உண்மைக்குச் சாட்சியமே கிறிஸ்தவம்! | ஆர்.கே. சாமி | VeriatsTamil

15 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 4ஆம் வாரம் -வெள்ளி

சால.ஞான நூல் 2: 1a, 12-22                                                                                           

யோவான்  7: 1, 2, 10, 25-30
 
முதல் வாசகம் :

பின்புலம்

இயேசுவுக்கு ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன், கிரேக்கர்கள் பாலஸ்தீனாவை  ஆண்ட காலத்தில்  எங்கும் கிரேக்கமயமாக்கும்  கட்டாய சூழல் நிலவியது.   யூதேயாவுக்கு  வெளியே வாழ்ந்து வந்த யூதர்களுள் சிலர் கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டு, வாழ்க்கை முறை முதலியவற்றின் மீது அதிக நாட்டம் கொண்டிருந்தனர். இவர்கள் முன்பு கொண்டிருந்த  யூத சமயத்தைவிட  கிரேக்கர்களின் சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்று போற்றி வந்தனர். அத்தோடு, கிரேக்க வழிபாட்டையும் தெய்வத்தையும் உயர்வாக எண்ணி அதனை வழிபட்டும் வந்நனர். இதனால், மோசே அளித்த திருச்சட்டத்தை மீறினர். சொந்த ‘யாவே' கடவுளை விட்டு விலகிப்போயினர். இவர்களே இன்றைய முதல் வாசகத்தில் இறைப்பற்றில்லாதவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

1.இறைப்பற்றில்லாதவர்கள் - யூதச் சமயத்தை, பண்பாட்டை, மோசேயின் கட்டளைகளை கைவிட்டு கிரேக்க வழிமுறையைப் பின்பற்றியவர்கள்.

2.இறைப்பற்றுள்ளவர்கள் - யூதச் சமயத்தையும், பண்பாட்டையும். மோசேயின் சட்டங்களையும் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

இறைப்பற்றில்லாதவர்கள், இறைப்பற்றுள்ள யாவே கடவுளின் மக்களுக்கு எதிராகத்   தங்களுக்குள் கூறிக்கொண்டவற்றை இன்றைய வாசகம் விவரிக்கறது. இறைப்பற்றில்லாதவர்கள் இறைப்பற்றுடைய மக்கள் மீது கொண்ட சலனம் மற்றும் பொறாமை நிரம்பிய எண்ணம் இதில் வெளிப்படுகிறது.

‘நீதிமான்களை (இறைப்பற்றுள்ளவர்களை) தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள் என்றும்,  திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள் என்றும் ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் என்றும் இறைப்பற்றுக்கொண்ட யூத சமயத்தவர்களைப் பகைத்தனர்.  மேலும்,    இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள் என்றும்  யூதர்களை சாடினர். 

இறைபற்றற்றவர்கள்  சதி செய்தார்களேயொழிய    கடவுளின் திட்டத்தின் ஆழமான செயல்பாட்டைப் புரிந்து கொள்ள அவர்களால் இயலவில்லை.   அவர்களுடைய துன்மார்க்கம் அவர்களைக் குருடாக்குகிறது.    

நிறைவாக, தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்பதையும் இறைபற்றில்லாதவர்கள் நம்பவில்லை; மாசற்ற நீதிமான்களுக்குப் வெகுமதி கிடைக்கும் என்பதைதையும்  உய்த்துணரவில்லை என்று நூலாசிரியர் முடிக்கிறார்.


நற்செய்தி:


இயேசுவுக்குப் பொல்லாத காலம் அது. முதல் வாசகத்தில் தங்களை நீதிமான்கள், இறைபற்றுள்ளவர்கள் என்று  புகழ்ந்துகொண்ட யூதர்கள் இப்போது, இயேசுவை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று வலை விரித்துக்கொண்டிருந்தார்கள். ஏனெனில், இயேசுவின் நீதியான போதனைக்கு முன் அவர்களால் நினைத்தப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்க முடியவில்லை. முதலில்   கூடார விழாவில் பங்குபெற எருசலேமுக்குச் செல்ல வேண்டிய இயேசு, அவர் அங்கே கைதுசெய்யப்படுவார் என்று நினைத்து, சீடர்களை முதலில் அனுப்பிவிட்டு, கலிலேயாவில் இன்னும் இருந்துகொண்டிருந்தார். பின்னர், 
அவர் வெளிப்படையாக அன்றி மறைவாக எருசலேம் சென்றார்.  

