“தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்”| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் முதல் வாரம் - திங்கள்
எசாயா 2: 1-5; - மத்தேயு 8: 5-11
“தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்”
இன்றை முதல் வாசகத்தில் எருசலேம் ஆலயத்தில் கடவுளால் வரவிருக்கும் ஆட்சியைப் பற்றிய ஏசாயாவின் வார்த்தைளை இஸ்ரயேலர் கேட்கின்றனர். கடந்த காலத்தில் அவர்கள் உலக அரசர்களால் ஆளப்பட்டனர். அந்த அரசர்களோ அவர்களைத் தவறான பாதைகளுக்கு வழிவகுத்தனர். எனவே, கடவுள் மீண்டும் அவரது நல்லாட்சியை நிறுவ வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அங்கு, போரின் கருவிகள் உணவு உற்பத்திக்கான கருவிகளாக மாற்றப்பட்டு, அவை அனைவருக்கும் பயனளிக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.
நற்செய்தி
மத்தேயு நற்செய்தியில், இயேசு ஒரு யூதர் அல்லாத புறவினத்தாரான இராணுவ அதிகாரியைச் சந்திக்கிறார், அவர் அவரிடம் ஓர் உதவியைக் கேட்கிறார் - அவருடைய ஊழியரைக் குணப்படுத்தும்படி வேண்டுகிறார்.
ஓர் உண்மையான யூதர் ஒரு புறவின்தாரனின் வீட்டிற்குள் நுழைவது ஆகாத ஒன்று. ஏனென்றால் யூதர்கள் "நம்பிக்கைற்ற புறமதத்தவர்களை" விட சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர். அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவின் உதவியை நாடினாலும், இயேசு தன் வீட்டிற்குள் வர தான் தகுதியற்றவன் என்று கூறி தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். ஐயா, ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்’ என்ற நம்பிக்கை வார்த்தையை வெளிப்படுத்துகிறார்.
இயேசுஅந்தப் புறவினத்தாரின் நம்பிக்கையைப் புகழ்ந்து, அவருடைய சீடர்களிடம், இதுபோன்ற பலபுறவினத்தார் தங்கள் நம்பிக்கையின் காரணமாக கடவுளின் ஆட்சியில் மரியாதைக்குரிய இடத்தைப் பெறுவார்கள் என்றும், யூதர்களால் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
யூதேயா உரோமையர்களால் ஆளப்பட்ட காலம் அது. எங்கும் உரோமை படைவீரர்களும் அவர்களைக் கண்காணிக்க நூறு பேருக்கு ஒரு தலைவருமாகப் பொறுப்பில் இருந்தனர். இத்தகையத் தலைவர் நூற்றுவத் தலைவர் என்று அழைக்கப்பட்டார். இவர்கள் யூதர் அல்லாதப் புறவினத்தாராக இருந்தனர்.
இவர்களில் ஒருவர்தான் இன்றைய நற்செய்தியில் இயேசுவைச் சந்தித்து தனது உழியர் ஒருவரைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறார். நூற்றுவர் தலைவர் உதவி கேட்ட உடனே, இயேசு அவருடன் வருவதாக வாக்களிக்கிறார். அதற்கு அவர் தகுதியற்றவர் என்றும், அதற்குப் பதிலாக அங்கிருந்தே ஒரு வார்த்தை சொன்னால் போதும் தன்னுடைய ஊழியன் நலமடைவான் என்கிற அந்த நூற்றுவர் தலைவனின் நம்பிக்கையால் இயேசு வெகுவாக ஈர்க்கப்படுகிறார்.
நூற்றுவர் தலைவர் தம் சொந்த நலனுக்காக இயேசுவைத் தேடி வரவில்லை. அந்த அதிகாரி இயேசுவிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவரிடம் துலங்கிய நம்பிக்கை இயேசுவின் இனத்தாராகிய யூத மக்கள் சிலரிடம் காணப்பட்ட நம்பிக்கையைவிட அதிக வலுவுள்ளதாய் இருந்ததை இயேசு கண்டார்.
ஓர் உயர்ந்த பதவியில் உள்ளவர் இயேசுவிடம் தன்னைத் தாழ்த்திக்கொண்டு பணிந்துபோகிறார். தன் ஊழியனுக்காக பரிந்து பேசுகிறார். ''ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்’ என்கிறார். இந்த நூற்றுவர் தலைவனின் வார்த்தைகளே திருப்பலியில் நமது தாழ்ச்சியை நற்கருணை ஆண்டவருக்கு முன் வெளிப்படுத்தும் மன்றாட்டாக உள்ளது.
நாம் கொண்டிருக்கும் பட்டங்களும். பதவிகளும். செல்வங்களும் கடவுள் முன் எடுபடாது என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் சான்று பகர்கிறது. லூக்கா முதலாம் அதிகாரத்தில் காணப்படும் மரியாவின் பாடலில், அன்னை மரியா இவ்வாறு உரைக்கிறார்.
‘உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்’
முதல் வாசகத்தில் இஸ்ரயேலரைத் தவறாக வழிநடத்திய, அதிகாரத்தின் உச்சியில் அரசர்களை கடவுள் அழித்தார். இரக்கம், நேர்மையும் கொண்ட புதியதொரு அரசை ஏற்படுத்த உள்ளதாக வாக்களித்தார்.
மூர்க்கத்தனமும் ஆனவமும் கடவுள் முன் நிலைகாது. அவை நிச்சயம் தவடுபொடியாக்கப்படும். பாபிலோன், கிரேக்கம், உரோமை அரசுகள் இன்று உலகில் இல்லை.
‘கிரீடம் இல்லாமல் ஆள்வதற்குப் பெயர்தான் தாழ்ச்சி’ என்பார்கள், இது நமது குடும்ப வாழ்வுக்கும் பொருந்தும். எங்கே தாழ்ச்சி உள்ளதோ அங்கே மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. கடவுள் தன் மகனின் பிறப்புக்குத் தயாரித்த இடம்தான் தீவனத்தொட்டி. அதை ஏற்றவர்தான் இயேசு ஆண்டவர். அவர் தந்தையோடு போராடி வேறு இடத்தைக் கேட்கவில்லை.
இந்த திருவருகைக் காலத்தில் தாழ்ச்சி நம்மில் குடிக்கொள்ள முயற்சி செய்வோம். முயற்சி திருவினையாக்கும்.
இறைவேண்டல்
இரக்கத்தின் ஆண்டவரே, இயேசுவே, தாழ்ச்சியே உருவான நூற்றுவர் தலைவன் போல், நானும் என்னிலும், என் குடும்பத்திலும், சமூகத்திலும் உமக்கு உகந்த ஊழியனாக புத்தாக்கம் பெற அருள்புரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452