அறிவுத்திறன் சீடத்துவத்தின் துடுப்பு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் 3-ம் வாரம் - திங்கள்
எண்ணிக்கை 24: 2-7, 15-17a
மத்தேயு 21: 23-27


அறிவுத்திறன் சீடத்துவத்தின் துடுப்பு!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் வரும்  ‘பிலயாம்’ அந்தக் காலத்தில் மிகப்பெரிய இறை தூதராக இருந்தார். அவரால்  சபிக்கப்படுபவர்கள் அழிவர். எகிப்தில் அடிமைத் தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மோசே வாயிலாய் மீட்டுக் கொண்டு வந்தார். ஏறக்குறைய ஆறு இலட்சம் எனும் எண்ணிக்கையில் இருந்த அவர்கள் வழியில் மோவாபிய சமவெளிகளில் தங்கினார்கள். பெருங்கூட்டமான இஸ்ரயேலரைப் பார்த்து மன்னன் பாலாக் பயந்தான். இஸ்ரயேல் மக்களை விரட்டியடிக்க நினைத்தான். எனவே, அவர்களைச் சபிக்க பிலயாமை அழைத்தான்.
இன்றைய வாசகப்  பகுதியில் பிலேயாம் என்ற இறைவாக்கினர் இஸ்ரயேலர்களை சபிப்பத்ற்குப் பதிலாக அவர்கள் ஆசீர்வதிக்கிறார். இஸ்ரவேல் மக்கள் முகாமிடுவதைப் பார்த்தப் பிறகு, கடவுளின் ஆவி அவர் மீது இறங்கினார்.   இஸ்ரயேலர்களின் முகாமைப் புகழ்ந்து, அதை ஒரு நீரோடையின் அழகிய தோட்டங்களுக்கு ஒப்பிட்டு, கடவுளிடமிருந்து வரும் செழிப்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு இஸ்ரயேலரை  ஒப்பிட்டுப் பேசுகிறார்.   இதில், ஆண்டவரால் நடப்பட்ட கேதுரு மரங்கள்    வலிமையையும் உறுதியையும் குறிக்கிறது. பிலேயாம் இஸ்ரயேலர்   அடுத்து கானானியரோடு போராடி பெறவுள்ள  வெற்றியை முன்றிவிக்கின்றார்.  
ஒரு காலத்தில் சகுணம் பார்த்து எதாரத்தமாகக் குறி சொன்ன பிலயாம் இப்போது தூயஆவியால் ஏவப்பட்டு, உண்மையை உரைக்கிறார். வேற்று இனத்தவரான பிலயாம் இந்த இஸ்ரயேல் மக்களுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். சபிக்க அழைக்கப்பட்டவர் மனமாறினார். ஆம், பிலயாம் கண் திறக்கப்பட்டவர் ஆனார்.

நற்செய்தி.
  
இன்றைய நற்செய்தி,  இயேசுவுக்கும் தலைமை குருக்குளுக்கும்  மக்களின்  மூப்பர்களும்  இடையேயான தொடர்பை  விவரிக்கிறது, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? என்று வினவுகிறார்கள். ஏனெனில், அதற்கு முன்புதான் இயேசு எருசலேம்  கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
இவ்வாறு, இயேசு   அதிகாரத்துடன் சிலரை கண்டித்தார்.  அவர் கடவுளின் முழு அதிகாரத்துடன் கற்பிக்கிறார் என்பதை மக்கள் உணர்கிறார்கள்.  இத்தகைய அதிகாரத்துடன் இயேசு தனது ஊழியத்தை நடத்தும் விதத்தில் யூத சமயத் தலைவர்கள் மகிழ்ச்சியடையவில்லை.  இயேசுவோ, வட பகுதியான   கலிலேயாவிலிருந்து வந்தவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.  எனவே, அவர் யாரிடமிருந்து இந்த அதிகாரத்தைப் பெற்றார்  பற்றி ஆச்சரியப்படுகிறார்கள்.   இயேசுவோ,  தன் மீது கவனம் செலுத்தாமல், தன்னைக் கேள்வி கேட்பவர்கள் மீது கவனம் செலுத்துகிறார். 
திருமுழுக்கு யோவான்  ஊழியத்தின் அதிகாரத்தை மையமாகக் கொண்டு,  அவர்களைக் கேள்வி கேட்கிறார்.     திருமுழுக்கு யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?” என்று அவர் கேட்டார். அவர்கள் விண்ணிலிருந்து வநதது என்றால், பின்னர் நீங்கள் ஏன் அவரை ஏற்கவில்லை, நம்பவில்லை என்று மறுகேள்வி கேட்பர்.  ‘மனிதரிடமிருந்து’ வந்தது என்றார், திருமுழுக்கு யோவானின் படிப்பினையில் நம்பிக்கை கொண்ட  மக்கள்  அவரை எதிர்ப்பர்.   ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதினர்.  எனவே , அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்கிக்கொள்ளாமலிருக்க இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

