சாட்சிய வாழ்வால் இயேசுவை எடுத்துரைப்போம் ! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-நான்காம் புதன்
திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் புனித யாக்கோபு விழா
மு.வா: 1கொரி 15:1-8
ப.பா: திபா :18:2-5
ந.வா:யோவான் :14:6-14
சாட்சிய வாழ்வால் இயேசுவை எடுத்துரைப்போம் !
இன்று திருஅவையோடு இணைந்து இயேசுவின் பன்னிரு சீடர்களில் இருவருடைய விழாவைக் கொண்டாடுகிறோம். அவர்கள் புனித பிலிப்பு மற்றும் புனித யாக்கோபு ஆகியோராவர்.இவர்களுடைய வாழ்வும் பணியும் கிறிஸ்துவை பலருக்கு எடுத்துரைத்து நம்பிக்கை கொள்ளச் செய்தன என்றால் அது மறுக்க முடியாதது.
முதலாவதாக திருத்தூதர் பிலிப்பு. இயேசுவால் முதன் முதலில் அழைக்கப்பட்டவர் புனித பிலிப்பு என விவிலியம் கூறுகிறது. இவர் சற்று அறிவுக்கூர்மை உடையவராக இருந்தார். இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த போது இருநூறு தெனாரியத்திற்கு உணவு வாங்கினாலும் இத்தனை மக்களுக்கும் பற்றாதே என அறிவுக்கூர்மையோடு சிந்தித்தார். இன்றைய நற்செய்தியில் தந்தையை எங்களுக்கு காண்பியும் எனக் கேட்பது, தந்தையைக் காண வேண்டும் என்ற அவருடைய தாகத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. இவருடைய இக்கேள்வி தான் "நானும் தந்தையும் ஒன்றே" என இயேசுவால் ஆணித்தரமாக பேச வைத்தது எனலாம்.
இயேசுவிடம் நத்தனியேலை அறிமுகம் செய்தவரும் இவரே. எத்தியோப்பிய அமைச்சருக்கு இறைவார்த்தையைப் போதித்து இயேசுவை எடுத்துரைத்து திருமுழுக்கு வழங்கினார் என திருத்தூதர் பணியில் நாம் வாசிக்கிறோம்.
என்னை நம்புகிறவர் என்னிலும் பெரிய காரியங்களைச் செய்வான் என்று இயேசு சொன்னதை தன் வாழ்க்கையில் எண்பித்தவர் புனித பிலிப்பு.பிரிஜியா நாட்டில் மக்களைத் துன்புறுத்திய கருநாகத்தை தன் சிலுவையால் துரத்திய போது, கருநாகம் தன் விஷத்தை மக்கள் மே ல் கக்கியதால் பலர் மாண்டனர். பிலிப்பு தன் இறைவல்லமாயால் இறந்த அத்தனை பேரையும் உயிர்த்தெழச் செய்தார் என வரலாற்றில் வாசிக்கிறோம். இவ்வாறு பிலிப்பு தன் வாழ்வாலும் போதனையாலும் பிரிஜியா, ரஷ்யா மற்றும் துருக்கி போன்ற பகுதிகளில் இயேசுவாம் நற்செய்தியை எடுத்துரைத்தார். மறைசாட்சியாய் சிலுவையில் மரித்தார். இறக்கும் போது இயேசுவின் வழியிலே தன்னைக் கொன்றவர்களை மன்னித்தார்.
இரண்டாவதாக புனித யாக்கோபு. இவர் சின்ன யாக்கோபு என அழைக்கப்படுகிறார். இவர் நீதிமான் எனவும் அழைக்கப்பட்டவர். இவர் தன் வாழ்வில் நேர்மையாளராய்த் திகழ்ந்தவர்.தூய வாழ்வு வாழ்ந்தவர். இவரும் இயேசுவின் விண்ணேற்புக்கு பின் நற்செய்தியை பறைசாற்றி பலரும் இயேசுவை நம்பச் செய்தார். பிற இனத்தவருக்கும் நம்பிக்கையால் மீட்பு உண்டு என்பதை இவர் ஆணித்தரமான நம்பினார். இவருடைய பங்கேற்பு எருசலேம் திருச்சங்கத்தில் மிக முக்கியமானது. இயேசுவை நம்பி அவரிம் வரும் புற இனத்தார் விருத்தசேதனம் செய்யத் தேவையில்லை எனக் கூறினார். இவர் எழுதிய திருமுகத்திலே நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும், இயேசுவின் சீடர் பாரபட்சம் பார்க்காதவராய் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.இவர் கல்லால் எறியப்பட்டு மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
இவர்கள் விழாவைக் கொண்டாடும் நாமும் நம் சொல்லாலும் செயலாலும் இயேசுவை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். நம்பிக்கையோடும் துணிச்சலோடும் அவரை அறிவித்து இயேசுவின் சாட்சிகளாய்த் திகழ வேண்டும் என்பவையே நமக்கான இன்றைய அழைப்பு. நானும் தந்தையும் ஒன்றே என்றார் இயேசு. அவ்வழியில் தந்தையின் மகிமைக்காய் இயேசுவோடு தாங்கள் இணைந்திருந்ததை புனிதர்களான பிலிப்புவும் யாக்கோபுவும் எண்பித்தார்கள். நாமும் இயேசுவோடு இணைந்துள்ளோம் என்பதை நம் சாட்சிய வாழ்வால் எடுத்துரைக்க நம்பிக்கையில் வளர்வோம். இயேசுவை எடுத்துரைப்போம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே! எம் சாட்சிய வாழ்வால் புனிதர்களான பிலிப்பு மற்றும் யாக்கோபுவைப் போல உம்மை பிறருக்கு எடுத்துரைக்க வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்