இதயத்தைத் திறந்து உதவி செய்வோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -நான்காம் வாரம் செவ்வாய் 
I: எசே:  47: 1-9,12
II: திபா: 46: 1-2. 4-5. 7-8
III: யோவா: 5: 1-3, 5-16

அன்று ஞாயிறு சந்தை. பல மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து  தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறாக பொருட்கள் வாங்க வந்திருந்தார் ஒரு நபர். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திடிரென உடலில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்த அவர் ஒரு கடையின் அருகிலே உட்கார்ந்து விட்டார். உதவிக்கு யாரையும் கூப்பிடக் கூட முடியவில்லை. அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலிருந்த கடைக்காரர் இம்மனிதர் அமர்வதைக் கண்டும் பொருட்படுத்தவில்லை. வெகு நேரமாகியும் அம்மனிதர் அவ்விடத்தை விட்டு நகரவில்லை. பலர் பார்த்தும் பார்க்காதது போல் சென்றனர். சந்தையும் முடிந்து பொருட்களை ஒதுங்க வைக்கும் போதுதான், அம்மனிதர் அருகில் சென்று பார்த்தனர் ஒருசிலர். அப்போது தான் தெரிந்தது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று.

பரப்பு நிறைந்த இந்த உலகில் நிற்பதற்குக் கூட நேரமில்லை. பின் எவ்வாறு பிறரைக் கவனித்து உதவுவது என்றுதான் நாம் அனைவரும் எண்ணுகிறோம். இயேசு வாழ்ந்த காலத்திலும் கூட மனிதர்கள் அவ்வாறு தான் இருந்தனர்.பெத்சதா குளம் அருகில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் படுத்த படுக்கையாய் இருந்த அம்மனிதன் ஏக்கத்தோடு நலம் பெற விரும்புகிறீரா என்ற கேட்ட இயேசுவிடம் கூறியது,"ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று  கூறினார்.

விவிலியத்தில் குறிப்பிடப்பட்ட அந்த இடம் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாகத்தான் இருந்திருக்கிறது. இயேசு குணமாக்கிய பின் கூட்டத்தில் மறைந்ததாகக் கூறப்பட்டுள்ளதை நாம் வாசிக்கிறோம். அப்படியிருக்க ஒருவர் கூட அம்மனிதர் குளத்தில் இறங்கி சுகம் பெற உதவவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரியது. அதுவும் 38ஆண்டுகள் உதவிக்காக யாரும் வரமாட்டார்களா என கண்ணீரோடும் வேதனையோடும் அம்மனிதர் தன் நாட்களைக் கழித்திருப்பார் அல்லவா? அவருடைய நிலையில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என சிந்தித்துப் பார்ப்போம்.

உலகம் பரபரப்பானதுதான். நாம் எல்லோருமே வேலைப் பளுக்களால் அல்லலுறுகிறோம்.
ஆனால் துன்பத்தில் இருக்கிறவர்களைக்  கண்டும் காணமல் செல்வது மனித நேய செயல்பாடு அல்ல. முடக்குவாதமுற்றவர் நெடுநாட்களாக துன்பப்படுவதைக் கண்ட இயேசு தாமாகச் சென்று உதவினார். நாமும் அவ்வாறு செய்தால்தான் இயேசுவின் சீடர்களாக முடியும். நாம் நமது என்ற குறுகிய வட்டத்திற்குள் நம்மை முடக்கி விடாமல் கஷ்டப்படுபவர்களுக்குக் ககரம் நீட்டி உதவுவோம்.

 இறைவேண்டல்
துயருறுவோரின் துணையே இறைவா! துன்புறுவோரின் ஏக்கங்களை உணர்ந்து கரம் நீட்டி இதயம் திறந்து உதவும் வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்