சர்வதேச பெண்கள் தினம் | March 8

சர்வதேச பெண்கள் தினம்
        1975 ஆம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது. 
        1789 ஆம்; ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸ் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். பெண்களுக்கும் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், உழைப்புக்கேற்ற ஊதியம், 16 மணி நேர வேலையைக் குறைக்க வேண்டும், வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.
        பின்னர் வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
        அதனையடுத்து கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர். அங்கு இந்த நாளினை சர்வதேச தினமாக கடைபிடிக்கவேண்டும் என்னும் யோசனையை; கிளாரா ஜெட்கின் முன்வைத்தார். அத்துடன் பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆவணப்படுத்த வேண்டும். ஆண்களைப் போல பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும். எல்லாவற்றிலும் சம உரிமை கேட்டுப் போராட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். இதைனைத் தொடர்ந்து 1911 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011 ஆம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினமாகக்  கொண்டாடப்பட்டது. 
        உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில், ரஷ்யாவில் 'போர் வேண்டாம் அமைதியும் ரொட்டியும்" தான் தேவை என 1917 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நான்கு நாள்கள் நீடித்த இந்தப் போராட்டம்; ரஷ்ய முடி மன்னரான ஜாரின் ஆட்சியின் முடிவுக்கு முக்கிய காரணமானது. அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது. அதன்பின் நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. ஆக, இந்தப் போராட்டமே சர்வதேச பெண்கள் தினத்திற்கு  உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. 
        1911 ஆம் ஆண்டில் இருந்தே பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு பாலின சமத்துவம் குறித்து பேசி வந்தாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள், ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள், பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறாள், ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறாள்.