நல்வழிப்படுத்த முயல்வோர் பேறுபெற்றோர்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

13 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 19 ஆம் வாரம் –புதன்

இணைச்சட்டம் 34: 1-12
மத்தேயு  18: 15-20

 
 
நல்வழிப்படுத்த முயல்வோர் பேறுபெற்றோர்!
 
 முதல் வாசகம்.

விவிலியத்தின் முதல் "ஐந்து நூல்கள்" அல்லது ‘தோரா’ என்றும் அழைக்கப்படும்  "சட்டம்" - முடிவுக்கு வருகிறது.  இன்றைய பகுதி ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை விவரிக்கிறது. கடவுள் "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை" அவர் வாக்களித்த நாட்டிற்குள்  கொண்டு வர உள்ளார் -அவர்கள் யோர்தான் நதியின் கிழக்கு கரையில் உள்ளனர். அதைக் கடந்தால் கானான் நாட்டில் பாதம் பதிக்கலாம்,  ஆனால் இங்கே மோசே 120 வயதில் இறந்துவிடுகிறார். 

அதற்குமுன், கடவுள்  மோசேவுக்கு அடையவுள்ள கானான் நாட்டின் நான்கு திக்கும் உள்ள எல்லைகளைக் காண்பிக்கிறார். இவ்வாறு, மோசேவுக்குக்  கானானின் நிலப்பகுதியைக் கடவுள் காட்டினார்.  ஆனால் அதில் நுழைய மாட்டார். பாரம்பரிய முப்பது நாள் துக்க காலத்திற்குப் பிறகு, யோசுவா இஸ்ரயேலர்களைக் கட்டுப்படுத்தி, யோர்தான் நதியைக் கடந்து, பலும் தேனும்  பாயும் நாட்டிற்குள் நுழைவதற்கு அவர்களைத் தயார்படுத்துகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், கிறிஸ்தவர்களில்  வழிதவறிச் செல்லும் உறுப்பினரை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இயேசு சில குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்குகிறார். அவர் தவறு செய்யும் ஒருவரிடம் அவருடைய தவற்றைத் தனியாகவோ, இருவர் அல்லது மூவராகவோ அல்லது திருஅவையாகவோ சென்று, சுட்டிக்காட்டி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார்.


சிந்தனைக்கு.


இக்காலத்தில், சிறிய குற்றங்களுக்கெல்லாம் நீதிமன்றத்திற்குச் செல்லும் மக்கள்தான் அதிகம். குடும்பதிற்குள்ளாகவே பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சிகள் குன்றிவிட்டன. கடவுள் இணைத்த திருமணங்களையும் நீதிமன்றங்கள்  பிரித்து வைக்கின்றன.  யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமெனக் கடவுள் விரும்புகிறார் (1 பேது 3: 9).

ஆனாலும், மனிதர்கள் நாம், தவறுபவர்களை நல்வழிபடுத்தும் முயற்சியை விரும்புவதில்லை. இதற்கு  “எனக்கு எல்லாம் தெரியும்; உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்ற பதில்தான் காரணம். ஆனால், கிறிஸ்தவத்தில் (திருஅவையில்) ஒவ்வொருவரும் மற்றவருக்குக் காவலாளிகள் என்பதை உணர வேண்டும். நாம் உப்பாக உள்ளோம். உப்புக்கு இயற்கையாகவே ‘பாதுகாக்கும்’ தன்மை உண்டு. எனவேதான், ஆண்டவர் நம்மை ஒருவரின் தவற்றைத் தனியாகவோ, இருவர் அல்லது மூவராகவோ அல்லது திருஅவையிடமோ அழைத்துச் சென்று  தவற்றைச் சுட்டிக்காட்டி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார்.

பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் என்பதுபோல், பகையோடு வாழ்நாள் முழுவதும் வாழ்வைவிட சிறிது முயற்சித்து  சமரசம் செய்துகொள்வது பலனளிக்கும்.  இதனால்தான், ‘நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’(மத் 5: 24) என்றார் ஆண்டவர்.

முதல் வாசகத்தில், மோசே  போல், இறைவாக்கினர் வேறு எவரும் இஸ்ரயேலில் எழுந்ததில்லை என்று அறிகிறோம். ஆனால், அவரையும்   மக்கள் தூற்றினர். ஆகவே, குறைகூறலும் பலவீனப்படுத்துதலும்  எங்கும் இருக்கும். இதற்காக எல்லாரையும் பகைக்க ஆரம்பித்தால். ‘மன்னிப்பு,  சகிப்பு’ போன்ற சொற்கள் அர்த்தமற்றவை ஆகிவிடும்.

மோசே இஸ்ரயேலர் செய்த தவறுகளுக்காக கடவுளிடம் பலமுறை மன்னிப்புக்கு  மன்றாடினார். அவரைப்போல்,  தவறுவோரை கடவுளிடம் அழைத்துச் செல்வதும் நமது கடமை, மன்னிப்பது கடவுளின் விருப்பம். மன்னிப்பு என்பது  ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செய்யும் தவறை அந்த நபர் மன்னித்து அந்த நபரை முழுமையாய் ஏற்றுக் கொள்வது. இது சாத்தியமாகாதபோது, அப்படியே விட்டுவிட்டால் அது புரையோடிப்போகும். எனவேதான் ஆண்டவர் திருஅவையிடம் திரும்பச் சொல்கிறார். 'மனிதரால் இது இயலாது. கடவுளால் எல்லாம் இயலும்' என்பதில் நம்பிக்கை கொள்வோம்.


இறைவேண்டல்.


என்  ஆண்டவரே, நீர் தந்தையிடம் கேட்பதெல்லாம் உமக்கு அருளப்பட்டது. தந்தையிடமான உமது இறைவேண்டலில் என்னையும் உமது திருஅவையின் அனைத்து உறுப்பினர்களையும் நீனைவுகூர்வீராக. ஆமென்.

 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452