இயேசுவில் கொள்ளும் பற்றுறுதி நம்மை உயிர்ப்பிக்கும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் 5ஆம் வாரம் –செவ்வாய்
எண்ணிக்கை 21: 4-9                                                                                                           யோவான் 8: 21-30

இயேசுவில் கொள்ளும் பற்றுறுதி நம்மை உயிர்ப்பிக்கும்!
 
முதல் வாசகம் 

முதல் வாசகம், எகிப்திலிருந்து வெளியாகி, பாலைநிலத்தில்  பயணித்த இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறார், தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை உணரவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

கடவுள் தங்களுக்கு அளித்த உணவை (மன்னா) சாப்பிட்டு சோர்வடைந்த இஸ்ரயேலர் கடவுளுக்கு எதிராக, மோசேவிடம், “இந்தப் பாலைநிலத்தில் சாகும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்று  முணுமுணுக்கிறார்கள். எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது அவர்கள் உண்ட பல்வேறு வகையான உணவுக்காக அவர்கள் இந்த பாலைநில வழி பயணத்தில் ஏங்குகிறார்கள். 
எனவே, அவர்களின் நன்றி மறந்த முணுமுணுத்தலுக்காக  ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பினார். அவர்கள் அந்த பாம்புகளின்  கடிக்கு ஆளாக்கவே,  அச்சமுற்ற மக்கள் மனந்திரும்பினர்.  மோசே அவர்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அந்த  வெண்கல பாம்பை உற்றுப் பார்த்தவர்களை ஆண்டவர் குணப்படுத்தினார் என்று அறிகிறோம். 

நற்செய்தி.

இயேசு அவருடைய நெருங்கி வரும் பாடுகள் மற்றும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறார். மற்றவர்கள் அவரைப் பின்தொடர முடியாத இடத்திற்குச் செல்வதைப் பற்றி அவர் பேசுகையில், யூதர்கள் இயேசு  தற்கொலை செய்து கொள்ளப்போகிறார் என்பதாகக் கருதினர்.   இதற்கு நேர்மாறாக, இயேசு தம்முடைய தந்தையின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து, எல்லா மக்களுக்காகவும் தனது உயிரைக் கொடுக்க உள்ளார்  என்று விவரிக்கிறார். இவ்வாறு கூறுவதன்வழி அவரது தந்தை-மகன் எனும் கடவுளுடனான தனது நெருங்கிய உறவை வெளிப்படுத்துகிறார். மேலும், அவர்களோ மண்ணகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவரோ விண்ணகத்தைச் சேரந்தவர் என்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார். 
நற்செய்தியில், மோசேவுக்கு கடவுள் “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்று வெளிப்படுத்திய (வி.ப.3:14) சொற்றொடரை இயேசுவும் பயன்படுத்துகிறார்.
இதன்வழி இயேசு கடவுளுடனான தனது ஒற்றுமையைத் தெளிவுப்படுத்தினார். இதனிமித்தம், மக்கள் கூட்டத்தில்   இயேசுவை பலர் நம்பத் தொடங்குகிறார்கள். மற்றவர்கள் அவர் தன்னை கடவுளுக்குச் சமமானவர் என்று  கூறுவதாக அவரைத் தண்டிக்க  ஆர்வமாக இருந்தனர். 

சிந்தனைக்கு. 

கடவுள் அவரது வாக்குறுதிகளை ஒருபோதும் மீறவில்லை. அவர் அன்றும், இன்றும், என்றும் அளித்த வாக்குறுதிகளில்  மாறவாதவர்.  கடவுள் வாக்குறுதியளித்த அனைத்தையும் அவர் நிறைவேற்றுகிறார் என்ற நம்பிக்கையுடன் நாம் முன்னேற வேண்டும்.

அடுத்து, நம் வாழ்வில் செயல்படும் கடவுளை அனுபவிக்க நாம் நமது மனக் கண்களைத் திறக்கத் தவறிவிடுகிறோம். பாலைநிலத்தில், பயணித்த  இஸ்ரயேலர்களை அல்லது இயேசுவின் போதனையில்  கடவுளின் வெளிப்பாட்டைக் காண விரும்பாத மறைநூல் அறிஞர்களைவிட விட நாம் அதிகம் வேறுபட்டவர்கள் அல்ல. நாமும் பல தருணங்களில் பச்சோந்திபோல் மாறுகிறோம். 

கடவுள் மீதும், நமக்கான அவரது திட்டத்தின் மீதும் நாம் நம்பிக்கையை வெளிப்படுத்தும்போது,  ஓர் இனம் புரியாத  அமைதி நம்மில் நிலவும்.  இதனால்.  நமக்கு எல்லாம் இன்பமயமாக இருக்கும் என்று அர்த்தமல்ல.  மாறாக, இயேசுவோடு இணைந்திருந்தால் அனைத்துச் சோதனைகளையும் நம்மால் மேற்கொள்ள முடியும். “உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது” (திபா 91:7) என்பதே கடவுளின் வாக்குறுதி.

முதல் வாசகத்தில் கொள்ளி பாம்புகளால் கடிபட்டு அவதியுற்றோரில், கடவுள் வார்த்தையில் நம்பிக்கை வைத்து உயர்த்தப்பட்ட கொள்ளிப் பாம்பு உருவத்தை உற்று நோக்கினோர் சாவினின்று காப்பாற்றப்பட்டனர் அல்லவா? அதே நம்பிக்கை நமக்கு இருந்தால் நாம் அஞ்ச வேண்டியதில்லை. இயேசுவும் தந்தையைப்போல். ‘இருக்கின்றவராக இருக்கின்றவர்’ ஆவார்.  அவரே, “அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே” (திவெ 22:13) என்று தன்னை திருஅவைக்கு (நமக்கு)  வெளிப்படுத்தியுள்ளார்.  

கடந்த காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக மறைசாட்சிகளாக இறந்தனர். அவர்கள் கிறிஸ்துவின் மேல் கொண்ட பற்றுக்காகவும், திருஅவையின் வளர்ச்சிக்க்காவும் தங்களது உயிரை விலையாகக் கொடுத்தார்கள். இக்காலத்தில், நமது நம்பிக்கையும் தலைமைத்துவமும்  குறுகியதாகவும் அடக்குமுறைக்கு உட்பட்டதாகவும் இருக்கும்போது, கிறிஸ்தவம் ஆயிரம் முறை செத்துப் பிழைக்கும் என்பதை மனதில் கொள்வோம்.  

இறைவேண்டல்.

‘இருக்கிறவராக இருப்பவர் நானே’ என்றுரைத்த ஆண்டவரே, உம்மில் என்றும் பற்றுறுதி கொண்டு, உமக்காக வாழும் சீடராக என்னைத் திடப்படுத்துவதற்கு நன்றி. ஆமென்.

 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452