ஆபிரகாமை போன்ற நம்பிக்கை என்னிடம் உள்ளதா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின் மூன்றாம் சனி
I: எபி: 11: 1-2, 8-19
II: லூக் 1: 69-70. 71-73. 74-75
III: மாற்: 4: 35-41

ஒருமுறை நான் தியானம் செய்து கொண்டிருந்த போது வழிநடத்திய தந்தை திருப்பலி மறையுரையின் போது ஒரு கேள்வியைக் கேட்டார். " கடவுள் நம்பிக்கை என்பது என்ன?" என்பதே அக்கேள்வி.  அப்போது நான் கூறிய பதில் இன்றும் என் நம்பிக்கைக்கு உரமாய் அமைவதாக நான் எண்ணுகிறேன்.நான் கூறிய பதில் இதுதான். "நான் எனக்கு எது நல்லது அன்பதை அறிவேன்.ஆனால் கடவுள் எது எனக்கு சிறந்தது என்பதை அறிவார் என்ற உறுதியான எண்ணமே நம்பிக்கை. "  இன்றும் இந்நிகழ்வை நான் திருப்பிப் பார்க்கும் போது என் நம்பிக்கைக்கு பலம் சேர்ப்பதாக நான் உணர்கிறேன். 

இன்றைய இருவாசகங்களுமே நம்பிக்கையை மையப்படுத்தியதாக இருக்கிறது. முதல் வாசகத்தில் ஆபிரகாமின் நம்பிக்கை மிக அற்புதமாக எடுத்தியம்பப் படுகிறது. ஆபிரகாம் கடவுள் தனக்கு சிறந்ததைத் தருவார் என்று உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையில்தான் முன்பின் தெரியாத இடத்திற்கு சென்றார். இயற்கைக்கு அப்பாற்பட்ட முதிர்வயதில் பெறும் பிள்ளை பேற்றை எதிர்நோக்கி காத்திருந்தார். தன் சந்ததியைப் பெருக்கப்போகும் ஒரே மகனைக் கூட கடவுள் கேட்டார் என்பதற்காக பலியிடத் துணிந்தார். ஆபிரகாமின் நிலையில் நாம் இருந்தால் நமது செயல்பாடுகள் என்னவாக இருந்திருக்கும்? சிந்திக்க வேண்டியது நம் கடமை.

நற்செய்தி வாசகத்தில் நடுக்கடலில் தத்தளித்த சீடர்கள் தங்களோடு இயேசு இருந்த போதும் நம்பிக்கை குன்றி இருந்தார்கள். இயேசு செய்த வல்ல செயல்களைக் கண்கூடாகக் கண்ட போதும் அவர்களால் நம்ப இயலவில்லை என்றதாலேயே இயேசு அவர்களைக் கடிந்து கொள்கிறார். 

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற ஐயமற்றநிலை என்கிறது முதல் வாசகம். இங்கே ஐயம் என்பது பயமல்ல. சந்தேகம். அதாவது கடவுள் எனக்கு சிறந்ததை மட்டுமே தருவார் என்ற சந்தேகமற்ற மன உறுதி. ஆபிரகாம் இந்நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அவரை பின்பற்றி நாமும் நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா ஆபிரகாமைப் போன்ற நம்பிக்கையில் நாங்களும் வளர அருள்புரிவீராக. ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்