அன்னை மரியாவின் விண்ணேற்பு நம் மீட்புக்கு வாசல் திறப்பு! | ஆர்கே. சாமி | Veritas Tamil

15 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 19 ஆம் வாரம் –வெள்ளி
புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு-பெருவிழா
திருவெ 11: 19a; 12: 1-6, 10ab
1 கொரி 15: 20-26
லூக்கா 1: 39-56
அன்னை மரியாவின் விண்ணேற்பு நம் மீட்புக்கு வாசல் திறப்பு!
முதல் வாசகம்.
இன்று நம் தாய் திருஅவையோடு இணைந்து புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடுகின்றோம். திருத்தந்தை 12ம் பத்திநாதர் 1950 ஆம் ஆண்டு அன்னை மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்று விண்ணேற்பு அடைந்ததை நம்பிக்கை கோட்பாடாக அறிவித்தார்.
திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது’ என்றும், பெண்மணி ஒருவர் கதிரவனை ஆடையாக அணிந்து, நிலாவைத் தன் காலடியில் கொண்டு, பன்னிரு விண்மீன்களைத் தன் தலையில் மணிமுடியாய்ச் சூடியிருப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த உடன்படிக்கைப் பேழை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் அது அன்னை மரியா என்பது தெரியவரும்.
இரண்டாம் வாசகம்.
கொரிந்து மக்களுக்கு புனித பவுல் எழுதுகையில், விண்ணகத்தின் மாட்சிகளைப் பற்றிய வார்த்தைகளால் கொரிந்தியரை ஊக்குவிக்கிறார். கிறிஸ்து கடவுளின் "முதல் கனியாக" உயிர்த்துவிட்டார் என்று அவர் குறிப்பிடுகிறார். இயேசு விண்ணக மகிமையில் தனது அரியணையைக் கொண்டுள்ளர். அவருக்குப் பிறகு, கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் விண்ணகம் செல்வார்கள். வெளிப்படையாக, அவரது தாயான மரியா இயேசுவைச் சேர்ந்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் காலத்தின் முடிவில் அனைத்து விசுவாசிகளும் விரும்புவது போல, தனது மகனுக்குப் பிறகு, தனது மனித (ஆனால் மகிமைப்படுத்தப்பட்ட) உடலுடன் விண்ணகத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் முதல் நபராக மரியா இருப்பார் என்பதும் தெளிவாகிறது.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகம் கருவுற்ற வயதான தன் உறவினர் எலிசபெத்துக்கு உதவி செய்ய விரைந்துசென்ற மரியாவுடனான நிகழ்வை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசெபத்துவின் "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? "என்ற வாழ்த்தை கேட்குமளவுக்கு அன்னை மரியா பேறுபெற்றிருந்தார் விவரிக்கிறது.
சிந்தனைக்கு.
மரியாளின் விண்ணேற்பு நிகழ்வுகளைப் பற்றி நற்செய்திகளில் குறிப்புகள் எதுவும் காணப்படவல்லை என்றாலும், மரியாவின் வருகை மற்றும் அவரது உறவினர் எலிசபெத்தின் இன்றைய பதிவு மரியாவின் சிறப்பைப் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறது. அவள் வானதூதரிடம் ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறியதால், அவளுடைய வயிற்றில் இருக்கும் குழந்தை கடவுளின் மகன் ஆனானர். மரியாவின் வயிற்றில் இருந்த குழந்தையிலும் இறைதன்மையை எலிசபெத் அங்கீகரிகரித்தார். மரியாவை ‘ஆண்டரின் தாய்’ என்றுரைத்தார்.
எலிசபெத்தின் வாழ்த்துக்கு மரியா பதிலளிக்கும் விதமாக, ‘மரியாவின் பாடல்’ என்ற அழகிய பாடல் வரியில் கடவுளையும் அவளுடைய வாழ்க்கையில் கடவுளின் செயலையும் புகழ்ந்து பேசுகிறாள் “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது’ (லூக்கா 1:47) என்று இறைப்புகழ் பாடினார்.
விண்ணேற்புப் பெருவிழா, அருள்நிறை பெற்ற கன்னி மரியா பூமியில் தனது வாழ்க்கையை முடித்தபோது, மகா தூய மூவொரு கடவுளை என்றென்றும் போற்றுவதற்காக , உயிர்த்தெழுந்த தனது மகனுடன் இருக்க, உடலாலும் ஆன்மாவாலும் விண்ணகத்திற்கு அழைத்துச் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற உண்மையைக் எடுத்துரைக்கிறது, .
புதிய வானமும் புதிய பூமியும் படைக்கப்படும் இந்த மாட்சிமிகு நாளை எதிர்பார்த்து, விசுவாசிகள் அனைவரும் கடவுளுடன் என்றென்றும் உயிர்த்தெழுந்த நிலையில், அன்னையுடன் ஒன்றாக இணைந்திருப்பர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பாவமற்ற உடல் இவ்வுலகில் அழிவுறாது.
ஆகவே, இன்று திருஅவையுடன், மிகவும் மகிமையான, என்றும் கன்னியாகிய மரியாவைப் பற்றி சிந்தித்து, அவர் விண்ணிலிருந்து நமக்காகப் பரிந்து பேசுகின்ற தாயாக உள்ளார் என்பதில் மனநிறைவுகொண்டு, ‘அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள’ என்ற அவரது கட்டளையை நிறைவேற்றுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, அன்னை மரியா இந்த உலகம் உமது மீட்பின் வழியாக விடுதலை பெற உம்மை கருத்தாங்கி இந்த மண்ணில் பிறக்க வைத்தார். அவ்வாறே, நீர் விட்டுச் சென்ற மீட்புப்பணியைத் தொடர என்னையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
