விடாமுயற்சி, பொறுமை, பணிவு இறைவேண்டலின் சாரம்! ஆர்.கே. சாமி | VeritasTamil

16 நவம்பர் 2024                                                                                                           
பொதுக்காலம் 32ஆம் வாரம் –சனி
 
3 யோவான்  5-8
லூக்கா 18: 1-8 
 

விடாமுயற்சி, பொறுமை, பணிவு இறைவேண்டலின் சாரம்! 


முன்னரை.


யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம் 15 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு மிகச் சிறிய திருமுகம். இத்திருமுகம் ‘காயு’ எனப்படும் தனிநபருக்கு எழுதப்பட்டது.  
 
முதல் வாசகம்.

இன்று நாம் ஒரு சீடரின்  இரு கடமைகளைப் பற்றிய அறிவுறுத்தைப்படுகிறோம். அவற்றுள் ஒன்று,   கடவுளின் நற்செய்தியை மேலும் பரப்ப உதவுவது,  மற்றொன்று, விடா முயற்சியுடன்  இறைவேண்டலில் ஈடுபடுவது.
திருத்தூதர் யோவான் அல்லது அவரது மூப்பர்களில்  ஒருவரால் எழுதப்பட்ட  மூன்றாவது திருமுகத்தில்  நற்செய்திப் பணியாளர்களுக்கு காயு என்பவர்  கொடுத்த ஆதரவைப் பாராட்டுகிறார்.  கிறிஸ்தவ மறைப் பணியாளர்களை வரவேற்று விருந்தோம்பல் செய்து வந்தவர் காயு.  
காயு,  தனது உள்ளூர் நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல,  நற்செய்தியைப் பரப்புவதற்காக அனுப்பப்பட்ட மற்றவர்களுக்கும்  ஆதரவாக  இருந்ததாகத் தெரிகிறது.  மறைபரப்புப்  பணிக்காக அனுப்பப்படுபவர்களுக்கு தனது ஆதரவைத் தொடருமாறு காயுவை யோவான் ஊக்கமூட்டுகிறார். மேலும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபடுவோருக்கு  உதவுவது நம்பிக்கையாளர்களின் கடமை என்றும் அவர் உணர்த்துகிறார். 

நற்செய்தி.

எப்பொழுதும் தொடர்ந்து இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் இறைவேண்டலைக்  கைவிடாமல் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்க  இயேசு தம் சீடர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார். அதாவது “ஓர்  ஊரில் கடவுளுக்குப் பயப்படாத, மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரு நீதிபதி இருந்தார் என்றும், அதே  ஊரில் இருந்த ஒரு கைம்பெண் அவளது  எதிரிக்கு எதிராக நியாயமான முடிவைக் கேட்டு அந்த நீதிபதியிடம் வந்து கொண்டே இருந்தாள் என்றும், நீண்ட காலமாக, நீதிபதி விசாரனையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார் என்றும் இயேசு உவமையைத் தொடர்கிறார்.
நிறைவாக அவளது தொடர்ச்சியான  நச்சரிப்பைப் பொறுத்துகொள்ளா இயலாமல்,  'நான் கடவுளுக்கு பயப்படுவதில்லை அல்லது மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் இந்த விதவை (கைம்பெண்)  என்னைத் தொந்தரவு செய்கிறார். அவள் என்னைத் தொந்தரவு செய்யாமல் இருக்க அவள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் என்று அந்த நீதிபதி கூறுகிறார்.   
இந்த உவமையைக் கூறியதும்,  இயேசு,  “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி இறைஞ்சி  மன்றாடுவோரின் இறைவேண்டலுக்குக் கடவுள் செவிசாய்க்க மாட்டார? என்ற கேள்வியை எழுப்புகிறார். 
தொடர்ந்து, விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றும்,  மானிடமகன் வரும்போது மண்ணுலகில் இத்தகைய நம்பிக்கையைக் காண்பாரோ?” என்று முடிக்கிறார். 
 
சிந்தனைக்கு.

இயேசு முன்வைத்த உவமையில் வரும்  அக்கறையற்ற நீதிபதியைப் போலல்லாமல், கடவுள் நம்மீது அன்பும் அக்கறையும் கொண்டவர் என்பதை வலியுறுத்துகிறார்.  கடவுள் நமது மன்றாட்டைக் கேட்டு, நமக்கு தேவையானதை நிறைவேற்றுவதோடு  நமக்குத் தகுதியானதை விட மிகச் சிறந்ததைக் கொடுக்க  விரும்புகிறார் எனும்  உண்மையை இயேசு எடுத்துரைக்கிறார்.


இறைவேண்டலானது, நமது வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இறைவேண்டல் என்பது நமதுத் தேவைகளுக்காக மன்றாடுவது மட்டுமல்ல. அது நம் வாழ்வில் கடவுளை அண்டியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்கிறது. 
முதல் வாசகத்தில், காயு என்பவர் குறிப்பாக மறைப்பணியாளர்களுக்காக இயன்ற உதவிகளைச் செய்ய பணிக்கப்படுகிறார். அந்த உதவிகளில் ஒன்று மறைப்பணியாளர்களுக்காக இடைவிடாது இறைவேண்டல் செய்வதாகும். ஆகவே,  நமது இறைவேண்டலில் பொது பொதுநலம் பெருக்கெடுக்க வேண்டும். திருத்தூதர் யாக்கோபு, ‘ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் (5:16) என்கிறார். 
இறைவேண்டலை சொற்றகளால் அழகுப்படுத்துவதோ, அதில் நமது மொழித்திறனை வெளிப்படுத்துவதோ முதன்மையான நோக்கமாக இருப்பதை அகற்ற வேண்டும். இவ்வாறு ஊர் மெச்ச இறைவேண்டல் செய்வதால் கடவுள் மயங்கிவிடமாட்டார் என்பதும், வார்த்தைகளின் எண்ணிக்கையால் கடவுள் ஒருபோதும் ஈர்க்கப்படுவதில்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.
அன்னை மரியாவை ‘இடைவிட சாகய மாதா’ என்றழைப்பதுண்டு. இங்கே ‘சகாயம்’ என்ற வடச் சொல்லின் பொருள் ‘உதவி’ என்பதாகும். ஆம் , அன்னை மரியா தமது இடைவிடா பரிந்துரை இறைவேண்டுதல்களால் நமக்காக இப்பொழுதும் நமது மரண வேளையிலும் வேண்டிக்கொண்டிருக்கிறார். அது அவர் நமக்கு செய்யும் பேருதவியாகும். 
நிறைவாக, அலகை இவ்வுலகில் அலைமோதிக்கொண்டிருக்கிறான். அலைகள் போன்று நமது ஆசைகளும்  ஓயாதிருக்கையில், நம்மை வீழ்த்த தகுந்த நேரத்ததுக்காகக் காத்திருக்கிறான்.   நமது சொந்த ஆற்றலால் அவனை வீழ்த்துவது கடினம். எனவே, சோதனை மற்றும் தீமையிலிருந்து நமக்கு ப் பாதுகாப்பைத் தேடுவதற்கு தந்தையிடம் மன்றாட அழைக்கிறார். ஏனெனில் அவரே நமது கேடயமும், அரணுமாக உள்ளார்.  
 
இறைவேண்டல்.

இறைவேண்டல் செய்ய எங்களுக்குக் கற்றுத் தந்த அன்பு இயேசுவே, இறைவேண்டலில் என்னில் விடா முயற்சி நிலவவும்  கேட்பது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் என்னில் மேலிட  எனக்கு துணைபுரிவீராக.  ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                              +6 0122285452