பணியாளர்களாய் வாழ்வோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-நான்காம் வியாழன்
மு.வா: திப:13:13-25
ப.பா: திபா :88:2-3,21,22,25,27
ந.வா:யோவான் :13:16-20
பணியாளர்களாய் வாழ்வோம்!
இன்றைய உலகில் ஒருவருக்கு கீழ் இன்னொருவர் இருப்பது என்பதே பெரிய இழுக்காகக் கருதப்படுகிறது. தொண்டர்கள் விரும்புவது தலைவர்களாக மாறவே. தலைவர்கள் விரும்புவது எப்போதும் தலைவர்களாக இருக்கவே. தொழிலாளர்கள் எண்ணுவது முதலாளிகளாக மாற. முதலாளிகள் விரும்புவது அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள.
இவற்றையெல்லாம் தாண்டி நம்மை பிறர் முன் நம்மை சிறந்தோராக, உயர்ந்தோராக காட்டிக் கொள்ளவே நாம் விரும்புகிறோம். ஆனால் நிச்சயம் நாம் சிறந்தோராகவும் உயர்ந்தோராகவும் வாழலாம். எப்போது தெரியுமா? நாம் இயேசுவைப் போல பணியாளராய் இருந்தால்!
அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி பகுதியானது இயேசு தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவிய பிறகு கூறப்பட்ட வார்த்தைகளாகும்.பணியாளர் தலைவரைவிட உயர்ந்தவர் அல்லர். தூது அனுப்பப் பட்டவர் அனுப்பியவரை விட சிறந்தவர் அல்ல என இயேசு கூறுகிறார். இயேசு தந்தையாம் கடவுளை தன் தலைவராகவும் தன்னை அனுப்பியவராகவும் கூறி தந்தைக்கு தன்னை பணியாளராகவும் அவரால் தான் அனுப்பப்பட்டதாகவும் இங்கே விளக்கி தந்தையை விட தான் உயர்ந்தவர் அல்ல என்ற நிலையை தன் சீடர்களுக்கு விளக்குகிறார்.
இவ்வாறு இயேசு கூற காரணமென்ன? இயேசுவுடைய சீடர்களும் தங்களை தலைவர்களாகப் பாவிக்காமல் இயேசுவைப் போல கடவுளுக்கும் கடவுளுடைய மக்களுக்கும் தங்களைத் தொண்டர்களாக எண்ண வேண்டும் என்பதற்காக. தாழ்ச்சியோடு பணியாளர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக.
சுருங்கக்கூறின் நம் நிலை எதுவென அறிந்து அதை ஏற்றுக்கொண்டால் நாம் கடவுளின் சிறந்த பணியாளர்களாய் வாழ முடியும் என்பதே இன்று நமக்கு கடவுள் தரும் அழைப்பு.
முதல் வாசகத்தில் நாம் காணும் பவுலடியார் தன்னைப் பெரியவராய் தலைவராய் ஒருகாலத்தில் காட்டிக்கொண்டார். ஆனால் தன்னிலை உணர்ந்து கடவுளிடம் தன்னைத் தாழ்த்தியதால் கடவுளின் வல்ல செயல்களை எடுத்துரைக்கும் பணியாளரானார். எனவே நாமும் கடவுளுக்கும் நம்மோடு வாழ்பவர்களுக்கும் நல்ல பணியாளர்களாய் இருப்போம். அன்பு பணியாளர்களாய் வாழ முயற்சிப்போம். அந்நிலை நம்மை கடவுளின் முன் உயர்த்தும்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உமக்கும் எம் சக சோதரர்களுக்கும் முன் இயேசுவைப்போல தாழ்ச்சியுள்ள அன்புள்ள பணியாளர்களாய் வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்