பிறரைப் பற்றிய எனது பார்வை உயர்ந்ததா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் -மூன்றாம் வாரம் திங்கள்
I: 1 அர: 5: 1-15
II: திபா 42: 1. 2.; 43: 3. 4
III: லூக்: 4: 24-30
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியைப் பற்றிய செய்திகள் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தன. அப்போது அம்மாணவியின் குடும்பப் பின்னணி ,அவருடைய இல்லம் எல்லாம் காண்பிக்கப்பட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பம். தந்தை கூலித்தொழிலாளி என கூறிக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த போது எனக்குள் "ஏன் ஏழை மாணவி, கூலித் தொழிலாளியின் மகள் நன்கு படிக்க முடியாதா? அவருக்கு திறமை இருக்காதா? குடும்பப் பின்னணிக்கு ஏன் இந்த ஊடகம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது? " போன்ற கேள்விகள் எழுந்தன. ஆம் நமது சமுதாயத்தைப் பொறுத்தவரை படித்தவர்களின் குழந்தைகளும் பணக்காரர்களின் குழந்தைகளும் மட்டும்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்ற பார்வை இன்றளவும் இருக்கிறது என்ற பதில் எனக்கு கிடைத்தது.
பல நேரங்களில் நம்மோடு வாழக்கூடிய நபர்களின் மதிப்புத் தெரியாமல் அவர்களை தரக்குறைவாக நினைக்கிறோம்.அவர்களைப் பற்றிய நம்முடைய பார்வை பல சமயங்களில் தவறாகவும் குறைவாகவுமே இருக்கிறது. பெரும்பாலும் எல்லோருக்கும் தனித்திறமை உண்டு என்பதை மறந்து பிறரைத் தரக்குறைவாக நடத்தி இருக்கிறோம். இத்தகைய மனநிலை தான் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் அவர் சொந்த ஊர் மக்களிடம் இருந்தது. இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்ட மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். அவரின் மதிப்பும் ஆற்றலும் தெரியாமல் அவரை குறுகிய வட்டத்துக்குள் பார்த்து ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். எனவே தான் ஆண்டவர் இயேசு "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" (லூக்கா 4:24) என்று கூறியுள்ளார்.
இயேசுவை ஏன் சொந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்? யூதர்களாகிய இயேசுவின் சொந்த ஊர் மக்கள் பிற இனத்தாரை மிகவும் தாழ்வாகக் கருதினர்.அவர்களைக் குறித்த ஒரு ஏளனப் பார்வை யூதர்களின் மனதில் நிலையாய் பதிந்திருந்தது. தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற மமதை அவர்களிடம் மேலோங்கி நின்றது.புற இனத்தவரை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. ஆனால் ஆண்டவர் இயேசு பிற இனத்தவரிடமுள்ள நற்பண்புகளைச் சுட்டிகாட்டி பெருமையாகப் பேசினார். அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத இயேசுவின் சொந்த ஊர் மக்கள் இயேசுவையும் ஏற்றுக்கொள்ளத் தயங்கினர்.
அதோடு மட்டுமல்லாமல் இயேசு இறைவாக்கினர் எலியா, எலிசா போன்ற சக்தி வாய்ந்த இறைவாக்கினர்களை எடுத்துக்காட்டாகக் காட்டி அன்றிலிருந்து இன்றுவரை யூதர்கள் தங்களின் குணத்தை மாற்றாமல் இருக்கும் உண்மைத்தன்மையைச் சுட்டிக்காட்டினார். உண்மை பல சமயங்களில் கசக்கத்தான் செய்யும். தங்களின் உண்மைத் தன்மையை எதிர்கொண்டு தவறுகளை ஏற்றுகொள்ள மனமில்லாத யூதர்கள் அன்று தன் மூதாதையர் செய்த அதே தவற்றை இயேசுவுக்கு எதிராய்ச் செய்தனர். அவரைப் பழிவாங்கத் துடித்தனர். அவர் மீது கோபம் கொண்டனர். இயேசுவின் உண்மையான மதிப்பு அவரின் போதனையின் ஆழம் போன்றவற்றை தெளிவாகப் புரிந்திருந்தால், நிச்சயமாக இயேசுவை ஏற்றிருப்பார்கள்.தங்கள் பார்வையையும் மாற்றி இருப்பார்கள். இயேசுவை ஏற்றிருந்தால் இயேசுவின் வழியாக மீட்பின் கனியை முழுமையாகச் சுவைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இயேசு தந்த மீட்பை முழுமையாகச் சுவைக்க வாய்ப்பினை இழந்தனர். ஏனெனில் இயேசுவின் மதிப்பை அவர்கள் உணராமல் இருந்தனர்.
இயேசு நம்மை மீட்க வந்த மீட்பர் என்பதை முழுமையாக நம்பி அவரைப் பின்பற்றும் பொழுது நிறைவான மகிழ்ச்சியையும் மீட்பின் கனியையும் சுவைக்க முடியும். இயேசுவின் மதிப்பீடுகளை மதித்து அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நம் வாழ்வில் நிறைவை காண முடியும். நம்மோடு வாழக்கூடிய மக்களில் பலர் சாதனையாளர்களாகவும் அசாதாரண திறன் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அவர்களை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்.அவர்களை உயர்வாகப் பார்க்க கற்று கொள்வோம். அவர்களின் தனித் திறமையை பாராட்டுவோம். அவர்களிடம் உள்ள உண்மைத் தன்மையை கற்றுக் கொள்வோம். நமது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது திருத்திக்கொள்ள முயலுவோம். அப்பொழுது நம் வாழ்வு வசந்தமாய் மாறும்.
இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்களோடு வாழக்கூடிய நபர்களை மதிப்புக் குறைவோடு நடத்தாமல், அவர்களுடைய தனித் திறமையை பாராட்டி, அவர்களைக் குறித்த சரியான பார்வை கொண்டிருக்க வரம்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்