'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' | ஆர்.கே. சாமி | VeritasTamil
30 சனவரி 2024, பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய்
2 சாமுவேல் 18: 9-10, 14b, 24-25a, 30- 19: 3
மாற்கு 5: 21-43
முதல் வாசகம்
தாவீது அரசரின் மகனான அப்சலோம் தன் தந்தையின் அரியணையை எப்படி அபகரிக்க முயன்றான் என்று நேற்று அறிந்தோம். அக்கதையின் தொடர்ச்சியே இன்றைய வாசகப் பகுதி. இன்று தாவீதின் மகனான அப்சலோமின் தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது.
அப்போது, தாவீதின் படைவீரர்களில் ஒருவன் அப்சலோமை கருவாலி மரத்தில் தங்கிக்கொண்டிருந்தபடி கொன்றான். தாவீது, தன்னை கொல்ல வந்த மகனின் இறப்பு குறித்து, வேதனையுறுகிறார், ஆழ்ந்து கலங்குகிறார்.
நற்செய்தி
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு வல்ல செயல்கள் நிகழ்வதை நாம் அறிய வருகிறோம்.
முதலாவதாக, பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வருந்திய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டதால் நலம் பெறுகின்றார். அடுத்து, தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் பன்னிரு வயது மகள் உயிர் பெறுகிறார்.
தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு, அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். அவர் ஒரு யூதர்.
இயேசு அவரது வேண்டுதலை ஏற்று போகும் போது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து அவருடைய மகள் இறந்துவிட்டாள் என்று செய்தி வருகிறது. எனவே, இயேசுவை மேலும் தொந்தரவு செய்ய வேண்டம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறியபடி அவரது வீட்டிற்குப் போகிறார்.
அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்று கூறியதும், இறந்துபோன அச்சிறுமி எழுந்து நடந்தாள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்.
இததற்கிடையில், இயேசு, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் வீட்டை நோக்கிய பயணத்தின்போது, பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வருந்திய பெண் பின்புறமாக அஞ்சி அஞ்சி வந்து, இயேசுவின் ஆடையைத் தொட்டதால் நலம் பெற்றாள். இயேசுவின் முன் அஞ்சி நின்ற அப்பெண்ணை, “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தில், தன்னை கொல்ல முயற்சிக்கும் மகன் அப்சலோமுக்குப் பயந்து ஓடிய தாவீது, அதே மகன் இறந்ததை நினைத்து, அக்ளித்து நடனமாடி மகிழ்வதற்குப் பதிலாக, 'என் மகன் அப்சலோமே, உனக்குப் பதிலாக நான் இறந்திருக்கக் கூடாதா!' என அழுது புலம்புகிறார். ஒரு மனிதனின் இரு வேறு பக்கங்களைப் பார்க்கிறோம்.
தாவீதைப் பொறுத்தமட்டில் கடவுள் தன் பக்கம் உள்ளார் என்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருந்தார். ஆனாலும் மனித இயல்பில் கலங்குகிறாரேயொழிய முடிவை கடவுள் கையல் விட்டுவிடுகிறார். இங்கே தாவீதின நம்பிக்கை மேலோங்கி இருந்தது.
இயேசு கிறிஸ்துவிடம் வந்த யாயிர் தொழுகைக்கூடத்திற்குத் தலைவர். யூதர்களின் பெரும் மதிப்பைப் பெற்றவர். அவர், சாகும் தறுவாயில் இருந்தத் தன்னுடைய மகளை இயேசு கிறிஸ்துவால்தான் குணப்படுத்த முடியும் என்று நம்பி வருகின்றார். இங்கே, தொழுகைக்கூடத் தலைவரின் ஆழமான நம்பிக்கை வெளிப்படுகிறது.
இயேசுவின் முன்னால் வந்து அவரை எதிர்கொள்ள அஞ்சி, பின்புறமாக வந்து அவருடைய ஆடையைத்தொட்டால் போதும் என்று முயற்சித்தப் பெண்ணில் நம்பிக்கை அனைத்தையும் மிஞ்சிவிட்டது.
அன்று 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று அறிவுறுத்திய அதே ஆண்டவர்தான் இன்று நற்கருணையில் நம்மோடு உடன் இருக்கிறார் 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று இன்றும் நம்மைத் திடப்படுத்துகிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை நம்மில் இருந்தாக வேண்டும். எவ்வளவு துன்பத்துயரங்கள் வந்தாலும், நம்பிக்கைத் தளர்வுக்கு இடங்கொடாமல் வாழ்வோர் நலம் பெறுவர். இயேசுவில் நம் நம்பிக்கை கைக்கொடுக்கும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உம் வல்லமையிலும் இரக்கத்திலும் எனக்குள்ள நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்து வாழும் சாட்சிய வாழ்வக்கு என்ன உட்படுத்துவீராக ..ஆமென் .
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink