நேசம் | Dr. ஃபஜிலா ஆசாத்
‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’, விரலிலிருந்த முத்திரை மோதிரத்தை மிக இலாவகமாக கழற்றி அந்த அரசர் தன் அருகே நின்ற விறகு வெட்டியிடம் நெகிழ்ச்சியோடு கொடுக்க அவரோ வேண்டாமென்று விடாப் பிடியாக மறுத்துக் கொண்டிருந்தார். அவர் முகம் மகிழ்ச்சியால் மிளிர்ந்து கொண்டிருந்தது.
அந்த விறகு வெட்டிக்கு மட்டுமல்ல உங்களுக்குமே இது போல் மகிழ்வான நிகழ்வுகள் அமையலாம். உங்களால் பிறர் மனதில் முத்திரை பதிக்க முடிந்தால்……
அன்றும் எல்லா வார இறுதி நாட்கள் போல் தான் அரசரும் இளவரசரும் வேட்டைக்கு சென்றார்கள். ஆனால் அன்று தங்களுக்கு போக்கு காட்டிய மானை துரத்திக் கொண்டே வந்தவர்கள் வழி தவறி அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்.
களைப்பும் சலிப்பும் தவிப்புமாக எங்காவது குடிக்க தண்ணீர் கிடைக்காதா, தன் நாட்டிற்கு திரும்பி செல்ல வழி தென்படாதா என சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நடந்தவர்கள் கண்களில் ஒரு விறகு வெட்டி தென்படுகிறார்.
அவர்களை யார் என்றே அந்த விறகு வெட்டி அறியாவிட்டாலும், அலைந்து, களைத்து, முகம் வாடி, உடல் சோர்ந்து இருந்த அவர்கள் பிரச்னையை அறிந்த அவர் அருகிலிருக்கும் தன் சிறு குடிலுக்கு அழைத்துச் சென்று, தன்னிடமிருந்த உணவையும் தண்ணீரையும் அன்போடும் அனுசரனையோடும் கொடுத்து, அவர்களை அங்கே இளைப்பாறச் செய்கிறார். எளிய உணவே ஆனாலும், தான் இதுவரை அரண்மனையில் அருந்திய எந்த ஒரு அறுசுவை உணவும் இதற்கு ஈடாகாது என எண்ணும் மன்னரின் வயிறோடு மனமும் நிறைகிறது. கொடுப்பதற்கு தன்னிடம் அப்போது வேறு எதுவும் இல்லாத மன்னர் நெகிழ்ச்சியில் தன் முத்திரை மோதிரத்தையே கழற்றி கனிவொடு விறகு வெட்டியிடம் கொடுக்கிறார்.
எந்த பலனும் எதிர்பாராமல் அவர்கள் யார் என்றே அறியாமல், தகுந்த நேரத்தில் அவர்களுக்கு ஆவன செய்த அந்த விறகு வெட்டியோ மோதிரத்தை வாங்க மறுத்ததோடு அவர்களை சுலபமான வழியில் நகரின் வாயிலுக்கே சென்று வழியனுப்பி விட்டு அவர்கள் அடைந்த மனநிறைவில், தன்னிறைவு பெற்றவராக, மகிழ்ச்சியோடு தன் வசிப்பிடம் திரும்புகிறார்.
நகருக்குள் வந்த மன்னரை அடையாளம் கண்டு கொண்ட அந்த வழியே வந்த செல்வந்தர் ஒருவர் அவரை உடனே தன் அலங்கார மாளிகைக்கு அழைத்து சென்று உயர்ந்தவகை உணவுகளும் பழரசமும் அருந்த செய்து, அரசரை விழுந்து விழுந்து உபசரித்து அரசருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து, அவர் புறப்பட ஆயத்தமானதும் தன் வாகனங்களை தயார் செய்து பணியாட்களுடன் அவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அரசர் அவருக்கு தன் சிறு புன்னகையால் ஒரு ஆமோதிப்பை வழங்கி விட்டு கம்பீரமாக விடை பெற்று செல்கிறார்.
இளவரசருக்கு ஒன்றும் புரியவில்லை. வெறும் கூழும் குடிக்க தண்ணீரும் ஓய்வெடுக்க தன் சிறு ஓலைக் குடிலில் இடமும் தந்த அந்த விறகு வெட்டியுடன் அத்தனை கனிவாக பேசி தன் முத்திரை மோதிரத்தையே கொடுக்க முனைந்த தன் தந்தை, விருந்தும் உபசாரமும் செய்யும் இந்த செல்வந்தரிடம் இத்தனை கம்பீரமாக நடந்து கொள்கிறார். அது மட்டுமன்றி இவருக்கு எதுவும் கொடுக்கக் கூட நினைக்கவில்லையே என்ற வியப்பு மேலிட மன்னரிடமே அதைப் பற்றி கேட்கிறார்.
அதற்கு அந்த அரசர் சொல்கிறார், ‘இந்த செல்வந்தருக்கு நான் அரசர் என்பது தெரியும். நம்மை இப்படி உபசரிப்பதால் அவருக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதும் புரியும். அதே கணக்கில் அவருக்கானது கிடைத்தும் விடும். ஆனால் அந்த விறகு வெட்டிக்கு நாம் யாரென்பதே தெரியாது. இருந்தும் அவர் ஒரு இக்கட்டான நேரத்தில் தன்னிடமிருந்தவைகளை எந்த கணக்கும் பார்க்காமல் தந்து நம்மிடம் இவ்வளவு கனிவு காட்டி இருக்கிறார். அது விலை மதிக்க முடியாதது. அந்த அன்புக்கு நாம் எது கொடுத்தாலும் ஈடாகாது. அதனால் தான் நான் என் முத்திரை மோதிரத்தையே கொடுக்க முன் வந்தேன். தவிர, நான் அளித்த மோதிரத்தை அவர் வாங்க மாட்டார் என்று எனக்கு தெரியும். உண்மையான, பலன் எதிபார்க்காத அன்பை நீயும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நான் அவருக்கு அதை கொடுக்க முனைந்தேன். நான் நினைத்தது போலவே அவர் அதை வாங்க மறுத்து விட்டார். நாளை அவர் இருக்குமிடத்திற்கு ஆள் அனுப்பி அவரை இங்கு வரவழைத்து பொன்னும் பொருளும் பரிசளிப்பேன். அது அவர் சந்தோஷத்திற்கு அல்ல என் சந்தோஷத்திற்காக என்று கூறும் தன் தந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் இளவரசர்.
