உறவில் உறைவதே உன்னதம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
21 மார்ச் 2024
தவக்காலம் 5ஆம் வாரம் - வியாழன்
தொடக்க நூல் 17: 3-9
யோவான் 8: 51-59
முதல் வாசகம் :
இன்றைய முதல் வாசகமானது, ஆபிரகாமுக்கும் கடவுளுக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உடன்படிக்கை உரையாடலை விவரிக்கிறது. இந்த உடன்படிக்கையில் கடவுள் ஆபிரகாமுக்கு சில முக்கிய அம்சங்களை வாக்களிக்கிறார்:
1.ஆபிரகாம் திரளான இனங்களுக்குத் தந்தையாக விளங்குவார்.
2.கடவுள் ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றுகிறார். இது பல நாடுகளின் தந்தையாக அவர் ஏற்கும் புதிய பொறுப்பிற்கு அடையாளமாக உள்ளது.
3.ஆபிரகாம் மிகவும் வளத்தோடு இருப்பதோடு, பல இனங்களும் அரசர்களும் ஆபிரகாமின் வழிமரபில் தோன்றுவார்கள் என்றும், அவருடைய வழிமரபினர் ஆற்றல் மிக்கவர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பார்கள் என்றும் கடவுள் உறுதி கூறுகிறார்.
4.கடவுள் ஆபிரகாமுடனும் அவருடைய வழிமரபினருடனும் ஏற்படுத்தும் உடன்படிக்கையானது என்றுமுள உடன்படிக்கையாக விளங்கும என்கிறார்.
5.மேலும், கானான் நாட்டை ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் என்றுமுள உடைமையாகக் கொடுப்பதாகவும் கடவுள் வாக்களிக்கிறார்.
இந்த வாக்குறுதிகளுக்கு ஈடாக, “நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்ற கட்டளையைத் தருகிறார்.
நற்செய்தி :
நற்செய்தியில், இயேசு ஆபிரகாமைப் பற்றியும், ஆபிரகாமுடன் இயேசு கொண்டிருந்த உறவைப் பற்றியும், ஆபிரகாமுக்கு முன்னதாகவே இயேசு இருந்தார் எனும் உண்மையைப் பகிர்கிறார். இதனால் யூதர்கள் கடுங்கோபம் கொண்டனர்.
அவர்களின் கூற்றுப்படி, முதன்முதலில் YHWH என்ற கடவுளோடு நெருங்கிய உறவைத் ஏற்படுத்திய குலமுதல்வரான ஆபிரகாமை விட இயேசு உயர்ந்தவர் என்று இயேசு தன்னை விவரித்ததை அவர்களால் சீரணிக்க முடியவில்லை. “இயேசு பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது” என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, அவரைத் தண்டிக்க அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார் என்று யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு :
இன்றைய வாசகங்கள் நமக்கு ஒரு விடயத்தைத் தெளிவுப்படுத்துகின்றன. நாம் அழைக்கப்பட்டவர்கள் என்பதில் நமக்குப் பெருமையில்லை. மாறக, கடவுளோடு நாம் கொண்டிருக்கும் நல்லுறவில்தான் நமது கிறிஸ்தவ வாழ்வு மணம் வீசும். ஆபிரகாமை எடுத்துக்கொண்டால், அவர் முற்றிலும் கடவுளுக்குக் கீழப்படிந்து அவரது அழைப்பை ஏற்றார் என்பதில் அவரது சிறப்பு மேலோங்கவில்லை. அவரோடு இறுதிவரை நல்லுறவில் வாழ்ந்தார் என்பதில்தான் ஆபிராகம் இன்றும் புகழப்படுகிறார். அவர் கனானில் குடியேறியபோதும், அங்கிருந்தோரின் தெய்வங்களை அவர் ஏற்கவில்லை. ஒரே கடவுள் வழிபாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தக்கொண்டார்.
கடவுளோடு நல்லுறவில் வாழ்வதுதான் கிறிஸ்தவம். இதற்காகவே இயேசு தந்தையிடம், ‘உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்’ (யோவான் 21:9) என்று இறைஞ்சினார். இயேசு கூறியதைப் போல ‘நாம் தந்தைக்குரியவர்கள்' எனவே, தந்தையாம் கடவுளோடு என்றும் நல்லுறவில் நிலைத்திருக்க வேண்டும்.
உறவில் இருந்து பிரிவது பாவம். அது கடவுளோடு கொண்ட உறவாக இருந்தாலும், நம்மோடு வாழ்கின்றவர்களோடு கொண்ட உறவாக இருந்தாலும் சரி. உறவில் பிரிவை ஏற்படுத்தும்போது, நாம் பாவம் செய்கிறோம். இதை காணாமற் போன மகன் உவமையில் இயேசு தெளிவுப்படுத்தியுள்ளார் (லூக்கா 15:11-32) “நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்” (1:யோவ1ன் 3:1) என்பதே உண்மை. இது ஓர் உடன்படிக்கை உறவு.
ஆகவே, குலமுதல்வர் ஆபிகாமைப் போலவும், இயேசு தந்தையோடு கொண்ட உறவைப் போலவும், நம் புனிதர்கள் கடவுளோடு கொண்ட உறவைப் போலவும், நமது உறவை கடவுளோடும் நமக்கு அடுத்திருப்பவர்கள் மத்தியிலும் நிலைநாட்ட முயற்சிகள் எடுப்போம்.
”உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத்தேயு 5;23) எனும் ஆண்டவரின் அறிவுறுத்தலை மனதில் கொள்வோம். ‘அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றான்’ என்று பாடினால் மட்டும் போதாது, அதை செயலில் காட்டுபவரே கிறிஸ்துவில் வல்லவர்.
இறைவேண்டல் :
‘என் அன்பில் நிலைத்திருங்கள்' என்று பணித்த ஆண்டவரே, நான் எனது பலவீனத்தால் வெறுத்து ஒதுக்கிய உறவுகளோடு ஒப்புரவுக் கொண்டு, உறவைப் புதுப்பித்து வாழும் வரத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink