திருத்தந்தை ஆற்றிய "நம்பிக்கை ஒரு பயணம்" நூல்
பயணம் என்பது நமக்கு நன்மை பயக்கக் கூடியது. இது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதோடு நம்மை இணைக்கிறது, நம்மைச் சுற்றியுள்ள எதார்த்தத்தின் ஒலிகள், வாசனைகள் மற்றும் இரைச்சல்களைக் கண்டறிய உதவுகிறது, குறிப்பாக அது நம்மை மற்றவர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது என்று உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 6, இப்புதனன்று, நம்பிக்கையின் இறையியல் நற்பண்பு பற்றி திருத்தந்தை ஆற்றிய பல உரைகளின் தொகுப்பாக வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்ட "நம்பிக்கை ஒரு பயணம்" என்ற புதியதொரு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, நம்பிக்கை என்பது நம்மை கடவுளை நோக்கி நடத்தும் பயணம் என்று கூறியுள்ளார்.
தான் Buenos Aires-இல் அருள்பணியாளராக இருந்தபோதும், தனது சொந்த ஊரில் ஆயராகப் பணியாற்றியபோதும் சக அருள்பணியாளர்களைச் சந்திக்கவும், பல்வேறு துறவறக் குழுமங்களைப் பார்க்கவும் அல்லது நண்பர்களுடன் உரையாடவும் பல்வேறு சுற்றுப்புறங்களில் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அதனைப் பெரிதும் விரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பயணிப்பது என்பது அசையாமல் இருப்பது என்பது அர்த்தமல்ல. நம்பிக்கை என்பது "மேலும்" எதையாவது நோக்கி நம்மைத் தள்ளும் துறுதுறுவென இருக்கும் தன்மையைக் (restlessness) கொண்டிருப்பது, இன்று அடைய வேண்டிய உயரத்தை நோக்கி இன்னும் ஒரு படி முன்னேறுவது, கடவுளுடனான நமது உறவில் நாளை இந்தப் பாதை நம்மை உயரமாக அல்லது ஆழமாக அழைத்துச் செல்லும் என்பதை அறிந்து கொள்வது என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன் அடிப்படையில், 2025 -ஆம் ஆண்டின் யூபிலி, நம்பிக்கையின் இன்றியமையாத பரிமாணத்துடன், நம்பிக்கை என்பது ஒரு புனிதப் பயணம் மற்றும் இந்தப் புவியில் நாம் அனைவரும் திருப்பயணிகள் என்பதை நோக்கி எப்போதும் அதிக விழிப்புணர்வுக்கு நம்மைத் தள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.நாம் சுற்றுலாப் பயணிகளோ அல்லது நோக்கமின்றி அலைந்து திரிபவர்களோ அல்ல. இருத்தலியல் பேசும் வகையில் நாம் இலக்கில்லாமல் நகரவில்லை. நாம் அனைவரும் திருப்பயணிகள். ஒரு திருப்பயணி என்பவர் தனது பயணத்தை மூன்று முக்கிய வார்த்தைகளின் ஒளியில் வாழ்கிறார் அவை : அபாயத் தேர்வு, முயற்சி மற்றும் இலக்கு என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளை அடையும் நமது பயணம் இன்னும் முடிவுபெறவில்லை; நாம் இன்னும் அவரை அடையவே இல்லை. நாம் எப்போதும் பயணத்தில்தான் இருக்கிறோம், எப்போதும் அவரைத் தேடுகிறோம். ஆனால் துல்லியமாக கடவுளை நோக்கி நமது இந்தப் பயணம்தான், அவருடைய ஆறுதலையும் அருளையும் நமக்கு வழங்க அவர் காத்திருக்கிறார் என்று உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.