அஞ்சுதற்கு மட்டுமுமே அஞ்சுவோம்! | ஆர்.கே. சாமி | VeriatsTamil
28 பிப்ரவரி 2024
தவக்காலம் 2ஆம் வாரம் - புதன்
எரேமியா 18: 18-20
மத்தேயு 20: 17-28
முதல் வாசகம்:
முதல் வாசகத்தில், சதிகாரர்கள் இறைவாக்கினர் எரேமியாவை அழிக்க திட்டமிடுகின்றனர். இதனிமித்தம் அவரது படிப்பினையில் குற்றம் கண்டுபிடிக்க, மக்கள் தூண்டப்படுகிறார்கள். எரேமியா தனது சொந்த மக்களிடமிருந்து எதிர்நோக்கிய விரோதத்தையும் எதிர்ப்பையும் இவ்வாசகப் பகுதி வெளிப்படுத்துகிறது.
மக்களின் சதித்திட்டத்தை அறிந்த எரேமியா இறைவனிடம் மன்றாடுகிறார். அவருக்கு எதிராக திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்து இறைஞ்சுகிறார். அவர்களின் நல்வாழ்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியை நினவுக்கூருமாறு ஆண்டவரிடம் வேண்டுகிறார்.
நற்செய்தி:
நற்செய்தியில், விரைவில் இயேசு எருசலேமில் நிகழவிருக்கும் துன்பங்களையும் மரணத்தையும் முன்னறிவிப்பதுடன், சீடர்களிடையே யார் பெரியவர் என்ற தர்க்கத்திற்குப் பதிலும் அளிக்கிறார்.
இயேசு தனது பன்னிரண்டு சீடர்களையும் ஒருபுறம் அழைத்துச் சென்று, எருசலேமுக்குச் செல்லும் வழியில், அவர்களுடன் தனக்கு நிகழவுள்ள பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்புப் பற்றிய விபரத்தை பகிர்ந்து கொள்கிறார்.
அவர் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படவுள்ளார் என்றும் அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்றும் சீடர்கள் அறிய எடுத்துரைக்கிறார்.
தொடர்ந்து, ஏளனத்திற்கும், கசையடிக்கும், சிலுவை மரணத்திற்கும் புறவினத்தாரிடம் (உரோமையரிடம்) ஒப்படைக்கப்படுவார் என்றும் கூறுகிறார். இருப்பினும், அவர் மூன்றாவது நாளில் மீண்டும் எழுவார் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறார்.
இந்த முன்னறிவிப்பைத் தொடர்ந்து, இயேசுவின் சீடர்களும் செபதேயுவின் மகன்களுமான யாக்கோபு மற்றும் யோவானின் தாயார் இயேசுவை அணுகி, தனது இரண்டு மகன்களுக்கு, ஒருவர் அவருடைய வலது புறத்திலும் மற்றவர் இடது புறத்திலும் இயேசுவின் அரசில் மரியாதைக்குரிய இடத்தை வழங்க வேண்டும் என்று கோருகிறார்,
அதற்கு இயேசு மறுமொழியாக, “என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது அவரது விருப்பம் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
அவருடைய அரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் அவர்களுள் தொண்டராய் இருக்க வேண்டும் என்றம் அவர்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அவர்களுக்குப் பணியாளராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இது சீடர்களுக்கு ஒரு சவாலாகவே அமைகிறது.
சிந்தனைக்கு:
கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் விதைக்கும் பணியில் எதிர்ப்பை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு நற்பணியாற்றும்போது எதிரிகளின் சூழ்ச்சிகளையும் சதித்திட்டங்களையும் எதிர்கொள்ள சீடர்கள் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இயேசு எடுத்துரைக்கிறார்.
ஆம், இயேசுவின் சீடர்களின் பணி வாழ்க்கையில் எதிர்ப்பு அலைகள் இருப்பதும் அவற்றுக்கு எதிராப் போராட வேண்டிய சூழல் எழுவதும் தவிர்க்க முடியாத ஒன்று என்று இயேசு முன்னறிவிக்கிறார்.
இறைவாக்கினர் எரேமியா மற்றும் திருத்தூதர்கள் அனைவரும் அழைக்கப்பட்டதைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.
எனவே, எரேமியாவைப் போன்றும் இயேசுவைப்போன்றும் நாம் நற்செய்தி அறிவிப்புப் பணியில் எதிர்ப்பைச் சந்தித்தாக வேண்டும். நமக்கு நெஞ்சில் உறுதி வெண்டும் என்பதை நற்செய்தி உறுதிப்படுத்துகிறது.
பாரதியாரின் ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்ற பாடல் நமக்கே எழுதப்பட்டதாக உள்ளது. இயேசுவும் ‘அஞ்சாதீர்கள்' என்றுதானே முழங்கினார்.
நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும், அடுத்திருப்பவர்களுக்கான நற்பணி சேவைக்கும் துணிவு இன்றியமையாதது. இத்துணிவை நமக்கு தரவல்லது இயேசுவுடனான சந்திப்பு. திருபாடலில், ‘ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்’ (தி.பா. 16:8) என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டவரின் உடனிருப்பில் நாம் அஞ்சத் தேவையில்லை.
எதிர் காற்று இருந்தால்தான் பட்டம் உயரே செல்லும். திருத்தூதர்கள் உரோமையர் ஆட்சியில் வேதகலாபனைகளை எதிர்கொண்டனர். ஆனால் அவர்கள் முடங்கிவிடவில்லை. அவர்கள் கடமையில் முன்னோக்கிச் சென்றார்கள். மற்றதை கடவுளிடம் விட்டுவிட்டார்கள்.
இத்தவக்காலப் பயணத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நாம், இறைப்பணியில் துன்பத் துயரங்களைச் சந்திக்கும் துணிவு மிக்கவர்களாக விளங்க அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்:
‘அஞ்சாதீர்’ என்று என்னை அடிக்கடி ஊக்கமூட்டும் ஆண்டவரே, இறைபணியில் பிறர் பழிச்சொல்லால் நான் துவண்டு போகும் வேளையில், என்னை அரவணைத்து ஊக்கமூட்டுவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452