நேர்மையாய் வாழ்ந்து, - மானிட மகனிடமிருந்து – இறையருளை நிறைவாகப் பெறுவோம் | VeritasTamil
பொதுக்காலம் 34ஆம் வாரம் - வியாழன்
திருவெளி. 18: 1-2, 21-23; 19: 1-3, 9a - லூக்கா 21: 20-28
நேர்மையாய் வாழ்ந்து, - மானிட மகனிடமிருந்து – இறையருளை நிறைவாகப் பெறுவோம்
முதல் வாசகம்.
யோவான் கண்ட காட்சி தொடரில் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது முதல் வாசகத்தில் பாபிலோன் நகரம் பாவத்தில் முழுகி கடவுளின் சின்னத்திற்கு ஆளானது பாபிலோன் மாநகர்! பேய்களின் உறைவிடமாக அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிப்போனது மனிதரையே வெறுக்கத்தக்க விலங்கு என்று முதல் வாசகத்தில் கூறப்படுகிறது தீமை அழிப்பு: பாபிலோனின் (உரோமை) அழிவு கடவுள் கொண்டுவரும் உறுதியான தீர்ப்பை முன்மொழிகிறது. கடவுளுடைய நீதிக்கும் தூய்மைக்கும் எதிராகப் புறப்படும் அனைத்தும் அழிந்துபோகும். கடவுளுடைய நீதியோடு நம் வாழ்வை இணைத்துக்கொள்தல் வேண்டும்.
நற்செய்தி.
''இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது'' (லூக்கா 21:28)
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ''ஒத்தமை நற்செய்திநூல்களில்'' எருசலேமின் அழிவு முன்னறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று கலந்த விதத்தில் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: லூக் 21:20-28). எருசலேம் நகரம் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்டபோது (கி.பி. 70) அங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரக் கணக்கில் இறந்தனர்; எஞ்சியோர் பெருந்துன்பங்களுக்கு ஆளாயினர். அந்நிகழ்வுகளின் பின்னணியில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. வான மண்டலத்தில் அடையாளங்கள் தெரியும், கடல் கொந்தளிப்பு ஏற்படும்; மக்கள் தங்களுக்கு ஏற்படப் போகின்ற அழிவு குறித்து அஞ்சி நடுங்குவர் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால் இந்த அச்சுறுத்தும் அடையாளங்களின் நடுவே ஆறுதல் தரும் வார்த்தையும் உரைக்கப்படுகிறது. அதாவது, மானிட மகன் மாட்சியோடு வருவார்; மனிதரின் மீட்பு நிறைவுறும்.
மனிதர்கள் அச்சத்தால் நடுங்குகின்ற வேளையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆறுதல் செய்தி இது: ''நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' (லூக் 21:28). இவ்வாறு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அடிப்படையான காரணம் ''நமது மீட்பு நெருங்கி வருவது''தான் என்று இறைவார்த்தையில் கூறப்படுகிறது
சிந்தனைக்கு.
பல நேரங்களில், நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகளை நமக்குப் பிடிப்பதில்லை. அவர்களும் அவையும் நமக்குச் சவால்களாக இருப்பதோடு நமக்கு நெருடலை ஏற்படுத்தி நம்மை அழிக்கவும் செய்கிறார்கள், செய்கின்றன. நமக்கு வெளியிலிருந்து வரும் இவர்களை, இவற்றை நம்மால் கட்டுப்படுத்த இயலாது என்றாலும், இவர்களுக்கு, இவற்றுக்கு நாம் எப்படி பதிலிறுக்கிறோம் என்பதை நாம் கட்டுப்படுத்த இயலும். எதிர்வினை குறைத்து நேர்முகமான பதிலிறுப்பு செய்ய நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
எருசலேமின் அழிவும், உரோமையின் (பாபிலோன்) அழிவும் நம்பிக்கையாளர்களை அச்சுறுத்துகிறது. இருந்தாலும் அவர்கள் தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாகவும் பொறுமை காப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாழ்வின் இக்கட்டான தருணங்களில் நம் அமைதியைத் தக்க வைத்துக்கொள்தல் நலம்.
இறைவேண்டல்.
அன்பான ஆண்டவரே! ‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்’ என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாங்கள் நேர்மையாய் வாழ்ந்து, - மானிட மகனிடமிருந்து – இறையருளை நிறைவாகப் பெற அருளைத் தாரும். ஆமென்.