மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள் | ஆர்.கே. சாமி | VeritasTamil
25 ஏப்ரல் 2024
பாஸ்கா 4 ஆம் வாரம் - வியாழன்
முதல் பேதுரு 5: 5b-14
மாற்கு 16: 15-20
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகமானது, மற்றவர்களுடனான நமது தொடர்பில் இருக்க வேண்டிய பணிவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. துன்புறுத்தல் மற்றும் சோதனைகளை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்திற்கு புனித பேதுரு எழுதுகிறார். "மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள்" என்ற அவரது வார்த்தைகளில், அவர் தனது வாசகர்களுக்கு பணிவின் மேன்மையை நினைவூட்டுகிறார், அவர்கள் மற்றவர்களுடன் நடந்துகொள்வதில் தாழ்மையுடன் இருந்தால், கடவுள் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார், துன்ப காலங்களில் கூட அவர்களை உயர்த்துவார் என்று உறுதிபட கூறுகிறரார்.
இரை தேடும் கொடூரமான மிருகம் போல் அலகை சுற்றித்திரிகிறது. நாம் கடவுளுக்கு உண்மையாக இருந்தால், நாம் துன்புற்றாலும் நம்மை அவர் அதிலிருந்து மீட்டெடுத்து, திடப்படுத்தி, நம்மை மாண்போடு வாழவைப்பார் என்று அறிவுறுத்துகிறார் திருத்தூதர் பேதுரு.
நற்செய்தி.
இன்றைய மாற்கு நற்செய்தியின் முடிவில், இயேசு தமது திருத்தூதர்களுக்குக் கொடுத்த இறுதிக் கட்டளையைப் பற்றி கேட்கிறோம். உலகம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்க அவர்களை அனுப்புகிறார். ‘இயேசுவின், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்” எனும் தமது மீட்புப் பணியின் தொடர்ச்சியை ஒரு கட்டளையாக வழங்கியதை மாற்கு குறிப்பிடுகிறார்
அடுத்து, மாற்கின் குறிப்பின்படி, நம்பிக்கை கொண்டோர் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று இயேசு உறுதியாக வெளிப்படுத்தியதையும் நனது நற்செய்தியில் எழுதியுள்ளார்.
இன்றைய நற்செய்தியின் முத்தான செய்தி யாதெனில் இயேசு, அவர்கள் முன்னே விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார் என்பதாகும்.
சிந்தனைக்கு.
இன்று திருஅவை நற்செய்தியாளர் புனித மாற்குவின் விழாவைக் கொண்டாடுகிறது. திருத்தூதர் பணிகள் நூலிலும் சில திருமுகங்களிலும் "மாற்கு" மற்றும் "மாற்கு யோவான்" பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். புனித மாற்கு அக்காலத்தில் உரோமையர் ஆட்சியின் கீழ் இருந்த நவீன லிபியாவின் சிரேனைக்காவில் பிறந்தவராக நம்பப்படுகிறது. “யோவான்” என்பது அவருடைய யூதப் பெயர். “மாற்கு” என்பது அவருடைய உரோமைப் பெயர்.
நற்செய்தியாளர் லூக்காவின் குறிப்பின்படி, மாற்கு எருசலேமில் வாழ்ந்த மரியா (திப 12: 12-16) என்பவருடைய மகன். இவருடைய குடும்பம் நல்ல வசதிப்படைத்த குடும்பம் என்றும் கூறலாம். ஒருமுறை சிறையில் இருந்த பேதுரு அற்புதமாக தப்பித்து வந்தபோது மாற்குவின் இல்லத்தில்தான் அடைக்கலம் புகுந்தார் என அறிகிறோம்.
அடுத்து, மாற்கு கி.பி. 46 ஆம் ஆண்டு பவுல் அடிகள் மேற்கொண்ட முதலாவது திருத்தூது பயணத்தில் உடன் சென்றார். ஆனால் பெர்கே என்ற நகரில் பவுலுக்கும் மாற்குவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாற்கு தனியாகப் பிரிந்துபோனார் என்உ லூக்கா குறிப்பிடுகிறார்.
மாற்கு திருத்தூதராகிய பேதுருவுடன் நெருக்கமாக இருந்ததாகத் தோன்றுகிறது, ஏனெனில் பேதுரு அவரை "என் மகன் மாற்கு" (1 பேதுரு 5:13) என்று பல கிறிஸ்தவ சமூகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இது, மாற்கு அந்த சமூகங்களுக்கும் நன்கு தெரிந்தவர் என்பதைக் குறிக்கிறது. மாற்கு உரோமையில் பேதுருவுடன் இருந்தபோது, பேதுருவின் வேண்டுகோளின் பேரில், பேதுரு ஆற்றிய மறையுரைகளின் அடிப்படையில் அவர் தனது நற்செய்தியை எழுதியிருக்கக்கூடும் என்று துணிந்து கூறலாம்.
தொடர்ந்து, பவுல் அடிகள் இவரைக் குறித்து குறிப்பிடும் போது “என்னுடைய பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்” (2 திமோ 4:11) என்று குறிப்பிடுகின்றார். தொடர்ந்து, தனது நற்செய்தியைப் பேதுரு, பவுல் போன்ற திருத்தூத்தர்கள் உரோமையில் கொல்லப்பட்டதற்குப் பின் தொகுத்து எழுதினார் என்பது வரலாறு.
நிறைவாக, மாற்கு திருமுழுக்கு யோவானை ‘பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரலாக’ விவரிப்பதால் இவரது நற்செய்திக்கு ‘சிங்கம்’ சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம்.
மாற்குவின் மரணம்.
புனித மாற்கு அலெக்ஸ்சாண்ட்ரியாவில் நற்செய்தி போதிக்கும் வேளையில் எதிரிகளால் தெருவெங்கும் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கேயே மறைசாட்சியாக உயிரைவிட்டார். இவரது நினைவு நாளான இன்று திருஅவைக்கான இவரது தியாகத்தை மனதில் நிறுத்தி வேண்டுவோம்.
இறைவேண்டல்.
உமது அமைதியை எங்களுக்கு விட்டுச் சென்ற ஆண்டவரே, உமது நற்செய்திக்காக உயிர் தியாகம் செய்த உம் அடியார் புனித மாற்குவைப் போன்று நானும் நீரே ஆண்டவராகிய மெசியா என்பதை எடுத்துரைக்கும் வல்லமையையும் துணிவையும் அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink