இறக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நம் ஒவ்வொருவரின் இதயமும் தினமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவரின் இதயமும் இயங்காமல் இயக்கத்தை நிறுத்திவிட்டால் வாழ்வின் இறுதி மூச்சே நின்று போய்விடும். இதயம் இயங்குவது என்பது நாளும் நடைபெறுகிறது. ஆனால் துடிப்பது என்பது என்றாவது ஒரு நாள் நடைபெறுகிறது என்பது தான் உண்மை. அதுவும் நமது இதயம் ஒரு சிலருக்காக மட்டுமே பல சமயங்களில் துடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மை அன்பு செய்பவர்களுக்காகவும், நாம் அன்பு செய்பவர்களுக்காகவும் மட்டுமே நமது இதயம் துடிக்கிறது. ஆனால் நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களின் துயரம் கண்டு நமது இதயம் துடிக்கிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. மற்றவர்களின் வேதனைகளை கண்டு நமது இதயம் துடிக்கவில்லையென்றால் நமது வேதனைகளை கண்டும் மற்றவர்களின் இதயமும் துடிக்க வாய்ப்பில்லை. ஆறறிவில்லாத உயிரினங்கள்கூட தனது இனம் துயரப்பட்டால் அதை காக்க வேண்டும் என்று துடிக்கிறது. அப்படியிருக்க மனிதர்களாகிய நமது இதயம் மற்றவர்களுக்காக துடிக்க வேண்டுமல்லவா? துன்பம் கண்டு துடிக்கவில்லையென்றால் நாம் ஒவ்வொரும் ஊனமுற்றவர்தான். எனவே மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுக்க நம்மை பயிற்றுவிப்போம். 
பிறரது வேதனை கண்டு துடிக்கும்போது மட்டுமே நாம் ஒவ்வொருவரும் பண்பாளர்களாக மாறுகிறோம். எனவே பண்புகளால் செழிக்காத மனிதர் பணத்தினால் செழிப்பது வளர்ச்சியல்ல வீழ்ச்சியே என்பதை புரிந்து கொண்டு பண்பாளர்களாக நம்மை உருவாக்குவோம். இன்றைய காலக்கட்டத்தில் நான் உண்டு, என் வேலை உண்டு, என்னை யாரும் தொந்தரவு செய்யாதவரை நானும் யாரையும் தொந்தரவு செய்யப் போவதில்லை என்ற மனநிலையுடன்தான் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய மனநிலை நம்மில் தொடர்ந்து கொண்டே இருந்ததென்றால் நாம் வளர்ச்சிப் பாதையை அடைவதற்கான வாய்ப்பில்லை. 
ஒரு முறை, மூன்று இளைஞர்கள் அடிபட்டு பலத்த காயத்துடன் சாலையோரமாக கிடந்தார்கள். பலமாக அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஏற்கெனவே ஆம்புலன்சில் ஏற்றியிருந்தனர். ஓர் இளைஞனின் முகம் மட்டும் சாலையில் புதைந்து கிடந்தது. அந்த இளைஞனையும் வண்டியில் ஏற்றிக்கொள்ளும்படி காவலர் சொன்னபோது அந்த ஊழியர், அது பாடி சார், ஏத்திட்டுப் போனாலும் வேஸ்ட்தான் என்று பொறுப்பின்றி, துடிப்பின்றிப் பதிலளித்தார். அந்தக் காவலரின் வற்புறுத்தலால் தூக்கிய அந்த இளைஞனை ஏற்கெனவே வலியால் துடித்துக் கொண்டிருந்த இன்னொரு இளைஞன்மீது தூக்கிப் போட்டார். புது இருக்கையில் போட்டால் இரத்தக்கறை படியும். அதை நான் தான் சுத்தம் செய்யவேண்டி வரும் என்று காரணமும் சொன்னார். அந்த விபத்தின் கோரத்தைவிட அந்த ஊழியரின் வார்த்தைகளிலும் செயலிலும் மிகுந்திருந்த கோரம் வேதனைக்குரியது என்பதை இங்கு புரிந்து கொள்ள முடிகிறது. மனிதர்களாகிய நாம் உயிருள்ளவர்கள் என்பதை உணர்ந்து கொண்டு நம்மைப் போல் மற்றவர்களையும் நேசிக்க நம் மனதை பழக்கப்படுத்துவோம்.

துன்பம் கண்டு துடிக்கவில்லையென்றால் நாம் ஒவ்வொரும் ஊனமுற்றவர்தான். எனவே மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுப்போம்.