நம்மிலும் ஒரு யூதாசு இருக்கக்கூடும்| ஆர்.கே. சாமி | VeritasTamil

புனித வாரம் – புதன்
எசாயா 50: 4-9a
மத்தேயு 26: 14-25
நம்மிலும் ஒரு யூதாசு இருக்கக்கூடும்.....
முதல் வாசகம்.
முதல் வாசகம் ஏசாயாவில் உள்ள துன்புறும் பணியாளர் பற்றிய பாடல்களில் மூன்றாவது ஆகும்,
இறை ஊழியர் அல்லது துன்புறும் ஊழியராம் இயேசுவைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதியாகவும் இது உள்ளது. இதில் துன்புறும் ஊழியர் எதற்காகத் துன்புறுத்தப்படுவார்? எப்படித் துன்புறுத்தப்படுவார்?, அப்படிப்பட்ட தருணங்களில் இறைவன் அவருக்கு எப்படித் துணையிருப்பார்? என்பது பற்றிய தெளிவை நாம் பெறுகிறோம்.
குறிப்பாக, அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை எனும் முன்னறிவிப்புகள் இயேசுவில் நிறைவேறுவதை அறிகிறோம்.
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசுவைப் பன்னிரு சீடர்களுள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து, காட்டிக்கொடுக்கத் திட்டம் தீட்டுவதைப் பற்றி வாசிக்கின்றோம். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுக்க இருப்பது இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. அவன் முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டு, அவரைக் கொடுப்பதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் எதிர்ப்பார்த்திருந்தான்.
அன்றி, இராவுணவின்போது, அவர் அவனுக்கு அப்பத்தை இரசத்தில் தோய்த்துக்கொடுத்து அவனுக்கான அன்பை வெளிப்படுத்திகின்றார். கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறத் தன்னையே கையளிக்கின்றார் இயேசு என்று மத்தேயு விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
புனித வார நிகழ்வுகளை நாம் சிந்திக்கும்போது, யூதாசை தனிமைப்படுத்தி, இயேசுவின் பாடுகளுக்கும் மரணத்திற்கும் அவரைக் குறை கூறுவது எளிது. அவர் தீயவர், கெட்டவர் மற்றும் எட்டப்பன் என்றும் நாம் முத்திரைக் குத்துவது வழக்கம். இதற்கு முதன்மை காரணமாக இருப்பது தலைமைக் குருவியிடம் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டதும் அவரைக் காட்டிக்கொடுத்ததும்தான்.
பணமே அனைத்துத் தீமைகளுக்கும் ஆணிவேர் என்பார்கள். யூதாசின் செயலுக்கு இக்கூற்று மிகவும் பொருந்தும். அவனது பலவீனம் பணமாக இருந்திருக்கலாம். அலகை அவனது பலவீனத்தைப் பயன்படுத்துகிறான். லூக்கா 4:13-ல், இயேசுவை சோதித்து வீழ்த்த முயன்ற அலகை, தோல்வியுற்று, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது என்று லூக்கா குறிப்பிடுகிறோர். அந்த ஏற்ற காலம், யூதாசில் நிறைவேறியதை அறிகிறோம். ஆம், ‘அந்நேரத்தில் பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்தான்’ என மீண்டும் 22:3-ல் எனக் குறிப்பிடுகிறார்.
ஆகவே, ஒரு நல்லவனை திசைத்திருப்பவது அலகையின் வேலை. ஓர் அலகை தன்னால் சாதிக்க முடியாததை தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து ஒருவருக்குள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும் என்று மத்தேயு நற்செய்தியில் வாசிக்கிறோம் (12:45). யூதாசு இத்தகைய தீய ஆவிகளுக்குப் பலியாகியிருக்கூடும்.
நமக்கு நடக்கக்கூடிய மிக மோசமான விடயங்களில் ஒன்று, நாம் நம் நேரத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் பகிர்ந்து கொண்ட, நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவரால் காட்டிக் கொடுக்கப்படுவது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று பல விவிலிய அறிஞர்கள் கூறக் கேட்கிறோம். அவை:
முதலாவதாக, பணத்தின் மீது அவருக்கிருந்த பேராசை காரணமாக இருக்கலாம் அல்லது அவர் அப்பேராசையால் தூண்டப்பட்டிருக்கலாம்.
இரண்டாவதாக, கிறிஸ்துவின் மீதான அவரது ஏமாற்றமாக இருக்கலாம். இயேசு மெசியாவாக உடனடி மாற்றங்கள் சமூகத்தில் கொண்டு வருவார் என்று அவர் நினைத்திருக்கலாம். அத்தகைய சமூகச் சீர்த்திருத்தவாத இயக்கங்கள் ஒன்றில் இவர் ஓர் அங்கத்திராக இருந்திருக்கலாம். இயேசுவின் நடவடிக்கைகள் அவரின் எதிர்ப்பார்ப்புக்கு ஒத்திருக்கவில்லை.
மூன்றாவதாக, இயேசுவை கொன்றுவிடுவார்கள் என்று யூதாஸ் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார். நிறைவாக, கடவுளின் இரக்கத்தின் ஒளியில் நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். பல சந்தர்ப்பங்களில் நாமும் யூதாசைப்போல் வழிதவறி இருக்கலாம். அலகைப் நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மில் தடுமாற்றம் ஏற்படுத்தியிருக்கலாம். நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: நாம் நம்மை கிறிஸ்துவின் நெருங்கிய நண்பர்களாகக் கருதுகிறோமா? அல்லது யூதாசைப் போல பேராசைகளால் அலைக்கழிக்கப்படுகிறோமா?
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது பாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட உமது அன்பின் மேன்மையை நான் அறிந்துணர்ந்து உம்மில் ஆழ்ந்தப் பற்றுறுதி கொண்டு வாழ அருள்புரிய உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
