இயேசுவின் எளிய பிறப்புக்கு எளிய மனதை ஏற்போம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் 4-ம் வாரம்–செவ்வாய்
2 சாமுவேல் 7: 1-5, 8b-12, 16
லூக்கா 1: 57-66


இயேசுவின் எளிய பிறப்புக்கு எளிய மனதை ஏற்போம்!

முதல் வாசகம்
 
இன்றைய காலை பொழுதுக்கான முதல் வாசகம் (டிசம்பர் 24 காலை) இன்னும் திருவருகைக் காலத்துக்கான வாசகமாக அமைகிறது.   தாவீது கடவுளுக்கு அழகியதொரு வீட்டைக்கட்ட முற்பட்டார். கடவுளோ, தாவீது கடவுளுக்கு ஒரு வீட்டைக் கட்டுவதை விட, தாவீதின் சொந்த வழிமரபிலிருந்து கடவுள், தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்ற வாக்குறுதியை நாம் கேட்கிறோம்.  தாவீதின் குடும்பமே மெசியாவின் வருகைக்கு அடிதளமாக இருக்கும் என்ற செய்தி பகிரப்படுகிறது. 
கடவுள் நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக தாவீதுக்கு, ‘உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்’ என்றும், ‘என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்’ என்று வாக்குறுதியை அளிக்கிறார். 

நற்செய்தி.

நற்செய்தி வாசகம், நேற்றைய தொடர்ச்சியாக வருகிறது.  செக்கரியாவின் மகனின் விருத்தசேதனத்தின் போது, செகரியாவுக்குக்  குரல் கிடைக்கப்பெற்றதும்,  அவருடைய மகனுக்கு யோவான் (திருமுழுக்கு)  என்று பெயரிடப்பட்டதும், பழங்கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக கடவுளின் மக்களை ஆட்சி செய்ய தாவீதின் வழிமரபைக் கொண்டதற்காக  செக்கரியா கடவுளைப் புகழ்கிறார்.  
கடந்தகால இறைவாக்கினர்கள் மெசியா பற்றி உரைத்த இறைவாக்குகளை  நிறைவேற்றுவதில் தனது சொந்த மகன் யோவான் வகிக்கும் சிறப்புப் பங்கையும் செக்கரியா உணர்ந்தார், ஏனெனில் யோவான் மெசியாவின் வழியை   தயார் செய்ய முன் செல்வார் என்பதை அறிந்திருந்தார். 

சிந்தனைக்கு.

ஒரு புதிய குடியிருப்புப் பகுதியை உருவாக்க வேண்டுமெனில், முதலில் காட்டை அழித்து அங்கு பாதைகள் அமைக்க வேண்டும். இல்லையேல் கட்டுமானப் பணிக்கான வாகனங்கள் உள்ளே சென்று வர இயலாது. பாதைகள் செம்மைப்படுத்தாவிடில் உள்ளே ஊடுருவ முடியாது.   பாதைகளைச் செம்மைப்படுத்துவதென்பது இடையூராக இருக்கும் கரடுமரடான கற்களை  அகற்றி, பள்ளங்களை நிரப்பி சமப்படுத்துவாகும்.  
மெசியா மக்களைச் சென்றைடைய அவருக்கான பாதை செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்று கடவுளின் திட்டதில் திருமுழுக்கு யோவான் அழைக்கப்பட்டார். இவர் மெசியாவுக்கான முன்னோடி. பல ஆண்டு காலமாகக் காத்திருந்த மெசியா அடுத்து வரவுள்ளார் என்பதை அறிவிக்கும் இறுதி இறைவாக்கினர் என்றும் கூறலாம். 
முதல் வாசகத்தில், கடவுள் தாவீதின் வழிமரபை மெசியாவின் வருகைக்கு அடிதளமாக தயாரித்திருந்தார் என்று கண்டோம்.  
மெசியாவின் வருகை திடீரென்று ஏற்பட்டதல்ல. அது முன்குறிக்கப்பட்டதும் தயாரிக்கப்பட்டதுமாகும். பலர் மெசியாவின் வருகைக்கான ஆயத்தப்பணிக்கு அழைக்கப்பட்டனர். இக்காலத்தில் அதே மெசியா நமது உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்கவுள்ளார். நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? எத்தகைய ஆயத்தம் செய்கிறோம்? கரடுமரடான நமது உள்ளத்தைச் எப்படி செம்மைப்படுத்துகிறோம்?
கடவுள் இறுதி நேரத்தில் மெசியாவின் பிறப்புக்குச் செய்த ஆயத்தம் ஒரு மாட்டுத்தெழுவமும் அதனுள் ஒரு முன்னனையும் தான். எளிமை, எளிமையிலும் எளிமை. அங்கே அவர் பிறக்க வேண்டும் என்று கடவுள் (இயேசு) விரும்பினார். இறுதி நேரத்திலும் அவர் பிறக்கவுள்ள இடத்தை அவர் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. இயேசுவின் வழிமரபில் தாவீது அரசரும் சாலமோன் அரசரும் இருந்தனர். மிகவும் புகழ்பெற்ற அரசர்களாகத் திகழ்ந்தனர். அத்தகையோரின் செல்வாக்கை இயேசு ஏற்கவில்லை. 
மெசியாவின் வழியைத் தயாரிக்கத் தோன்றிய திருமுழுக்கு யோவானும் பாலைநிலத்தில் சந்நியாச வாழ்வு வாழ்ந்து, இயேசுவின் தாழ்ச்சிமிகுப் பணியாளராகவே திகழ்ந்தார். 
நாளை கிறிஸ்து பிறந்தப் பெருவிழாவைக்  கொண்டாட நாம் தயாராகும் போது, நாமும் செக்கரியாவைப்போல "தூய ஆவியால் நிரப்பப்பட" அழைக்கப்படுகிறோம், இதனால் நாமும் இறைவனின் இறைவக்குரைக்கும் தூதராக செயல்பட முடியும்.  ‘கிறிஸ்மஸ்’ என்பது ஒருநாள் கொண்டாட்டமாக மாறிவிடாமல், அது பாஸ்கா பெருவிழாவில் நம்மை பெரு மகிழ்ச்சிக்கும் விடுதலை வாழ்வுக்கும் இட்டுச் செல்லும் தொடக்க விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். கிறிஸ்மஸ் ஆண்டுதோறும் வந்தபோகும் ஒரு பெருவிழா அல்ல. மாறாக, அது நம்மில் இருந்து நம்மை சீர்படுத்தும் பெருவிழா.

இறைவேண்டல்.

எனது உள்ளதிலும் இல்லதிலும் மனுவுருவான  ஆண்டவரே, நீர் என்னுடன் பகிர்ந்து கொள்ளும் மிகப்பெரிய கொடை உமது வரவு என்பதை அறிந்துணர்ந்து, உமது பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட எனக்கு எளிய உள்ளத்தைத் தந்தருள்வீராக. ஆமென்.

(நாளைய தினம் அன்றாட இறைவார்த்தைப் பகிரப்படாது)
 கிறிஸ்துவில் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இயேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில், நானும் வெரித்தாஸ் பணிக்குழவினரும் மகிழ்கிறோம். 

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 012 228 5452