என் ஆற்றலே
எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்
இணைச் சட்டம் 8-17.
நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் ஆண்டவர் நமக்கு அனுமதித்தவை. நம் அறிவு, படிப்பு, பணம், பதவி மக்கள் செல்வம் அனைத்துமே அவர் நமக்கு கொடுத்தது. தண்டியாத தகப்பன் உண்டோ. சில சமயங்களில் நாம் வழி தவறி செல்லும் போது நம்மை நேர் வழிப்படுத்தவும், நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும் சில எதிர்மறையான நிகழ்வுகள் நம் வாழ்வில் நடக்கிறது.
செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை நமக்கு அளித்த நம் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒருவன் தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பதுபோல, கடவுளாகிய ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார் என்பதை உள்ளத்தில் வைக்க வேண்டும் .நாம் விவிலியம் முழுவதுமாக வாசித்தால், ஆண்டவர் ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்களை நெறிபடுத்தியதும், ஆலோசனை சொன்னதும், வழி நடத்தியதும் அவர்களை சுகமாக வாழ செய்ததும் அறியலாம். இராஜக்களையும், இறைவாக்கினர்களையும், திருத்தொண்டர்களையும் , அறிவு புகட்டி, பாதுகாப்பு கொடுத்து நடத்தி சென்றதையும் அறியலாம்.
அதே ஆண்டவர் இன்றும் நம்மை நடத்துகிறார். விவிலியம், மறையுரைகள், என வழிபாட்டு நிகழ்வுகள் மூலமாக நம்மோடு பேசுகிறார். அவர் வழி செல்வோம் . அதிசயங்களை காண்போம்.
ஆண்டவரே உமக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; உம் சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். உம்மையே நம்பி யுள்ளேன். ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் உம்மையே தேடுகிறது.உம் பிள்ளையாக ஏற்று கொள்ளும். அருள் தாரும் ஆமென்.
Daily Program
