சகோதரனின் துன்பம் கண்டு மகிழாதே!


உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகத் திகழ்வது இஸ்லாம் சமயம். இதனைத் தோற்றுவித்தவர் நபிகள் நாயகம் 'சல்லல்லாஹி அலேகு சல்லம்,' என அழைக்கப்படும் நபியாவார். இவரது காலம் கிபி 570-632 ஆகும்.

 

அரேபியாவில் உள்ள மக்கா நகரில் அவதரித்தார் இவர். திருத்தூதர், இறைத் தூதர், தூதர் நபி எனப் பலவாறு போற்றப்படும் மனிதர் இவர். 'இறைவன் ஒருவனே. அவரே அல்லாஹ். அவருக்கு உருவமில்லை. அவரின் தூதுவர் நான்' என்பது இவர் போதனையின் அடிப்படையாகும். சிறுவயதிலேயே தாய் - தந்தை இருவரையும் இழந்தவர். வளர்ப்புத் தாயிடம் வளர்ந்தவர். அழகு, அறிவு, வணிகத்திறன் மிக்கவராய் இவர் இருந்தார்.

 

வணிகத்தில் புகழ்பெற்ற அரேபியா, இவரையும் ஒரு வணிகராக்கியது. இடைஇடையே தனிமையில் சென்று, ஹீரா மலையில் தியானத்தில் ஈடுபடுவார். இறை உணர்வு இவரிடம் இயல்பாகவே இருந்தது. அந்த உணர்வும், தியானமும் இவரை உயர்த்தியது.

 

தனது 25ஆம் வயதில், வணிகத்தில் உதவிய, தன்னிலும் மூத்தவரான விதவை கதீஜா என்பாரை இவர் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சகோத ரர்க்கு வணிகத்தில் உதவினார். பிறகு கதீஜாவிற்காக வணிகம் செய்தார். சிரியா வரை சென்று, மிகச் சிறப்பாக வணிகம் செய்து, பொருள் திரட்டினார். அந்த செல்வத்திலும் இவர் தனிமை, தியானம் இரண்டையும் விடவில்லை. தனது 40ஆம் வயதில் இறைவன் வாக்கால் இறைசெய்தி கேட்டார். அதுமுதல் அவர் இறைவனின் தூதுவர் எனப்பட்டார். அவர் உணர்ந்த வற்றை, அரேபியர்களிடம் போதித்தார். ஆதரவு எதிர்ப்பு இரண்டுமே இருந்தது.

 

அன்று அரேபியாவும், அரேபியரும் மிக மிக மோசமான நிலையில் இருந்தனர். பல உருவ வழிபாடு இருந்தது. மூடநம்பிக்கை மிக அதிகமாகி நிறைந்து காணப்பட்டது. மக்களிடையே நல்லொழுக்கம் இல்லை. மது, மாது, சூது, கொள்ளை என எல்லாம் நிறைந்திருந்தது. இந்நிலையில் நல்லது சொல்லிய தபிகளைப் பலர் விரோதியாகவே பாவித்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து, வெற்றி பெற்று இஸ்லாம் மார்க்கத்தை ஸ்தாபித்தார்.

 

எதிரிகள் தந்த எதிர்ப்புகளை இவர் இன்முகத்தோடு ஏற்றார். மக்கா முதல் - மதீனா வரை இவரை கல்லால் அடித்தனர். இது நடந்த ஆண்டு கி.பி. 662. இந்த ஆண்டில் இருந்துதான் முஸ்லிம்கள் தங்களின் ஹிஜிரா ஆண்டைக் கணக்கிடுகின்றனர்.

 

மெக்கா, மெதினா இஸ்லாமியர்களின் புனித நகரம் எனக் கருதப்படுகிறது. இவரது வாழ்க்கை - போதனை தொகுக்கப்பட்ட நூல் குரான். இது திருக்குரான் எனப்படுகிறது. இதுவே இஸ்லாமியர்களின் வேதமாகக் கருதப்படுகிறது.

