இன்னக்கி இது தேவையா? என்ன சொல்றீங்க! | ஜெயசீலி

தூண்டுகோலாக இருந்திடுங்கள். வாழ்க்கையின் வெற்றிகள் நம்மை உத்வேகப்படுத்தும். தோல்விகள் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். இந்த இரண்டும்தான் வாழ்க்கைப் புதிர்களைக் கட்டவிழ்க்க நினைக்கும் நம் முயற்சிகளுக்குக் கிடைக்கும் பரிசுகள் மொத்தத்தில் இந்த இரண்டும்தான் மனிதனை வாழ்வின் உயர்ந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் மாறிவரும். நீங்கள் மாறவில்லையென்றால் உங்கள் வாழ்வில் எதுவுமே மாறாது. யாருடைய உதவியும் இன்றி சுயமாக தங்களுடைய வெற்றியைத் தேடிக் கொண்ட மனிதர்கள்கூட அதே பாதையில் பயணிக்க தங்கள் குழந்தைகளை உத்வேகப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம் அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்ப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் தங்கள் குழந்தைகளுக்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டியவர்கள் ஊன்றுகோலாக மாறிவிடுகிறார்கள்.

விழித்திடு! தாயின் கருவறையில் நிம்மதியாக தூங்கிக் கழித்த நீங்கள் மீண்டும் கல்லறையில் நிம்மதியாகத் தூங்கப்போய் விடுவீர்கள். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே நீங்கள் வாழப்போகும் இந்த வாழ்க்கையையும் தூங்கித்தான் கழிக்கப் போகிறீர்களா

எடுக்கும் காரியங்கள், நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் வெற்றிகரமாகவே முடிந்து விட்டால் சுவாரஸ்யம் குறைந்து போகும். படிப்பினையும் அனுபவமும் வெற்றியின் மூலம் கிடைப்பதைவிட தோல்வியின் மூலமே அதிகம் கிடைக்கும்.

தோல்வி தான் வாழ்க்கையை அழகு படுத்துகிறது. தோல்வியின் வலிதான் உங்களை வாழ்க்கையின் உச்சத்திற்குக் கொண்டு போகிறது. மொத்தத்தில் தோல்வியும் நல்லது!

கண் விழிப்பத்ற்கும், படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்கும் நடுவே இருக்கும் இடைவெளியை வெற்றி கொண்டு விட்டால் அந்த நாளையே வெற்றிக் கொள்ளலாம்.

ஆசைகளைக் கேள்விக்குள்ளாக்குங்கள். மனம் என்ற மருந்திடமிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு விஷயங்களைப் பாருங்கள். உங்கள் செயல்களை உங்கள் ஆசைகள் தீர்மானிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை என்ற அச்சாணியைக் கொண்டுதான் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது. நம் நம்பிக்கைகள் நாளுக்கு நாள் மாறினாலும், நம்பிக்கை என்ற ஒரு விஷயம் மட்டும் மாறுவதே இல்லை. 'என்னால் முடியும்' என்பதும் நம்பிக்கைதான். 'என்னால் முடியாது' என்பதும் நம்பிக்கைதான். 'நடக்கும்' என்பதும் நம்பிக்கைதான். 'நடக்காது' என்பதும் நம்பிக்கை தான். 'முடியும்' என்ற மாறாத நம்பிக்கையின் வலிமையால் நாம் மலையையும் நகர்த்தலாம்.

வாழ்க்கை உன்னுடைய பொறுப்பு. அதில் யாரையும் நீ குறை சொல்ல முடியாது. நீங்கள் உயிரோடு இருக்கும்போதோ, இறந்தபோதோ 'நான் ஒரு மனிதனை சந்தித்தேன். அந்த மனிதன் இதுவரை நான் பார்த்த யாரையுமே எனக்கு நினைவு படுத்தவில்லை' என்று உங்களைப் பற்றி இந்த உலகம் பேசட்டும். உங்களை நீங்கள் பாராட்டக் கற்றுக் கொள்ளும் போது அந்தப் பாராட்டை எதிர்ப்பார்த்து வெளியுலகத்திடம் கையேந்தி நிற்கும் நிலை உங்களுக்கு ஒருபோதும் ஏற்படாது.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். அருமையான, திருப்திகரமான வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்கள் அத்தனை பேரிடமும் பொதுவான ஒரு பண்பு இருப்பதைப் பார்க்க முடியும். அவர்கள் எல்லோருமே முதலில் தங்களை நேசிக்கத் தெரிந்தவர்களாக, தங்களை ரசிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