இந்த கதை வாழ்வின் அர்த்தத்தை எவ்வளவு எளிதாக சொல்லி செல்கிறது. உண்மையில் வெற்றி பெருமிதத்தை தரலாம். நல்ல வேலை பெருமையைத் தரலாம். ஆனால் பிறருக்கு நேசக் கரம் நீட்டுவதே உன்னதமான மனநிறைவைத் தரும். சமூகத்தோடு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். உண்மையில் நம்மை மேலும் மேலும் உதவி செய்ய தூண்டுவதற்காக இயற்கை அப்படியே அமைத்துள்ளது. ஆனால் வாழ்வில் கற்ற சில தவறான பாடங்களால் பலரும் இயற்கையின் விதியை மீற முற்படுகிறார்கள். எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் செய்வதை புத்திசாலித்தனம் இல்லை என்று நினைக்கிறார்கள்.
இவருக்கு இதை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற மனக் கணக்கைத் தொடர்ந்தே பெரும்பாலும் ஒருவர் மனம் பிறருக்கு நேசக் கரம் நீட்ட முன் வருகிறது, அது மட்டுமல்லாமல் யாராவது எதாவது அன்பாக செய்ய முன் வந்தால்கூட, எதை நம்மிடம் எதிர் பார்த்து இவர் இதை நமக்கு செய்கிறார் என்றே மனம் கணக்குப் போடுகிறது. இதுவே பல நேரம் சிலருக்கு உதவி செய்வதற்கும் சிலருடைய உதவியைப் பெறுவதற்கும், கனிவாக நடந்து கொள்வதற்கும் தடையாக இருக்கிறது. அதுவே பலர் மனதை தனிமைப் படுத்தி வெறுமையாக்குகிறது.
ஏதேனும் உதவி கேட்டு வருபவரையும், அவன் உண்மை சொல்கிறானா அல்லது நம்மை ஏமாற்றுகின்றானா என்ற சந்தேகம் முளை விடத் தொடங்கி அது கொடுப்பதை தடுத்து விடுவதோடு கொடுத்தாலும் மனமகிழ்ச்சிக்கு பதில் மனஉளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
வியாபாரத்தில் கூட ஏதோ ஒரு கணக்கைப் போட்டு பிறரை எளிதில் நம்பி விடும் மனம், உதவி செய்வதில் வியாபாரக் கணக்குப் பார்க்கிறது. இது கொடுத்தால் அது கிடைக்கும் என்று கணக்குப் போடுவதால், எதையும் எதிர்பாராமல் கொடுப்பதால் கிடைக்கும் அளவிட முடியாத மகிழ்ச்சி மனதிற்கு கிடைக்காமல் போய் விடுகிறது.
மகிழ்ச்சி என்பது உள்ளுக்குள் நிறையும் ஒரு உணர்வு என்பதை மறந்து விட்டு அதையும் பொருட்களில் பார்த்தால் தான் திருப்தி வருகிறது. பொருட்களாக இருந்தால் தான், நான் இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பிறருக்கும் காட்ட முடியும் என்றே மனம் எண்ணுகிறது.
நான் அவனுக்கு செய்தேன். ஆனால் அவன் எனக்கு செய்யவில்லை என்ற தவிப்பு பெரும் மனஉளைச்சளை பலருக்கும் ஏற்படுத்துகிறது. 90 சதவீத மக்கள் மனநிறைவு இன்றி தவிப்பதற்குக் காரணம் படிப்போ, பதவியோ, வேலையோ, பொருளாதாரமோ, அல்ல, அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் மனப்பான்மை இல்லாமல் தங்களை தாங்களே இறுக்கமாக்கிக் கொள்வதுதான் என்கின்றன வாழ்வியல் ஆய்வுகள்.
இவர் அரசரா ஆண்டியா என்று பார்க்காமல் ஒருவரின் தேவைக்கு நீங்கள் உதவி செய்தால், அந்த உதவியும் நீங்கள் யாரென்று பார்க்காமல் உங்கள் தேவைக்கு உங்களை வந்தடையும். ஏனென்றால் நீங்கள் யாரோ ஒருவருக்கு செய்யவில்லை. இந்த பிரபஞ்சத்திலிருக்கும் உறுப்பினர் ஒருவருக்கு செய்கிறீர்கள்.
சிறு புன்னகையும், அன்புப் பார்வையும் கனிந்த வார்த்தைகளும், மனம் திறந்த பாராட்டும் கூட நீங்கள் ஒருவருக்கு செய்யும் உதவியாக அமையலாம்.
உண்மையில் நம்மை சுற்றி இருப்பவர்களை நம்பும் போது, அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கும்போது எதிர்பார்ப்பு இல்லாத நேசம் வைக்கும்போது ஒருவருடைய மனமும் உடலும், ஆரோக்யமாகவும் மலர்ச்சியாகவும் இருக்கும்.
Dr. ஃபஜிலா ஆசாத்
Watch "Dr. Fajila Azad" on YouTube