மே மாத விடுமுறை | Summer Holidays | Veritas Tamil

மே மாதம் பிறந்துவிட்டால் பள்ளியில் படிக்கும் கொண்டாட்டம்தான். ஒரு மாதம் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்ட வுடன் அவர்கள் மனத்தில் குதூகலம் கொண்டாடும். அவர்களது உள்ளம் வண்ணத்துப் பூச்சிகள்போல வட்டமிட்டுப் பறந்து விளையாடும், 'எங்கே உல்லாசப் பயணம் போகலாம்?' என அம்மா - அப்பாவிடம் கேட்டு நச்சரிப்பார்கள். வேலைக்குப் போகிற பெற்றோர்கள் என்றால், 'இவர்களை எப்படிக் கோடை விடு முறையில் சமாளிப்பது?' எனத் திட்டம் போடுவதில் மும்முரமாக இருப்பார்கள். ஆனால், அந்தக் காலத்தில் ஒரே வழிதான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கோடை விடுமுறையில் தம் சொந்த ஊருக்கு அனுப்பி விடுவார்கள். தாத்தா-பாட்டி அரவணைப்பில் சிறிது நாள்கள் வாழ அங்கே அனுப்பிவிடுவார்கள். வீட்டைப் பராமரிக்கும் தாயாக இருந்தால், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்று விடுவதுண்டு.

பிள்ளைகளுக்கு அந்தச் சொந்த ஊர் பயணம் ஒரு சொர்க்கமான பயணமாக இருந்தது. பல மதிப்பீடுகளையும் வாழ்க்கை எதார்த்தங்களையும் கற்றுக் கொடுக்கும் பாசறையாக இருந்தது. பொதுவாகச் சொந்த ஊர் என்பது ஒரு கிராமமாக இருக்கும். தாத்தா-பாட்டி மற்றும் சொந்தங்கள் கூடி வாழும் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருக்கும்.

சுதந்திரமாக ஓடி விளையாடுவதற்குப் பரந்த நிலப்பரப்பு கொண்டது கிராமம். கிராமங்களின் பசுமை கண்களில் ஒட்டிக்கொள்ளும். அந்தச் சிலிர்ப்பு அழகிய அனுபவமாக இருக்கும். அது அவர்களுக்கு இயற்கை அழகை இரசிக்கக் கற்றுக் கொடுத்தது. ஒலிக்கும் குயில்களின் சத்தம் இசையை நேசிக்கச் சொல்லிக் கொடுத்தது. குளத்தில் குளியலாடி, நீச்சல் கற்றுக்கொள்ள ஒரு நல்ல களமாக இருந்தது. தானாக எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தது. ஆற்றின் கரை தொட்டு பயமின்றி நீரில் கால் நனைத்து, பயத்தை வெற்றிக்கொள்ளச் சொல்லிக் கொடுத்தது. மரத்தின் அடியில் பல்லாங்குழி ஆட் டம் ஆடி, நம் கலாச்சாரப் பொழுதுபோக்கை அப்பருவத்தில் அறிமுகம் செய்தது.

வண்ணத்துப் பூச்சி பிடித்து, வரப்புகளில் நடந்து, விழுந்து, எழுந்து, தோல்வியில் எப்படி மீண்டு எழுவது எனப் பயிற்சி கொடுத்தது. கேழ்வரகு, நெற்கதிர் கசக்கி உண்டு, கரும்புச் சாறு பிழிந்து குடித்து, தென்னை மரத்தின் அடியில் இளநீர் குடித்து, நொங்கு தின்றது... இவை இயற்கை உணவின் ருசியை இரசிக்கச் செய்த அனுபவங்கள். நிலாச்சோறு உண்டு, மலர் பறித்துத் தேன் உறிஞ்சி, மழையில் நனைந்து உடல் சிலிர்த்து, இரவில் குளத்தில் நிலா பிம்பம் கண்டு, நிலவைக் கையில் பிடித்த அனுபவம் மனதிற்குள் இருந்த கலை உணர்வைத் தூண்டி யது. பட்டம் விட்டு வான்தொட்ட பெருமிதம் குழந்தைகளின் மனங்களில் 'வானமே எல்லை' என்ற நம்பிக்கை விதையை விதைத்தது. கிராமங்களில் புதிய உறவு கள், புதிய நட்புகள் அறிமுகம், குழந்தைகள் மத்தி யில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'எல்லாரும் நம் சொந்தம்' என்ற மனப்பான்மையில் எல்லாரையும் உள்வாங்கிக்கொள்ளும் மனத்தை உருவாக்கும்.

தாத்தா-பாட்டிகளின் அரவணைப்பு, கிராம மண்வாசனை, எதார்த்தமான எளிய மக்களின் வாழ்க்கை, இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஓர் அழகிய அனுபவம். நம் கலாச்சாரத்தின் வேர்களின் மணங்களை நுகர்ந்த அனுபவம். இப்படியாக ஒரு முழுமையான சிறப்பு மிக்க அனுபவம் குழந்தை களின் வலுவான மதிப்பீடுகளுக்கு அடித்தளமாக இருந்தது.

இந்த அனுபவங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பல ஆயிரங்கள் செலவழித்தாலும் இந்த அனுபவத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், இன்றைய சூழலில் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த அனுபவங்கள் சாத்தியமா? என்றால் சந்தேகமே. இன்றைய சூழலில் குடும்பத் தில் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில், இந்தக் கோடை விடுமுறை, சொந்த ஊர் பயணம் கடினமே. படிக்கின்ற இடத்திலேயே பலவிதமான கோர்ஸ், ட்ரைனிங் எனக் கோடை விடுமுறைகள் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கும் கோடை விடுமுறையாக மாறிபோனது வருத்தம் அளிக்கிறது.

அந்தக் காலக் கிராமச் சூழல் கொடுத்த அனுபவம் மீண்டும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும். சுதந்திரமாய் ஆடி, ஓடி, மகிழ்ந்து பல ஆளுமைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்த களமாய் அமைந்தது அந்தக் கிராமியக் கோடை விடுமுறை என்றால் மிகையாகாது.

நம் வாழ்க்கை வேர்களின் பிரதேசங்களை நம் குழந்தைகளுக்கு அவ்வப்போது காட்டுவது, பழமையில் புதுமையைக் காணும் ஓர் உன்னதமான திசையைக் காட்டும்.