அஞ்சாமை சீடத்துவத்தின் முதன்மை ஆயுதம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

12 ஜூலை 2025
பொதுக்காலம் 14 ஆம் வாரம் – சனி
தொடக்க நூல் 49: 29-32; 50: 15-26a
மத்தேயு 10: 24-33
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் தொடக்க நூலில் நாம் படிக்கும் இறுதி பகுதியாகும். யாக்கோபு கானனில் உள்ள குடும்ப நிலத்தில் தன்னை அடக்கம் செய்யுமாறு கேட்கிறார்கள். யாக்கோபின் மரணத்திற்குப் பிறகு, யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்புக்கு அவர்கள் செய்த தீங்கிற்கு பழிவாங்குவார் என்று அஞ்சுகிறார்கள்.
கடவுள் யாக்கொப்பின் குடும்பத்தை இறுதியில் எகிப்திலிருந்து கானானுக்கு திரும்பக் கொண்டுவருவார் என்றும் யோசேப்பு தனது சகோதரர்களுக்கு உறுதியளிக்கிறார். இந்த விடயங்களில் கடவுள்தான் உண்மையான அதிகாரி என்றும், அவர் உட்பட யாரும் கடவுளை விட வலிமையானவர் அல்லது பெரியவர் அல்ல என்றும் யோசேப்பு உணர்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தான் அனுப்புபவர்களுக்கு தனது அதிகாரமளிக்கும் உரையைத் தொடர்கிறார் . “சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல என்றும், சீடர் தம் குருவைப் போலவும், பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
அவர்கள் ஆகாயத்துப் பறவைகளை விட மதிப்புள்ளவர்கள் என்பதால் அவர்கள் கவலைப்படவோ அல்லது தகுதியற்றவர்களாக உணரவோ கூடாது என்று இயேசு அவர்களுக்கு நினைவூட்டுகிறார். மற்றவர்கள் முன் நற்செய்திக்காக அவர்கள் துணிந்து நின்றால், அவர் தனது தம் தந்தையின் முன்னிலையில் அவர்களுக்காக நிற்பார் என்றும் அவர் அவர்களிடம் கூறுகிறார். தொடரந்து, ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சு வேண்டும் என்றும் கற்பிக்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், மற்றவர்களோ, உடன் பிறந்தவர்களோ நமக்கு ஏற்படுத்திய காயங்களுக்கு நாம் பழிவாங்கக் கூடாது எனும் பாடத்தை கடவுள் கற்பிக்கிறார். யோசேப்புப் போல பிறர் குற்றங்களை மன்னிப்பதோடு மன்னித்து ஏற்க வேண்டும். யோசேப்பு தமக்கு தீங்கு விழைத்த சகோதரர்களையும் அவர்களது குழந்தைகளையும் பேணிக் காப்பேன்’ என உறுதி கூறுகிறார்.
ஆம்,’ உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதைவிடு’ என்ற ஒரு பாடலின் வரிகளுக்கு ஏற்ப யோசேப்பு நடந்துகொண்டார். அவரில் வீரமும், விவேகமும், மன்னிக்கும் பெருந்தன்மையும் இருந்தது.
நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்கள் திருத்தூதர்களாக எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களுக்கு அவர்களைத் தயார்படுத்துகிறார். மூன்று முறை, இயேசு தம் சீடர்களிடம் அஞ்ச வேண்டாம் என்று கூறுகிறார் கடவுளும் நம் அச்சத்தையல்ல நம் அன்பையே கேட்கிறார். திருத்தூதர்களைப்போல நாம் வெளியே சென்று நற்செய்திக்கான பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நமது "பணியிலிருந்து" நம்மை திசைதிருப்பும் எந்தவொரு அச்சமும் நமது நேரத்திற்கும ஆற்றலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது.
நாம் பணி செய்ய நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அர்த்தமின்றி விமர்சிப்போர்க்கும் உயிரைக் கொல்வோர்க்கும் அஞ்சவேண்டாம் என்று சொன்ன இயேசு, இறுதியில் ஆண்டவர்க்கு அஞ்சவேண்டும் என்று சொல்கிறார். கடவுள் வருவார் என்று யோசேப்பு நம்பினார். துன்புறுத்தலுக்குக் கூட பயப்பட வேண்டாம் என்று இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே’
என்று பாடிய மகாகவி பாரதியின் வரிகளுக்கு உரியவர் அல்ல கிறிஸ்தவர்கள். நாம் கொழைகள் அல்ல. உண்மைக்கு சாட்சியம் பகர அழைக்கப்பட்டவர்கள். குற்றம் குறைகளை எடுத்துரைத்து சரிசெய்ய அழைக்கப்பட்டவர்கள். தாய் திருஅவையின் வீரப் புதலவர்கள் புதல்விகள் நாம் என்பதை நினைவில் கொள்வோம்.
நமக்கும் இன்று ஆண்டவர் சொல்வது, “எதிர்நோக்கில் வாழுங்கள், நம்பிக்கையில் எதிர்கொள்ளுங்கள், கடவுள் நம்மைச் சந்திப்பார் என்று நம்புங்கள்” என்பதாகும்.
இறைவேண்டல்.
‘ஆண்டவர்க்கு அஞ்சவேண்டும்’ என்றுரைத்த ஆண்டவரே, நான் எந்நாளும் உண்மைக்கும், உமக்கும் மட்டும் அஞ்சும் பணியாராக விளங்க அருள்புரிய உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
