அமைதியான நிறைவு கொண்ட நாள்.
அமைதியான சனி. நிறைவு கொண்ட நாள். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார் - மத்தேயு 27:59-60. இன்று நம்மைச் சுற்றி எத்தனையோ கல்லறைகள்! நாம் உயிருடன் இருக்கும்போதே நமக்குக் கல்லறை. கல்லறையை உடைக்க நமக்கும் சக்தி இல்லை; நமக்காக உடைக்க நமக்கு யாருமில்லை. அது இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்.
இந்த நிலை' மாறிவிட்டது. 'கடந்தும் விட்டது'. நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார் (கலாத்தியர் 1:4). கொரானா வைரஸின் கொடுக்கு முறிந்தது. கல்லறை வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது. நம்மைப் பொறுத்தவரை இயேசு சாவின் கொடுக்கை முறித்துவிட்டார். சாவு, வீழ்ந்தது. இனி பயமில்லை. இயேசு, சொன்ன “எல்லாம் நிறைவேறிற்று” என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல அடங்கியிருக்கின்றன.
அனைத்து துன்பங்களுக்கும் முடிவு கிடைத்துவிட்டது. நிறைவாய் அமைதியாய் வாழ போகிறோம். மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் நிறைவு பெற்றது. மீண்டும் உன்னதத்திலிருந்து ஆவி நம்மேல் பொழியப்படும்; பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்; செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும். நாமனைவரும் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான சூழ்நிலைகளிலும் தொல்லையின்றி வாழுவோம். ஆண்டவருக்கு நன்றி சொல்வோம்.
ஜெபம்: எங்கள் அன்பான ஆண்டவரே உமக்கு நன்றி. ஆண்டவரே, மால், ஜிம், கிளப், கொண்டாட்டங்கள் இல்லாத வாழ்வு என்ன என்று எங்களுக்கு உணர வைத்தீர். ஆலயத்துக்கு செல்ல முடியாத இந்த சமயத்தில் தான் உமது திருப்பலியில் அவசியத்தையும் நற்கருணை பிரசன்னத்தின் அவசியத்தையும் உணர வைத்தீர். எங்கள் அவசர வாழ்க்கையில் அன்பு காணாமல் போய் விட்டதை அறிய வைத்தீர். நன்றி ஆண்டவரே. மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து உம் விருப்பம் படி வாழ ஆசீர்வதியும். ஆமென்.