பழைய இலைகள் உதிரட்டும், புதிய துளிர்கள் தோன்றட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
21 பிப்ரவரி 2024,
தவக்காலம் முதல் வாரம் -புதன்
யோனா 3: 1-10
லூக்கா 11: 29-32
முதல் வாசகம்
யோனா ஒரு புகழ்பெற்ற இறைவாக்கினர் என்பது நாம் அறிந்த ஒன்று. இறைமகன் இயேசு தன்னோடு ஒப்பிட்ட ஒரே ஓர் இறைவாக்கினர் இந்த யோனா தான் எனும் சிறப்பு இவருக்கு உண்டு. ‘யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்’ (மத்.12:40) என்றார்.
கடவுள் யோனாவை இறைவாக்கினராகத் தேர்ந்துகொண்டார் என்பது வரலாறு. கடவுள் அவரை அசீரியாவின் தலைநகர் நினிவே மாநகருக்குச் சென்று, அங்கு மக்களுக்கு நிகழவுள்ள அழிவைக் குறித்து எச்சரிக்கை செய்யுமாறு பணித்தார். யோனா அவரது அழைப்பை ஏற்காமல், தப்பி ஓட எண்ணி தர்சீசுக்குச் செல்லவிருந்த ஒரு கப்பலில் ஏற்றினார். ஆனால், கடவுள் கடலில் பெருங்காற்று வீசச் செய்ததால், பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இறுதியாக, அந்நிலை ஏற்பட யோனாதான் காரணம் என்றறிந்து, அவரை கடலில் தூக்கி எறிய, கொந்தளிப்பும் தணிந்தது.
அப்போது, கடவுளின் ஏற்பாடு படியே பெரிய மீன் ஒன்று யோனாவை விழுங்கியது. யோனா, மூன்று நாள்கள் பகலும் இரவுமாக அதனுள் இருந்தார். பின்னர், அந்த மீன் அவரை கரையில் கக்கிய போது, கடவள் அவரை நினிவே மாநகருக்குச் சென்று அந்நகர் மக்களுக்கு நிகழவுள்ள அழிவைக் குறித்து போதிக்க அழைத்தார்.
இம்முறை யோனா ஓர் இறைவாக்கினராக அங்கு சென்று, ஒரு நாள் முழவதும் நடந்து திரிந்து, நினிவே அழிக்கப்படவுள்ளதை அறிவித்தார். அரசனும் தன் அரியணையை விட்டிறங்கி, மக்களோடு மக்களாக தவம் இருந்தார். நிறைவாக, அழிவு பயம் மிகவே, நினிவே மக்கள் தங்களையும் தங்கள் நிலத்தையும் அழித்துவிடாதபடி கடவுளிடம் மன்றாடினார். கடவுள் மனமிரங்கி நினிவே நகரத்திற்குத் திட்டமிடப்பட்ட அழிவை நிறைவேற்றவில்லை.
நற்செய்தி.
"இந்த தலைமுறை ஒரு தீய தலைமுறை" என்று, இயேசு தம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் கூறுகிறார். அந்த தீய தலைமுறை ஓர் அடையாளத்தைத் தேடுகிறது என்றும், அவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படாது" என்று உறுதியாக தெரிவிக்கிறார். இயேசு தனது அதிகாரத்திற்கு சான்றாக மக்கள் அவரிடமிருந்து அற்புதங்கள் அல்லது அடையாளங்களைக் கோருகிறார்கள் என்று அவர் அறிந்திருந்தார்.
பின்னர் அவர்களுக்கான ஒரே அடையாளமாக யோனாவுக்கு நிகழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். அவர் பழைய ஏற்பாட்டு நிகழ்வை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
தன்னை யோனாவுடன் ஒப்பிடுகையில், இயேசு தனது சொந்த வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை அவரது கால மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்று எடுத்துரைக்கிறார். தொடர்ந்து, பழைய ஏற்பாட்டில் சாலமோன் மன்னரின் ஞானத்தைக் கேட்கப் வந்த சேபா நாட்டு அரசியை இயேசு குறிப்பிடுகிறார். அவள் சாலமோனின் ஞானத்தைக் கண்டுக்கொண்டது போல், எதிர்காலத் தீர்ப்பின் போது, அவளும் மற்றவர்களும் இயேசுவிடம் இருக்கும் பெரிய ஞானத்தை யூதர்கள் அறிந்து அங்கீகரிக்காததற்காக அந்த தலைமுறையை கண்டிப்பார்கள் என்று அவர் எச்ச்சரிக்கிறார்.
சிந்தனைக்கு.
மேலே குறிப்பட்டதைப்போல, யோனாவின் அறிவிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் நினிவே மக்களின் மனந்திரும்புதலை இயேசு குறிப்பிடுகிறார். அவர்கள் மனந்திருப்பினார்கள், வாழ்வடைந்தார்கள். இறைவனின் எச்சரிக்கை செய்தியையும், அவரது பணியாளரான யோனாவையும் நினிவே மாநகர் மக்கள் அங்கீகரித்தார்கள். ஆனால், இயேசுவின் தலைமுறையில் இருப்போர், மனந்திரும்பாமல் இருப்பதைக் கண்டு இயேசு வேதனையுறுகிறார்.
ஆம், ஒரு தனி மனிதனாகவும், மனித இனத்தின் ஒரு பகுதியாகவும், மீண்டும் மீண்டும் ஆண்டவராகிய இயேசுவிடம் திரும்பவும், பாவத்தை ஒப்புக் கொள்ளவும், கடவுளின் மன்னிப்பைத் தேடவும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் இருந்து வரும் ‘மன்னிப்பை நாம் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, உடனடியாக இறைவேண்டல், நோன்பு, தர்ம செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது இன்றியமையாதது.
புனித திருமுழுக்கு யோவான் கூறுவதைப்போல், நாம் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டவேண்டும். இல்லையேல், இத்தவக்காலத்தில் நாம் ஏற்கும் அனைத்துத் தவமுயுற்சிகளும் வீண். நினிவே மக்கள் தங்கள் தவமுயற்சியின் வெளிப்பாடாக மனமாறி கடவுள் பக்கம் திரும்பினர்.
அவர்களைப் போல, நமது பழைய வாழ்வின் இலைகள் எல்லாம் உதிர்ந்தால் மட்டுமே, இறைவனோடு கூடிய புதிய வாழ்வின் புத்தம்புதிய துளிர்கள் தோன்றும். இல்லையேல் ஆன்மாவுக்கான அழிவுக்கு நாமே வழிவகுக்கிறோம். ஏனெனில், ‘நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்’ (எசா 1:27) என நமக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. எனவே, ‘வாழ்வு’ என்பது ஆண்டவர் கையில் அல்ல... நம் கையில் உள்ளது.
இறைவேண்டல்.
பாவச் சுமையால் சோர்ந்திருக்கும் என்னை அழைக்கும் ஆண்டவரே, இத்தவக்காலத்தின் பலனை நான் அடைந்து, என்னில் புதிய வாழ்வின் துளிர்களோடு நான் மீண்டுவர எனக்கு மனவலிமை தாரும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452