இயேசுவை நாம் உண்மையாக அன்பு செய்கிறோமா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

இன்றைய வாசகங்கள்(11.05.2023)  
 பாஸ்கா - 5ஆம் வாரம் வியாழன் 
மு.வா: திப:15: 7-21
ப.பா: திபா :96: 1-2. 2-3. 10
ந.வா:யோவான் :15: 9-11

 இயேசுவை நாம் உண்மையாக அன்பு செய்கிறோமா?

"நான் உன்னை அன்பு செய்கிறேன்" என எளிதில் கூறிவிடலாம். ஆனால் அதை மெய்ப்பித்துக் காட்டுவது மிகக் கடினம். பொதுவாக நாம் யாரை அன்பு செய்கிறோமோ  அவர்களது விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அவர்களுடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற முற்படுவோம். அதன் மூலம் நாம் அவரிடம் கொண்டுள்ள அன்பை மெய்ப்பிக்க முயற்சி செய்வோம். அப்படியானால் இயேசுவிடம் நாம் கொண்டுள்ள அன்பை எவ்வாறு மெய்பிக்கப் போகிறோம் என்பதைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."
என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இயேசுவோடு உள்ள அன்பில் நாம் நிலைத்திருக்க வேண்டுமெனில் நாம் அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். இயேசு தந்தைக் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தந்தையின் அன்பில் இணைந்திருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இயேசு நமக்குக் கொடுத்த கட்டளை எது? அது அன்புக் கட்டளையே. நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யும் போது இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம். புரிந்து கொள்ளுதல்,மன்னித்தல்,ஒருவரை தன்னுடைய மறுஉருவமாகப் பாவித்து அன்பு செய்து வாழ்தலே இயேசு நமக்கு அளித்த கட்டளை. இக்கட்டளையை நாம் நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுகின்ற பொழுது நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கிறோம். அவரை அன்பு செய்கிறோம். 

இன்று நம் வாழ்வை அலசிப்பார்ப்போம். இயேசுவை அன்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் கட்டளைகளை நிறைவேற்றாமல் இருந்தால் அவரை அன்பு செய்கிறேன் என சொல்வதில் அர்த்தமில்லை. நாம் செயலில் அன்பர்களாய் விளங்குவோம். பிறரை அன்பு செய்து அதன் மூலம் இயேசுவிடம் நம் அன்பை வெளிப்படுத்துவோம்.

 இறைவேண்டல்
இயேசுவே உமது அன்புக் கட்டளையைக் கடைபிடித்து உம்மோடு அன்புறவில் நிலைத்திருக்க வரம் தாரும் ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்