இறைவனின் மாட்சியில் பங்கு கொள்ளத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
மு.வா: 2 கொரி: 4: 7-15
ப.பா: திபா: 126: 1-2. 2-3. 4-5. 6
நவ: மத்: 20: 20-28
இறைவனின் மாட்சியில் பங்கு கொள்ளத் தயாரா?
இன்றைய நாளில் தாய்த் திருஅவையோடு இணைந்து புனித சந்தியாகப்பருடையத் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.இவர் பெத்சாயிதா செபதேயுவின் மகனாக கலிலேயக் கடற்கரைப் பகுதியிலே வாழ்ந்து வந்தார். இயேசு இவரை அழைத்த உடன் அனைத்தையும் துறந்துவிட்டு அவருடைய சீடாராக பின்தொடர்ந்தார். இவர் உண்மையான சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர்பவராக இருக்கின்றார். தொடக்கத்தில் சீடத்துவ வாழ்வைப் பற்றி சரியான புரிதல் இல்லாவிட்டாலும் இயேசுவிடமிருந்து அதை அறிந்த பிறகு, உண்மையான சீடத்துவ மதிப்பீடுகளோடு இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டுக்கு சான்று பகர்ந்தார்.
இன்றைய நற்செய்தி புனித யாக்கோபுவின் எப்படி இருந்தது என்பதைப் பற்றி கூறுகின்றது. இயேசுவின் அரியணையில் தானும் தனது சகோதரரும்இடம் பெற ஆசைப்பட்டு தன் தாயார் மூலம் பரிந்துரை செய்தனர் என்பதை நாம் வாசிக்கின்றார். இது அவர் சீடத்துவத்தைப் பற்றிக் கொண்டிருக்கக்கூடிய புரிதலற்ற தன்மையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.இம் அவர் "இயேசுவின் ஆட்சியில்" பங்குகேட்டார். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையான சீடத்துவ வாழ்வு அவருடைய துன்க்கிண்ணத்தில் பருகுதல் என்பதை விளக்குகிறார். துன்பக்கிண்ணத்தைப் பருகுவதால் கிடைப்பது ஆட்சியில் பங்கு அல்ல மாறாக அவருடைய மாட்சியில் கிடைக்கும் பங்கு என்பது தான் சீடத்துவத்தின் உண்மையான பொருளாகும்.
"மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தமது உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் (மத். 20:28).
சீடத்துவ வாழ்வு என்பது தொண்டு ஏற்பதற்கு அல்ல என்ற சிந்தனையை இன்றைய விழா நாள் நாயகருக்கு ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டுகிறார். அரியணையில் அமர்வதன் வழியாக தொண்டு ஏற்கலாம் என்று நினைத்த இன்றைய புனிதர், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் தொண்டு ஆற்றுபவராக வாழத் தயாரானார். நற்செய்தி போதித்து அதன் மூலம் சமூகத்தில் சமத்துவத்தையும் நம்பிக்கையையும் விதைத்தார். இயேசுவின் சீடத்துவம் என்பது அன்பு, கனிவு, பொறுமை, நீதி, தாழ்ச்சி மற்றும் தூய்மை என்பதைப் புரிந்து கொண்டு மிகச்சிறந்ததிருத்தூதுப் பணி செய்தார். தான் செய்த இறையாட்சி பணிக்கு பரிசாக திருத்தூதர்களின் முதல் மறைச் சாட்சியாக மாற வாய்ப்பு பெற்றார்.துன்பக்கிண்ணத்திலிருந்து எங்களால் பருக இயலும் என்று கூறிய வார்த்தைகளை எண்பித்துக்காட்டினார்.
தொண்டு புரிதல் அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தன்னையே வெறுமையாக்குவதன் அடையாளம். இயேசுவின் ஒவ்வொரு போதனையும், புதுமையும், பாதம் கழுவும் நிகழ்வும், ஏன் சிலுவைச்சாவும் அவர் தம்மையே வெறுமையாக்கி தொண்டாற்றினார் என்பற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். ஆம் பிறருக்கு தொண்டாற்றுவதும் அன்றாட வாழ்வின் துன்பங்களை பொறுமையோடு சகித்துக்கொண்டு நம்பிக்கையோடு வாழ்வதும் சீடத்துவத்தின் அடையாளம். இவை கிறிஸ்துன் மாட்சியில் நம்மை பங்கேற்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.சீடர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவருமே நம்மையே வெறுமையாக்கி தொண்டாற்ற நம்மையே இறைபாதம் சமர்பித்து வேண்டுவோம். தொண்டாற்ற நமக்கு கிடைத்த அரிய அழைப்பே மட்பாண்டமாகிய நமக்கு கிடைத்த அரிய செல்வம் என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் மாட்சியில் பங்குகொள்ளத் தயாரா?
இறைவேண்டல்
தன்னையே வெறுமையாக்கி தொண்டாற்றிய இறையே உம்மைப் பின்பற்றி துன்பக்கிண்ணத்தில் பருகத்துணிந்த புனித யாக்கோபுவை போல நாங்களும் துணிந்து எங்களையே வெறுமையாக்கி தொண்டாற்றி உம் மாட்சியில் பங்குகொள்ளும் வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்