சிந்தனைக்கு, 

 கடவுளின் செயலை நம்மால் எளிதல் புரிந்து கொள்ள முடியாது. இஸ்ரயேல் மக்களை 
 சபிக்க வரவழைக்கப்பட்ட பிலயாமை, அவர்களை ஆசீர்வதிக்கும் இறைவாக்கினராக மாற்றினார். அவ்வாறே, கிறிஸ்தவர்களைக் கொன்று குவிக்கப் புறப்பட்ட சவுலை வழிமறித்து, அதே கிறிஸ்தவச் சமூகங்களைக் கட்டி எழுப்பும் சிற்பியாக உருமாற்றினார். கெட்டதையும் நல்லதாக்கும் வல்லவர் அவர். நற்செய்தியில ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தில்  வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்த பின்பு, அவரிடம் வருகின்ற தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும், “எந்த அதிகாரத்தால் நீ இவற்றைச் செய்கின்றீர்?” என்று கேட்கின்றார்கள். இயேசுவுக்கு எல்லா அதிகாரமும் உண்டு (மத் 28: 18). அப்படியிருந்தும் அவர் அதை அவர்களிடம் சொல்லாமல், “யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் வந்தது?” என்று அவர்களிடம் கேள்விக் கனையை எய்தினார். 

இயேசு எப்போதும் முன்மதியோடு செயல்படுபவர்.  தன்னிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கின்றீர்?” என்று கேட்டவர்களிடம், விண்ணிலிருந்து அருளப்பட்ட அதிகாரத்தால்தான் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொன்னால், திருச்சட்டம் லேவி 24: 16ன் படி, அவர்  கடவுளை இழிவுபடுத்துகிறார் என்று குற்றம் சாட்டுவார்கள். எனவேதான், இயேசு திருமுழுக்கு யோவானை மேற்கோள் காட்டிப் பேசினார். முள்ளைமுள்ளால் தானே எடுக்க வேண்டும். 

சூதும் வாதும் வேதனை செய்யும் என்பார்கள். நாம்  சூதுவாக செய்யும் எதுவும் நமக்கே அழிவாக முடியும் என்பது இயற்கையின் நியதி.  உண்மையில்,  நாம் எதை விதைக்கின்றோமோ அதைத்தானே  அறுவடை செய்ய இயலும்.

இன்று நம்மிடம் நமது கத்தோலிக்க நம்பிக்கை குறித்து பலர் பல கேள்விகள் கேட்டு மடக்குவதைப் பார்க்கிறோம்.  அவர்களுக்கு எப்படி பதில் கூறுகிறோம் என்பது இன்றியமையாதது.  எந்தெந்த வழிகளில் நாம் மற்றவர்களால் சோதிக்கப்படுகிறோம்? அந்த சோதனைகளுக்கு நமது அணுகுமுறை என்ன?  என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.  புத்திசாலித்தனமான அணுகுமுறையை இயேசுவே இன்று நமக்குக் கற்றுத் தருகிறார். விவேகமற்ற சீடத்துவம் பாதை மாறச் சொய்யும்.


இறைவேண்டல்.


உண்மையின் பிறப்பிடமான  ஆண்டவரே, நீர் எனக்கு வெளிப்படுத்திய எல்லாவற்றிலும் நான் உறுதியாக நிற்கத் தேவையான அருளைத் தாரும். ஆமென். 
 
   
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452