எருசலேம் ஆலயத்தில்  போதித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், ‘நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே'' என்றார்.

 
சிந்தனைக்கு:


இவ்வுலக மாந்தரை இறைப்பற்றுள்ளவர் இறைப்பற்றற்றவர் என எளிதாக இரு பிரிவில் அடக்கலாம். இறைப்பற்று உள்ளவர்கள் இறையச்சம் கொண்டு, ஓரளவு நீதி நேர்மையைக் கடைபிடித்து வாழ்வர். இறைப்பற்று அற்றவர்கள் பிறர் மீது குற்றப்பழி சுமத்துவதிலும் நல்லவர்களாக வேடம் போடுவதிலும்  சிறந்து விளங்குவர். இந்த உண்மையை முதல் வாசகம் நமக்குத் தெளிவுப்படுத்தியது. முதல் வாசகத்தில் இறைப்பற்று கொண்ட கடவுளின் பிள்ளைகளான இறைப்பற்றுள்ளவர்கள்  தாக்கப்பட்டனர். அவ்வாறே, நற்செய்தியில் இறைமகன் இயேசுவும் உண்மை மெசியாவை  அடையாளம் கண்டுகொள்ள இயலாத  யூதர்களால் தாக்கப்பட தேடப்பட்டார்.  

இயேசுவின் பொதுப்பணி வாழ்வு தொடங்கிய போதே அவர் மீதான எதிர்ப்பும் தொடங்கியது. மூன்று ஆண்டுகள் இங்கும் அங்குமாக நடமாடிய வண்ணம் இறையரசைப் பற்றிய படிப்பினையை விதைத்து வந்தார். இப்போது, அவரது தொடர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது.   அவரைப் பிடித்தே ஆக வேண்டும்.  இதன் விளைவாக இயேசுவை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இன்றைய வாசகத்தில் காணப்படுகிறது. 

இரண்டு வாசகத்திலும் தீயோரின் உள்ளத்தில் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்க்கிறோம்.  “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே’ என்று இயேசு தனக்கான உண்மை சாட்சிம் பகர்ந்தார். இது   யூதர்களை வெகுண்டெழச் செய்தது.  உண்மை எடுபடவில்லை. 

கிறிஸ்தவம் என்றாலே உண்மைக்கு வாழ்தலாகும். உண்மைக்கு அன்றி வேறெதற்கும் கிறிஸ்தவம் பயன்படாது. யோவான் 18:37-ல், ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்’ என்று இயேசு உறுதிப்பட கூறினர். இன்று இவ்வுலகிற்குத் தேவை ‘உண்மை'. 

உண்மையை உரக்க, கூற வேண்டிய இடத்தில் கூறாமல் அவர் என்ன நினைப்பார்? இவர் என்ன நினைப்பார் என்று பேச வேண்டிய இடத்தில் பேசாமல் முகத்தாட்யன்யம் பார்ப்பதையே  நம்மில் பலர்  விரும்புகிறோம். உண்மையை எடுத்து சொன்னதிற்காக.. போலிகளைச் சுட்டிக்காட்டியதிற்காக தன் தலைபோனாலும் பாதகமில்லை என்று கடைசி வரை அதில் நிலைத்து நின்ற   திருமுழுக்கு யோவானை போல்  வாழ்வதுதான் கிறிஸ்தவம்.

ஒலிப்பெருக்கியைப் பிடித்து முழங்கிப் பேசுவது பெரிதல்ல... கறிஸ்தவத்தை வாழ்ந்து பேசுவதே பெரிது. கிறிஸ்தவம் என்பது கோலாகலமாக வாழ்வதல்ல, கொள்கையோடு வாழ்வது. 


இறைவேண்டல் :

‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி’ என்றுரைத்த ஆண்டவரே, இயேசுவே, உண்மைக்கு சாட்சியம் பகர்வதில்  அச்சமின்றி எனது பணிகளை ஆற்ற தூய ஆவியின் கொடையைத் தந்தருள  உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்.


  
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452