காற்றின் விலையைக் கணக்கிட்ட முதியவர்
இத்தாலியில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தது. சில வாரங்களில் அவரும் குணம்பெற்றார்.
அவருக்கான மருத்துவத்திற்கான கட்டணம் 5000 யூரோவிற்கான ரசீது கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவருடைய கண்கள் கலங்கின. அங்கிருந்த மருத்துவர்கள் ஏன் அழுகிறீர்கள். பரவாயில்லை உங்களால் செலுத்தமுடிந்ததைச் செலுத்துங்கள் என்றார்கள். அதற்கு அவர் சொன்னார்: இந்த தொகையைப் பார்த்து நான் அழவில்லை. சில வாரங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட இந்த காற்றிற்கு இவ்வளவு மதிப்பென்றால், இத்தனை ஆண்டுகள் நான் இலவசமாக சுவசித்த காற்று எவ்வளவு மதிப்புள்ளது, அதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவராக இருக்கவேண்டும் என்றாராம்.
ஆம் நண்பர்களே, நமக்கு இயற்கையானது எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுப்பதால் அதனுடைய மதிப்பு நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை நமக்கு எல்லாமே பணத்திற்கு பெறுவதாக இருந்திருந்தால் அதன் மதிப்பு தெரிந்திருக்குமோ என்னமோ!
இன்று நாம் தெரிந்தோ தெரியாமலோ காற்றினை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம். வளிமண்டலம் மாசு அடைகின்றது. வளி மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள்கள், உயிரியற்பொருட்கள், அதன் களிவுகள் போன்றவை வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துதலைக் குறிக்கின்றது. இதனை காற்று மாசுஅடைதல் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
காற்று மாசு அடைவதால் நோய்கள், ஒவ்வாமை, மரணம்கூட ஏற்படலாம். மனித சமூகத்திற்கு மட்டுமின்றி விலங்குள் தாவரங்கள் போன்ற உயிரினங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
காற்று மாசுபடுத்தி என்பது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய காற்றில் உள்ள ஒரு மாசுப் பொருளாகும். சாலையில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையினால் காற்று மாசுபடுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் ஊரடங்கிற்குப் பிறகு பல நகரங்களில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில்; காற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், மே மாதத்தில் பெங்களுரில் சராசரி காற்றுத் தரக் குறியீடு சுமார் 65 ஆக இருந்தது. ஜீன் 21 ஆம் தேதிவரை இது 50 ஆக குறைந்தது. மே மாதத்தில் ஹைதராபாத்தில் சராசரி 60 க்கு கீழே குறைந்தது. டெல்லியில் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் காற்றானது மாசு இல்லாத சுத்தமான காற்றாக மாறியுள்ளது. இப்போது காற்று மாசு குறைந்துள்ளதால் உயர்ந்த சிகரமான இமாலய சிகரம் தெளிவாக தெரிகிறது.
இந்த ஆய்வுகள் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக, இந்தியாவில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவதால் மாசு அளவு அதிகரிக்கும் என்கிறார்கள்.
இந்த மேம்பட்ட காற்றின் தரத்தை பராமரிக்க, மாசுபடுதலின் ஆதாரங்களை அடையாளம் காண்பது, நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவருதல், நீண்ட கால தீர்வுகளை கண்டறிந்து அதை செயல்படுத்துவது என அனைத்து மனிதர்களின் கையில்தான் உள்ளது. அதற்கு நாம் இயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் அனைத்திற்கும் விலை நிர்ணயித்துப் பார்க்கவேண்டும். பார்க்காதீர்கள், பார்த்தீர்கள் என்றால் உங்கள் வாழ்நாள் உழைப்பும் அதற்கு ஈடுசெய்யமுடியாது.