 

இறைப்பற்று மிக்க இவர் தினமும் ஐந்துவேளை தொழுகை, நோன்பு முதலியவற்றை தீவிரமாக வலியுறுத்தினார். 'வட்டி வாங்குதல் கூடாது. உருவ வழிபாடு கூடாது, பிறன்மனை நாடல் கூடாது, பிறர் பொருளை விரும்புதல் கூடாது, மது கூடாது, சூது தவறு, பிறர்க்கு உதவி செய்' என பலவிதமான உயர்ந்த, உயர்கருத்தினை உலகுக்கு உணர்த்தினார். இவை குரானில் தொகுக்கப்பட்டுள்ளது.

 

ஹீரா மலைக்குன்றுகளில், சுமார் 15 ஆண்டுகள் இவர் இயற்றிய தவமும், சாதனையும் இவர் போதனை யில் வெளிப்பட்டன. இறைவன் அல்லாஹ். அவரின் திருத்தூதுவர் நபி என்பதே அடிப்படையாகும்.

 

மெக்காவில் எதிர்ப்பு இருப்பினும், மதினா நகர் இவருக்கு நல்ல ஆதரவை நல்கியது. அங்கிருந்து இஸ்லாமியத்தை வேரூன்றச் செய்தார். பிறகு கி.பி. 632இல் இறக்கும் முன்னர் மக்காவைக் கைப்பற்றினார். இதில் இவருக்கு மக்கள் ஆதரவு பலமாக இருந்தது. தன் வாழ்நாளிலேயே ஓரளவு இஸ்லாம் மார்க்கத்தை நிலைநாட்டியே இறந்தார் இவர்.

 

இவரது மரணத்திற்குப் பின்பு, பத்து ஆண்டுகளில், இவரது சீடர்களால் இஸ்லாம் ஓர் உலக சமயம் ஆனது. என்சியா, எகிப்து, வளைகுடா நாடுகளில் மிக வேகமாய் பரவியது.

 

மக்களை நல்வழிப்படுத்தும் இவர், தன்னை மிக மிக உயர்ந்தவராக்கியே வாழ்ந்தார். பிற சமயத்தவரிடம் இவர் மிகவும் பொறுமை காட்டினார். ஒருசமயம் இவர் பள்ளி வாசலில் இருந்தபோது, இவரைப் பார்க்க, ஒரு கிறிஸ்துவர் வந்திருந்தார். அவர் தொழுகைக்காக, இடையில் வெளியில் சென்று வருவதாக கூறியபோது, இல்லை, நீங்கள் இதே இடத்தில் உங்கள் தொழுகையை நடத்தலாம் என்றார் நபிகள். பிறரின் கருத்துக்கு மிகவும் மதிப்பளித்தவர் இவர்.

 

ஒரு சமயம் ஒருவர் 'வேலைக்காரர்களை எத்தனை முறை மன்னிக்கலாம்' என்று வினவியபோது, எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கலாம் என்றார். மன்னிப்பு பற்றிய இவர் கருத்து சிறப்பானது.

 

ஒரு சமயம் ஒரு மூதாட்டி இவரிடம் வந்து, தன் பேரன் அதிகம் இனிப்பு உண்கிறான். அது தவறு. கெடுதல். அவனை சற்று கண்டியுங்கள் என்று நபிகளிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு நபிகள், சரி, 'இவனை அழைத்துக் கொண்டு போய்விட்டு, மூன்று நாள் கழித்துவா' எனச் சொல்லி அனுப்பினார். அந்த மூதாட்டியும் மூன்றுநாள் கழித்து, தன் பேரனுடன் நபிகளை நாடி வந்தார். நபிகள் அச்சிறுவனிடம் 'தம்பி இனிப்பு கெடுதல். வேண்டாம். சாப்பிடாதே' என்றார். அந்த மூதாட்டி, நபிகளிடம் இதை அன்றே சொல்லியிருக்கலாமே, எதற்கு மூன்றுநாள் எனப் புரியாது கேட்டார். உடனே சிரித்தபடி நபிகள் கூறினார். அம்மா- நீங்கள் அன்று அப்படிக் கூறியபோது நானும் அதிக இனிப்புகள் சாப்பிடுகிறவனாக இருந்தேன். அந்த சமயத்தில் பிறர்க்கு நீதிசொல்ல எனக்கு உரிமையும் தகுதியும் இல்லை. இப்போது மூன்று நாளில் இனிப்பு அதிகம் உண்பதை நிறுத்திவிட்டேன். அதனால் சொல்கிறேன்' என்றாராம். எப்படி? ஒரு சிறு விஷயத்தில் கூட முன்மாதிரியாய் இருக்கவேண்டும். சொல் வேறு - செயல் வேறு கூடாது என்பதில் இவர் உறுதியாய் இருந்தது தெரிகிறது.

