விண்ணுலகைப் பற்றியே நம் எண்ணங்கள் எழும்பட்டும்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் வியாழன்
I: திப:5:27-33
II: திபா :33:2,9,17-20
III:யோவான் : 3:31-36

அன்று சனிக்கிழமை மாலை நேரம். வீட்டிலுள்ள அனைவரும் ஞாயிறு திருப்பலிக்கு தங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். வீட்டிலுள்ள இளம்பெண் தான் அணிந்து கொள்வதற்கான ஆடை, அணிகலன்கள் அதற்கு ஏற்றார் போல அலங்காரப் பொருட்களை எடுத்து வைத்தார். அப்பா, திருப்பலியில் நற்கருணை வாங்கிய உடனேயே முக்கியமானை வேலைக்குச் செல்ல கோவிலைவிட்டு வெளியே செல்ல வேண்டுமென யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். பையன் அன்று மட்டும் தான் விடுமுறை.ஆகவே தான் உறங்கி ஓய்வெடுக்கப் போவதாகவும் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறிவிட்டான். இவர்கள் இப்படி செய்துகொண்டிருக்கும் வேளையில் அம்மா மட்டும் விவிலியத்தை எடுத்து அன்றைய நாளுக்கான வாசகங்களை வாசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

இப்பொழுது ஒரு கேள்வி,இவர்களில் திருப்பலிக்கு தன்னை சரியான விதத்தில் தயாரித்தது யார்?

அன்புக்குரியவர்களே,  இன்றைய வாசகங்கள் விண்ணுலகம் சார்ந்தவற்றை பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன. ஆனால்  நாம் மண்ணுலகு சார்ந்தவற்றைப் பற்றிய எண்ணங்களால் மூழ்கிக் கிடக்கிறோம்.
"மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்."என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றி கூறுகிறார்.

இவ்வார்த்தைகள் நமக்குப் பொருந்துகின்றதா என இன்று நாம் சோதித்தறிய வேண்டும்.
இயேசு தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தவர். அவர் கடவுளுடைய வார்த்தைகளையே பேசுகிறார். அவர் விரும்பும் செயல்களையே செய்கிறார். நமக்கும் ஆரம்பம் கடவுளே. நாம் சென்று சேர்கின்ற இடமும் அவரே. அவருடைய பிள்ளைகளாய் நாம் வாழ்கிறோம்.அப்படியானால் நாமும் கடவுளுடைய வார்த்தைகளைப் பேச வேண்டும். அவர் விரும்பும் செயல்களைச் செய்ய வேண்டும். 

ஆனால் நமது மனமோ உலகம் சார்ந்த பணம் பதவி பொழுதுபோக்கு எனச் செல்வதேன்? மேற்கூறிய சிறிய நிகழ்விலே நாம் பார்த்ததுபோல கோவிலுக்குச் செல்லும் போது கூட நாம் ஆடம்பரங்களையும் அலங்காரங்களையும் தேடுகிறோம். உலகக் காரியங்களை கருத்தில் கொண்டு அவற்றிற்கு முதலிடங்களைக் கொடுத்த பின்பே ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்குகிறோம். இதற்கு காரணம் நாம் நம்மை மண்ணவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். விண்ணகம் சார்ந்தவர்கள் என்ற அடையாளத்தை மறந்து விட்டோம்.எனவே இந்த மனநிலையை மாற்றி விண்ணகம் சார்ந்த காரியங்களை  முதன்மையாக்கவும் கடவுளுடைய வார்த்தைகளைப் பேசவும் வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பே இறைவா! உம்மிடமிருந்து வந்தவர்கள் நாங்கள் என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டு விண்ணகம் சார்ந்தவற்றை பற்றி அதிகமாக சிந்திக்கவும் அதற்கேற்ப செயல்படவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்