கர்வாரில் கிறித்தவ நலத்திட்ட விழிப்புணர்வுப் பட்டறை. | Veritas Tamil

கர்வாரில் கிறித்தவ நலத்திட்ட விழிப்புணர்வுப் பட்டறை அரசு நலத்திட்டம் குறித்து விளக்கம்!

கர்வார், நவ. 27: கர்நாடகக் கிறித்தவ மேம்பாட்டு

கழக லிமிடெட் சார்பில், கிறித்தவச் சமூகத்திற்கான அரசு நலத்திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வுப் பட்டறை கர்வாரின் புனித சதனில் நடைபெற்றது. இதில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வழிகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

அக்கழகத்தின் மாநில உறுப்பினர் பிரகாஷ் ஜட்டன் இந்த விழிப்புணர்வு பட்டறையை வழிநடத்தினார். அப்போது, பல்வேறு அரசுத் திட்டங்களின் நோக்கம், நன்மைகள் மற்றும் நடைமுறைப் பயன்பாடு குறித்து விரிவாக விளக்கிக்கூறினார். மறைமாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பட்டறை முழுவதும், கிறித்தவச் சிறுபான்மையினருக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து வல்லுநர்கள் விரிவான விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர். தகுதி விதிமுறைகள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அலுவலகங்கள், தேவையான ஆவணங்கள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டன. பின்னர்,

பங்கேற்பாளர்கள் முன்வைத்த சந்தேகங்களுக்கு அதிகாரிகள் தெளிவான பதில்களை வழங்கினர்.

கர்வார் மறைமாவட்ட ஆயர் மேதகு டுமிங் டயஸ், இந்தப் பயனுள்ள வழிகாட்டுதலுக்காக பிரகாஷ் ஜட்டனுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், பட்டறையை ஒருங்கிணைத்த சுஹாஸ் மற்றும் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் ஆயர் அவர்கள், "இன்னமும் சிரமத்தில் உள்ள மக்களை அடையாளம் கண்டு, இந்த வாய்ப்புகளை அவர்கள் பெற உதவுவது நமது பொறுப்பு" என அவர் ஊக்கமளித்தார். பட்டறை முடிவில் நலத்திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.