புனிதர்களைப் பின்பற்றி, உங்கள் உன்னதப் பணியைத் தொடருங்கள்! | Veritas Tamil
"ஒருவரின் புனிதத்தை அங்கீகரிக்க அசாதாரண மறையுண்மை நிகழ்வுகள் அவசியமில்லை, ஆனால் மிக முக்கியமானது, திருவிவிலியத்திலும், பாரம்பரியத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கடவுளின் விருப்பத்திற்கு இணங்குவதாகும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"இறையியல் சிந்தனை, மறையுரை மற்றும் மறைக்கல்வி போதனைகள் மூலம், திருஅவை பல நூற்றாண்டுகளாக மறையுண்மை வாழ்க்கையின் மையத்தில் கடவுளுடனான அன்பின் நெருக்கமான ஒன்றிப்பின் விழிப்புணர்வு இருப்பதை அங்கீகரித்துள்ளது" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 13, வியாழக்கிமையன்று, இறை ஒன்றிப்பு நெறி : இயல்தோற்ற மெய்மை மற்றும் புனிதம் (Mysticism: Mystical Phenomena and Holiness) என்ற தலைப்பில் இடம்பெறும் புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத் துறை மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
"மறையுண்மை அனுபவங்களுக்கும் புனிதத்திற்கும் இடையிலான உறவு குறித்த இந்த முக்கியமான மாநாட்டின் இறுதியில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறிய திருத்தந்தை, இறை ஒன்றிப்பு நெறி என்பது நமது இறை நம்பிக்கையின் மிக அழகான பரிமாணங்களில் ஒன்றாகும், அதைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்த உதவியதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்" என்றும் தெரிவித்தார்.
“இயேசு நமக்கு நற்செய்தியில் கற்பிப்பதுபோன்று, மறையுண்மை வாழ்க்கையின் மையத்தில் கடவுளுடனான அன்பின் நெருக்கமான ஒன்றிப்பு உள்ளது, இது நல்ல கனிகளைத் தரும் ஓர் அருள்” என்று குறிப்பிட்ட திருத்தந்தை, “இறை ஒன்றிப்பு நெறி (Mysticism) என்பது ஓர் ஆன்மிகக் கொடை, அது நாம் சம்பாதித்த ஒன்றல்ல, மேலும் அது தோற்றங்கள் அல்லது இருளின் காலங்கள் போன்ற பல்வேறு வடிவங்களை எடுக்கலாம்” என்றும் எடுத்துக்காட்டினார்.
"இருப்பினும், இந்த நிகழ்வுகள் இரண்டாம் பட்சமானவை - அவை புனிதத்தின் அடையாளங்களாக இருக்கலாம், ஆனால் அவசியமானவை அல்ல" என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, "புனித அகுஸ்தினார் கூறுவது போன்று, உண்மையான குறிக்கோள் என்பது கடவுளுடன் ஒன்றிணைவதாகும்" என்று உரைத்தார்.
"ஒருவரின் புனிதத்தை அங்கீகரிக்க அசாதாரண மறையுண்மை நிகழ்வுகள் அவசியமில்லை, ஆனால் மிக முக்கியமானது, திருவிவிலியத்திலும், பாரம்பரியத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கடவுளின் விருப்பத்திற்கு இணங்குவதாகும்" என்று விளக்கினார் திருத்தந்தை.
திருஅவையின் பணி, இந்த நிகழ்வுகளை கவனமாகத் தெளிந்து தெரிந்து, மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, அவை உண்மையான புனிதத்தன்மையுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதாகும் என்று விவரித்த திருத்தந்தை, புனித அவிலா தெரசா கற்பிப்பது போல, உண்மையான முழுநிறைவு என்பது நமது விருப்பத்தை கடவுளின் விருப்பத்துடன் இணைத்து, இனிப்பு மற்றும் கசப்பு இரண்டையும் ஏற்றுக்கொள்வதில் உள்ளது என்றும் மொழிந்தார்.
புனிதர் பட்டத்திற்கான ஆட்களை ஆய்வு செய்வதில், கடவுளுடனான ஆழமான ஒன்றிப்பின் வெளிப்பாடான அவர்களின் வீரத்துவ பண்புகள் மற்றும் புனித்துவத்திற்கான நற்பெயரில் நாம் கவனம் செலுத்துகிறோம். ஆகவே இத்துறையில் பணிபுரியும் நீங்கள், புனிதர்களைப் பின்பற்றி, இந்த உன்னதப் பணியைத் தொடரவும், திருஅவையின் வாழ்க்கைக்கு பங்களிக்கவும் அழைக்கப்படுகிறீர்கள் என்றும் கூறினார் .
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்