 

"பேராசை வறுமையைக் குறிக்கிறது. ஆசை யின்மை செல்வத்தைக் குறிக்கிறது.'' என்பது இவர் போதனை. இதில் ஓர் புத்தர் போல தன் கருத்தினை வலியுறுத்துகிறார். ஆசைகளே துயருக்குக் காரணம் என அறிந்து கூறியவர்.

 

"உங்களிடம் குற்றம் குறைகளைப் போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவர்களைக் குறித்துப் 'பேசாதீர்கள்' என்பது இவரை நாம் அறிய, உணர உதவும் அற்புத வாசகம் எனலாம்.

 

"உன்னால் எதைச் செய்யமுடியாது என்று 'மற்றவர்கள் சொல்கிறார்களோ, அதைச் செய்து காட்டுவதுதான் மிகப்பெரிய இன்பம்'' இது நபிகள் தந்த அழகான, அரிய சுயமுன்னேற்றச் சிந்தனை எனலாம். வாழ்வின் மிகச்சிறிய விஷயத்தைக்கூட இவர் விடுவ தில்லை. அவ்வளவு அரிய நீதிகளை, practical life எனப்படும் நடைமுறை வாழ்வுக்கு இவர் தந்தார் எனலாம். "பிறருடன் உரையாடும்போது, பின்னர் எண்ணி

 

வருந்தத்தக்க சொற்களைப் பேசாதீர்கள்' என்று இவர் கூறும் நீதியானது, திருக்குறள் போன்ற அறநூல் நீதிபோல் நாம் அறியலாம்.

 

'ஆண்டவனுக்காக தன்னை தாழ்த்திக் கொள்கிற வனை ஆண்டவன் உயர்த்துவான்" என்பது இவரின் இறைக் கொள்கை. உலகில் முதன்மை இறைவனே. அவனே உயர்ந்தவன். அவனுக்குமுன் பணிவு வேண்டும் என்பது இவருடைய போதனைச்சாரம்.

 

“சகோதரனின் துன்பம் கண்டு மகிழாதே. இறைவன் அவன் மீது கருணை காட்டி உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்" தான் சொல்கிற நற்கருத்தை இறைவன் மீது ஏற்றி சொல்கிற பாங்கு நபிகளின் பாங்காகும்.

 

அதனால்தான் இன்சொல், முக மலர்ச்சி பற்றி பேசுகிறபோதுகூட, 'முகமலர்ச்சியோடு இருப்பவரையும், இன்சொல் பேசுவோரையும் இறைவன் விரும்புகிறான்" என்றே கூறுவார் நபி. அதேபோல் அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வள்ளுவர் போல, அடக்கம் எனும் இயல்பை நபிகள், "உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கு கும் பிறப்பிடமாக இருக்கிறது" என்று சிறப்பிப்பார். அடுத்து நல்லவன் யார் என்ற ஒரு நல்ல கேள்விக்கு, மிக நல்ல பதிலை நபிகள் தரும்போது, "அண்டை அயலார்க்கு நல்லவனாக இருப்பவனே நல்லவன்'' என்று கூறுவார். அதே போல் 'அன்பு'' எனும் உயர்குணத்தையும், இவர் அழகாய் வலியுறுத்து வார். அதுவும் இறைவனுடன் தொடர்புபடுத்தியே... "மனிதர்களிடம் அன்பு காட்டாதவனிடம் இறைவன் அன்பு காட்டுவதில்லை."

 

இப்படி எத்தனையோ உயர்நீதிகளைக் கூறி, உலகையே மாற்றிய உத்தமர் வரிசையில் தனக்கும் ஓரிடம் பிடித்த வரலாற்று நாயகரே நபிகள்.

Add new comment

2 + 2 =