழைப்பு விடுக்கிறார்.  அன்றாட உணவை அனைவரும் கேட்டால், மனுக்குலத்தில் பதுக்கல் இருக்காது, பசி பட்டினிக்கு இடமுல்லை. 

‘இல்லை என்பார் இருக்கையில் இருப்பவர்கள் இல்லை’ என்கிறார்கள். இதற்குக் காரணம் சுயநலம். அடுத்து, ஒரு முக்கிய அம்சமாக இயேசு ஒரு   நபந்தனையை இந்த இறைவேண்டலில் வைக்கிறார். விண்ணகத் தந்தையின் மன்னிப்பைப் பெறுவதற்கு நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை மன்னிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். மன்னித்தால்தான் மன்னிப்பு உண்டு. 

நிறைவாக, உமது ஆட்சி வருக!' என்று மன்றாட அழைக்கிறார் ஆண்டவர். இயேசு இறையாட்சியை மக்கள் உள்ளத்தில் விதைக்க வந்தவர். மூன்று ஆண்டுகள் அதைப் பற்றி போதித்தார்.  ‘இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது’ (உரோ 14:17) என்பதை வெளிப்படுத்தினார் பவுல் அடிகள். நமது உள்ளத்தல், பிறர் மட்டில் நிதி நேர்மை இருந்தால் ஆண்டவர் ஆட்சி நம்மில் மலரும். நீதி மற்றும் நேர்மை என்பன கடையில் கிடைக்கும் பொருள்கள் அல்ல. இதற்காக தந்தையிடம் மன்றாட வேண்டும் என்கிறார் ஆண்டவர்.

ஆம், வானில் இருந்து வரும் மழை மண்ணில் விழுந்து பலன் தராமல் மேல் நோக்கிப் போவதில்லை. அதுபோலவே, நியாயமான தமது இறைவேண்டலுக்குக்  கடவுளின் ஆசீர்ரும் பலன்  தராமல் திரும்பாது. ஆகவே, தொடர்ந்து, அவரது ஆட்சி நம்மில் நிறைவேறவும், பாவங்களில் நம்மை விழச் செய்யக் கூடிய சோதனைகளில்   நாம் சிக்கிக்கொள்ளாமல்  நம்மைப் பாதுகாக்க ஆண்டவரை மன்றாடுவோம். சகோதரத்துவத்தைப் பேணி காப்போம். 
    

இறைவேண்டல்.

எப்படி செபிக்க வேண்டும் என்று கற்றுத்தந்த இயேசுவே,  உமது மாதிரியை நான் பின்பற்றி, அதிக சொற்களை அடுக்காமல், நல்ல மனநிலையை என்னில் உருவாக்கி, அதனையே இறைவேண்டலாக மாற்ற அருள்தாரும். ஆமென்.

 
 
 
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452