துணிவும் பணிவும் நமதாகட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
11 மார்ச் 2024
தவக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
எசாயா 65: 17-21
யோவான் 4: 43-54
முதல் வாசகம்
பின்புலன்:
இது யூதர்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான வாக்குறுதியை வெளிப்படுத்தும் ஓர் இறைவாக்கு அறிக்கையாகும். எசாயா இறைவாக்கு நூலின் அதிகாரங்கள் 56 - 66 வரை உள்ள பகுதியில் பெரும்பாலானவை பாபிலோனில் அடிமைப்பட்டபின், பாரசீக மன்னனால் விடுவிக்கப்பட்டு, எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டவை. கடவுள் இஸ்ரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது;
1. புதிய வானம் மற்றும் ஒரு புதிய பூமியின் உருவாக்கம்:
வாசகத்தின் தொடக்கத்தில், எருசலேமில் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்கும் நோக்கத்தை இறைவன் அறிவிக்கிறார். இது யூதர்களுக்கான புது வாழ்வு அல்லது அவர்களின் புதுப்பித்தலை உணர்த்துகிறது. கடவுளோடு ஒன்றித்தில்லாமல், அந்நிய தெய்வ வழிபாட்டிலும், இதர சீர்கெட்ட வாழ்வில் கடவுளோடு கொண்ட உடன்படிக்கையை மீறி அவருக்குக் கீழ்ப்படியாமையால் அந்நிய நாடான பாபிலோனில் அடிமைப்பட்டனர், துன்புற்றுப் புலம்பினர். இப்போது நாடு திரும்பி நல்லதொரு வாழ்வை அமைக்க முற்படும் யூதர்களுக்குக் கடவுள் புதிய வானம் புதிய பூமி என புதுவாழ்வு அளிக்கவிருப்பதை எசாயா முன்னுரைக்கிறார்.
2.கடந்த காலத்தை நினைவுகூரமாட்டேன் :
மேலும் பாபிலோனிலிருந்து விடுதலைப்பெற்று வந்த யூதர்களின் கடந்த காலத்தின் அருவறுக்கும் பாவச் செயல்களை இனி நினைவுகூரமாட்டேன் என்று கடவுள் கூறுவதாக எசாயா பதிவுச் செய்துள்ளார்.
இப்பகுதியில், கடவுள் களிகூர்ந்து, ‘நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா என்ற வாக்குறிதியை அளிக்கிறார்.
நற்செய்தி :
இயேசு சமாரியாவை விட்டு சொந்த ஊரான நாசரேத்து உள்ள கலிலேயாவிற்கு செல்கிறார். அப்போது, இறைவாக்கினர் அவரது சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை என்று அவர் ஏற்கனவே கூறியதை நினைவுகூர்கிறார்.
ஆனால், இம்முறை கலிலேயாவில் இயேசுவுக்கு எதிர்ப்பு இல்லை. மக்கள் இயேசுவை வரவேற்கிறார்கள். இதற்கு, எருசலேமில் இயேசு செய்த வல்ல செயல்களை நேரில் பார்த்தவர்கள் இங்கே இயேசுவின் வல்லமையை வெளிப்படுத்தியிருக்கக்கூடும்.
அதிகாரியின் மகனைக் குணப்படுத்துதல்:
அப்போது, கப்பர்நாகூமில் இருந்து ஓர் அரச அதிகாரி இயேசுவை அணுகி, இறக்கும் நிலையில் இருக்கும் தனது மகனைக் குணப்படுத்த வருமாறு வேண்டுகிறார். பிறரைப்போல், இயேசு ஆற்றிய அரும் அடையாளங்கள் மற்றும் வல்ல செயல்களின் அடிப்படையில் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்காமல், இயேசுவின் மீது நம்பிக்கைகொண்ட அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவ்வாறே, மகன் பிழைத்துக்கொண்டார். இதனிமித்தம் அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பத்தொடங்கினார்.