புகழ்பெற்ற அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி யான ரௌலண்ட் ஏதோ ஒரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்வதற்காக அழைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் அந்த வழக்குரைஞர் "அமெரிக்காவிலேயே சிறந்த இயற்பியல் விஞ்ஞானி யார்” என்று அவரிடம் கருத்து கேட்டபோது ரௌலண்ட் சற்றும் யோசிக்காமல் "நான்தான்" என்று கூறினாராம். "இருந்தாலும் உனக்கு இவ்வளவு தற்பெருமை இருக்கக்கூடாது" என்று கிண்டலடித்த தன் நண்பரிடம் “சே.. தற்பெருமை எல்லாம் கிடையாது. நான் நீதிமன்றத்தில் சத்தியத்தை தவிர வேறு எதுவும் பேசமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனால்தான் வேறு வழியின்றி உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று என்று கூறினாராம் ரௌலண்ட்.

உங்களை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் உழைத்தால் வெற்றி பின்னால் வாலாட்டிக் கொண்டு வரும் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நாள் தற்செயலாக நடந்து போய்க்கொண்டிருந்த சமயம் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் தடுமாறி கீழே விழுந்து விட்டார். காயம்பட்ட அவருடைய மூக்கிலிருந்து இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், மூக்குப் பகுதியின் எலும்புகள் நொறுங்கிப் போனதால் மூக்கின் வடிவமைப்பு சிதைந்து போய்விட்டது. சிகிச்சை முடிந்து கண்ணாடியில் தன் வளைந்து போன மூக்கைப் பார்த்தார். வருத்தப்படவில்லை. தன் உயிரைப் காப்பாற்றிய அந்த மருத்துவருக்கு மனதார நன்றி தெரிவித்த அவர், எதிர்காலத்தில் தானும் ஒரு சிறந்த மருத்துவராக பல பேருடைய  உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசை கொண்டார்.

அவர் கனவு நனவானது. பலகோடிக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாத்த பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்த பெருமைக்கு உரியவரானார் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்.

நீங்கள்தான் உங்களுடைய முதல் ரசிகராக இருக்க வேண்டும். உங்களை முழுமையாக நேசிக்கும் முதன்மையான நபராக நீங்கள்தான் இருக்க வேண்டும். உங்களை நீங்களே பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். அப்படிப் பெருமை கொள்வதில் தவறேதும் கிடையாது.

அப்துல் கலாம் ஐயாவின் சிகை அலங்காரத்தையோ அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்கின் வளைந்து போன மூக்கையோ, சச்சின் டெண்டுல்கரின் குள்ளமான உயரத்தையோ நாம் கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாதே! வானுயர்ந்த சாத னைகளே அவர்களுடைய அடையாளங்கள். அவர்கள் அத்தனை பேருமே தங்கள் குறைகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் திறமைகளின் மேல் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமே சாதனை படைத்திருக்கிறார்கள். “இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்த முதல் நபர் நான்தான். என்னை நான் அளவில்லாமல் நேசிக்கிறேன். என்னை வேறொன் றாக அன்றி, நானாகப் பிறக்கச் செய்ததற்கு மிக்க நன்றி இறைவா!" என்று தினம் தோறும் மறக்காமல் சொல்லுங்கள்

இறைவனோடு சேர்ந்து நம்பிக்கையில் இணைந்து, நம்மையே நாம் நேசித்துப் பாராட்டி மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்க உறுதி மொழி எடுப்போம். தூய்மையான எண்ணங்களு டன் உண்மையான ஆன்மிக வளர்ச்சியை நோக்கி வாழ்க்கையில் நாளும் நாம் நடைபோடுவோம். புதியதோர் உலகை உயிர்த்தெழச் செய்வோம் வாருங்கள், அந்தப் புதிய உலகத்தை நோக்கி நாம் கைகோர்த்து பயணிப்போம். இறைவன் நமக்கு தூண்டுகோலாய் இருப்பார்.

 

- சகோ. ஜெயசீலி, சின்னமலை

 

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,

ஆசிரியர்,

இருக்கிறவர் நாமே

[email protected]