கிறிஸ்துவே நம்பிக்கையின் மையம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
20 ஏப்ரல் 2024
பாஸ்கா 3ஆம் வாரம் - சனி
தி. பணிகள் 9: 31-42
யோவான் 6: 60-69
முதல் வாசகம்.
தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் துன்புறுத்தல்கள் பெருகிய போதிலும், திருஅவை தொடர்ந்து வளர்ந்து வந்தது. இதில் திருத்தூதர் பேதுருவின் பங்கை இன்றைய வாசகம் விவரிக்கிறது. பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒருநாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார் என்று மீண்டும் பேதுரு பக்கம் கவனத்தைத் திருப்புகிறார் லூக்கா.
இங்கே, பேதுரு எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரை, இயசுவின் பெயரால் குணப்படுத்தினார். பேதுரு தனது சொந்த சக்தியால் அதைச் செய்ததாக நடிக்கவில்லை. ஆனால் அது கிறிஸ்துவின் செயல் என்று அறிவிக்கிறார். இவ்வாறாக, தொடக்கத் திருஅவை காலம் தொட்டு கிறிஸ்துவே நமது நம்பிக்கையின் மையமாக செயல்படுவதை திருஅவை வலியுறுத்தி வருகிறது.
‘யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார்’ என லூக்கா குறிப்பிடுகிறார். யோப்பா என்பது யாக்கோப்பின் மகன் ‘தாண்’ குலத்தினர் வாழ்ந்த பகுதியில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினமாகும். இங்கிருந்துதான் இறைவாக்கினர் யோனா தர்சீசுக்குப் கப்பல் வழி புறப்பட்டார் என்பது வரலாறு. (யோனா 1:3)
தபித்தா கனிகள் நிறைந்த மரத்தைப் போல தனது நற்செயல்களால் சிறந்து விளங்கினாள். இயேசுவின் சீடரான தபித்தா கல்கத்தாவின் புனித அன்னை திரேசா போன்று ஒரு சிறந்த செயல் வீரர்.
‘உடல்நலம் குன்றி ஒருநாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல் மாடியில் கிடத்தியிருந்தனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
அச்சமயம் பேதுரு யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, “எங்களிடம் உடனே வாருங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார்கள். அவர்கள் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரை லித்தாவில் பேதுரு குணப்படுத்தியது தெரிந்திருக்கலாம்.
ஆகவே, நல்மனம் கொண்ட தபித்தாவை பேதுரு உயிர்ப்பிக்கக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவரை அழைத்தார்கள். யோப்பாவிற்கு விரைந்த பேதுரு, அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, “தபித்தா, எழுந்திடு” என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார்.
நற்செய்தி.
இயேசுவின் ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்ற போதனை இன்றும் தொடர்கிறது. ஒத்தமை நற்செய்தியாளர்கள் அளிக்காத ‘வாழ்வு தரும் உணவு' பற்றிய இயேசுவின் படிப்பினையை யோவான் தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறார்.
இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றி கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, தம் சீடர்களில் பலர் இயேசுவின் போதனையைப் புரிந்துகொள்ளாமல் முணுமுணுப்பதையும் களைந்து போவதையும் பார்த்த இயேசு, குழுமியிருந்த சீடர்களிடம் “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது என்றார்.
பின்னர் இயேசு தம் பன்னிருவரிடம் நீங்களும் வெளியேற விரும்புகிறீர்களா என்று கேட்டார். உடனே, பேதுரு முந்திக்கொண்டு, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்று உறுதிபட கூறினார்.
சிந்தனைக்கு.
இயேசுவிடம் நம்பிக்கை கொள்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம். இயேசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இன்றைய நற்செய்தியில்கூட, அவருடைய படிப்பினையில் நம்பிக்கை இல்லமால் புறப்படுபவர்களை இயேசு திரும்ப அழைக்கவில்லை. அவர் “ஓ, நான் உருவகமாக மட்டுமே பேசினேன். நீங்கள் உண்மையில் என் உடலைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்க வேண்டியதில்லை’ என்று சொல்லவில்லை. இயேசு அவர்களை போக விடுகிறார்.
அவருடைய உடலையும் இரத்தத்தையும் - வாழ்வளிக்கும் அப்பம் மற்றும் மீட்பின் இரத்தம் என்பதற்கான அவருடைய அழைப்பையும் கட்டளையையும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தம்மைப் பின்பற்றுவதை இயேசு விரும்பவில்லை. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே, என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” ( யோவான் 14:6) எனும் இயேசுவின் முழக்கத்தில் முழு நம்பிக்கை கொள்பவர்களே இயேசுவின் உண்மையான உறுதியான சீடர்கள். மாறாக, கடமைக்காக நாக்கை நீட்டி நற்கருணை பெறுபவர்கள் எல்லாரும் அவரது உண்மை சீடர்களாக இருந்துவிட முடியாது.
பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று இயேசு கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என்று பதில் அளித்தவர் அவரோடு அவருக்காக இறுதிநாள் வரை திருஅவைக்காகவும் சாட்சிய வாழ்வுக்காகவும் போராடியதை முதல் வாசகத்தில் அறிந்தோம்.
இன்றும் கூட நற்கருணை இயேசுவின் திருவுடல் என்பதில் நம்பிக்கைக்கொண்டு வாழும் கத்தோலிக்க மக்களை பலர் குழப்புவதுண்டு. இத்தகையக் குழப்பவாதிகள் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காமல், ‘ஒரு சாதாரண அப்பத்துண்டில் எப்படி இயேசு இருப்பார்?’ என்று ஐயம் கொள்ள வைக்கிறார்கள். ‘கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்பதை ஏற்கும் மக்கள் அவர் சிறு அப்பத்துண்டில் இருக்கிறார் என்பதை நம்ப மறுக்கிறார்கள். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.
இயேசுவே ஆண்டவர் என்று கூறிக்கொண்டு அதிகமானோர் நாளுக்கு நாள் சுய ஆதாயம் தேடிக்கொள்ள புறப்பட்டுள்ளார்கள். நற்கருணையில் இயேசு இல்லை என்று நம்பச் சொல்பவர்கள் சாத்தானின் கையாள்கள். தனது நம்பிக்கையில் தெளிவாக இருக்கும் ஒருவரின் மனதில் பல்வேறு கேள்விகளை கேட்டு அல்லது சந்தேகங்களை எழுப்பி குழப்பி, அவர்களை தன்வசம் திருப்ப நினைப்பது குட்டையை குழப்பி மீன் பிடித்தலுக்கு ஒப்பான ஓன்று. அதனால் குழப்பவாதிகள் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.
இறைவேண்டல்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே” என்று எங்களுக்கு உணவாக மனுவுருவான ஆண்டவரே, எந்நாளும் உம்மை ஆர்வத்தோடு நாடி வரவும், உமது உடனிருப்பில் மகிழ்ந்திருக்கவும் எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452