சிந்தனைக்கு:
கடந்த சில நாள்களாக நாம் அறிவது போல், நம் கடவுள் பழிவாங்கும் கடவுள் அல்ல. மனந்திரும்புவோரின் பழைய வாழ்வை நினைவுகூர்ந்து சுட்டிக்காட்டுபவரும் அல்ல. யூதர்களின் கடந்த காலத்தை நினைவுகூரமாட்டேன் என்று கடவுள் அறிவித்ததாக எசாயாவும் கூறுகிறார்.
இவ்வுலகோடு நம் வாழ்வு முடிவு பெறுவதில்லை. இயேசுவைப் போலவே, நாமும் இங்கு பயணிக்கிறோம். விண்ணகத்தில் உள்ள நமது வானகத் தந்தை விடுக்கும் மறுமை வாழ்வை நோக்கிப் பயணிக்கிறோம். இயேசு தம்முடைய தந்தையின் இல்லத்தில் நமக்காக ஆயத்தம் செய்துள்ள இடத்திற்கு நம்மைத் திரும்ப அழைத்துச் செல்ல விழைகிறார். துக்கமோ, நோயோ, மரணமோ இல்லாத இடம் அது.
அந்த அரச அலுவலர் இயேசுவில் கொண்டிருந்த நம்பிக்கை இயேசுவைக் கவர்ந்தது. அந்த அலுவலர் ஒரு புறவினத்தார். எனவே, இயேசுவைக் கண்ணால் பார்த்திராத அரச அலுவலர், இயேசுவால் தன் மகனை நிச்சயம் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு அவரை அண்டி பேசுகிறார். அவரது தாழ்ச்சியும் நம்பிக்கையும் அவருடைய மகனை உயிர்பிழைக்கச் செய்தது.
தொடரந்து, அக்காலத்தில் உரோமை அரச அலுவலர் என்பது ஓர் உயர்ந்த பதவி. மக்களும் அவர்களுக்கு அஞ்சுவர். அத்தகையவர் இயேசுவிடம் பணிந்து வருகிறார், ஆனாலும் துணிவோடு வருகிறார். அவரில் தாழ்ச்சி மிகுந்திருந்தது. அவரது விண்ணப்பதை இயேசு நிறைவேற்றினார்.
அந்த அரச அலுவலர் ஓர் அதிகாரி என்பதால், ஆளனுப்பி இயேசுவை அவரது இல்லத்திற்கு , அழைத்து வர முயற்சித்திருக்கலாம். ஆனால், அவராகவே இயேசுவை தேடி வந்தார். இது அவர் கொண்ட தாழ்ச்சியையும். இயேசு மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் மரியாதையையும் காட்டுகிறது. இயேசுவின் வார்த்தையிலும் அவர் நம்பிக்கை வைத்தார்.
நாமும் அரச அலுவலரைப் போன்று இயேசுவிடம் தாழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டு அவரிடம் வரும்போது, அவரிடமிருந்து ஆசிர்வாதங்களைப் பெறுவோம். அவர் ஒருபோதும் மறுப்பாரில்லை. முதல் வாசகத்தில் பாபிலோனில் கடவுளுக்கு எதிரான தங்கள் குற்றங்களை எண்ணி, புலம்பிய யூதர்களுக்கு ‘புதிய வானத்தையும் புதிய பூமியை’ அருள்வேன் என்று கூறிய கடவுள் மனந்திரும்பினால் நம்மையும் கைவிடமாட்டார்.
கடவுளின் அழைப்பில் நம்பிக்கை வைப்போர் மீட்பு பெறுவர்.
இறைவேண்டல் :
சொந்த ஊரில் புறக்கணிக்கப்பட்ட என் அன்பாரந்த இயேசுவே, என்னில் தாழ்ச்சியும் உம்மில் நம்பிக்கையும் என்னில் என்றும் பெருக்கெடுக்க உதவியருளும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink